ஒரு ட்வீட் மத்திய பா.ஜ.க. அரசுக்குத் தலைவலியைக் கொண்டுவந்துள்ளது. அத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்துடனான உறவில் விரிசலை ஏற்படுத்துமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரச்சனைக்குக் காரணமான ட்வீட்டுக்குச் சொந்தக்காரர் கர்நாடகாவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா. அடிப்படையில் வழக்கறிகஞரான தேஜஸ்வி கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்தவர். ஆனால் இப்போது பிரச்சினைக்குக் காரணமாகியிருக்கும் ட்வீட், முன்பே அதாவது 2015-ல் ட்வீட் செய்தது.
அப்படி ட்வீட்டில் என்ன சொல்லியிருக்கிறார்…
95 சதவிகித அரபுப் பெண்கள் கடந்த சில நூற்றாண்டுகளாக ஆர்கசமே அடைந்ததில்லை. ஒவ்வொரு அரபுத் தாயும் அன்பின் அடையாளமாக இல்லாமல் செக்ஸ் செயல்பாட்டின் விளைவாக குழந்தைகளை ஈன்றிருக்கிறார்கள் என தாரேக் பத்தா என்ற கனடிய- பாகிஸ்தானிய எழுத்தாளரின் கருத்தைத்தான் சொல்லியிருக்கிறார். கூடவே அவரது கருத்தில் தனக்கு முழு உடன்பாடு எனத் தனி ட்வீட்டும் செய்திருக்கிறார்.
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பார்களே அப்படித்தான்… ஒரிஜினலாக அந்த ட்வீட்டை வெளியிட்ட நேரத்தில் எதுவும் நடக்கவில்லை. கடந்த வருடம் தேர்தலில் நின்றபோது, எதிர்க்கட்சிகள் முஸ்லிம்களுக்கு எதிரான தேஜஸ்வியின் ட்வீட்டுகளைத் தோண்டி வெளியிட்டதில் இந்த ட்வீட்டும் அடக்கம். அப்போதும் எதுவும் நடக்கவில்லை. கடந்த ஏப்ரல்-19 ஆம் தேதி சமூக ஊடகத்தில் தேஜஸ்வியின் இதே ட்வீட் எடுத்தாளப்பட்டு, விமர்சனங்கள் எழுந்தன.
ஏற்கெனவே உலகமே ஊரடங்கில் இருக்கும் நிலையில், அரேபியாவின் முக்கிய வர்த்தகர்களில் ஒருவரான நூரா என்பவர் பார்வையில் பட்டிருக்கிறது இந்த ட்வீட். அவர் ட்விட்டரில் தேஜஸ்வியின் ட்வீட்டைக் குறித்து, இந்தியாவைச் சில தலைசிறந்த பெண் அரசியல் தலைவர்கள் ஆட்சி செய்திருந்தபோதும் பெண்களின் மீதான மரியாதை உங்களிடம் இல்லை. உங்கள் வளர்ப்பு குறித்து வருந்துகிறேன். ஒருவேளை எதிர்காலத்தில் உங்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டாலும் அரபு நாட்டுக்குப் பயணம் வந்துவிடாதீர்கள். நீங்கள் இங்கு வரவேற்கப்படமாட்டீர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் எனப் பதிலடி தந்திருக்கிறார்.
அரபு அரச குடும்பம் வரை இந்த விவகாரம் சென்று சேர்ந்திருக்கிறது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர்,
மரியாதைக்குரிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, இந்தியா- அரபு அமீரகத்திற்கு இடையான உறவு பரஸ்பரம் மரியாதையுடன் திகழ்ந்துவந்திருக்கிறது. உங்களது பாராளுமன்ற உறுப்பினர் இப்படிப் பொதுவெளியில் எம் தேசப் பெண்களை அவமதிப்பதை அனுமதிக்கிறீர்களா… எனச் சூடாகக் கேள்வியெழுப்பினார்.
இதையடுத்து, தேஜஸ்வி தனது ட்வீட்டர் பக்கத்திலிருந்து சர்ச்சைக்குரிய ட்வீட்டை நீக்கினார். அவரது ஆதரவாளர்கள் அது பழைய ட்வீட், தவிரவும் தேஜஸ்வியின் சொந்தக் கருத்தல்ல. வேண்டுமென்றேதான் இந்த ட்வீட் தற்சமயம் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
மாறாக, அவருக்கு எதிரானவர்கள் தேஜஸ்வியின் பழைய ட்வீட்டுகளைப் புரட்டினால் முஸ்லிம்களுக்கு எதிரான அவரது மனோபாவம் வெளிப்படும். ஒரு விஷயத்துடன் உடன்பாடு இருப்பதனால்தானே அதை ட்வீட் செய்கிறார். முன்னால் பதிவிட்டது என நழுவிக்கொள்ள முடியாது என்கிறார்கள்.
விஷயம் வெகுசூடாக மாறுவதையடுத்து ஏப்ரல் 20-ஆம் தேதி பிரதமரின் ட்விட்டர் கணக்கிலிருந்து, “கோவிட்-19 வைரஸ் ஒருவரைத் தாக்குவதற்கு முன் இனம், மதம், நிறம், ஜாதி, மொழி, எல்லை எதையும் பார்ப்பதில்லை. எனவே ஒற்றுமையையும் சகோதரத்துவத்துவத்தையும் நோக்கியதாக நமது செயல்பாடு அமையவேண்டும்.” என ட்வீட் செய்தார். ஆனால் பிரதமரின் பதில் போதுமானதல்ல என்ற முணுமுணுப்புக் கிளம்பியிருக்கிறது.
இது ஒருபுறமென்றால், இந்தியாவிலிருந்து அரபு நாடுகளில் வேலைபார்க்கும் இந்தியர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும். இவர்கள் எத்தனையோ துயர்களை அனுபவித்து சம்பாதித்து தன் குடும்பத்துக்கும் இந்தியப் பொருளாதாரத்துக்கும் பங்களித்து வருகிறார்கள். ஆனால் அரபு நாடுகளில் வேலை பார்த்துக்கொண்டே சில விஷமிகள் இஸ்லாமியர்களுக்கு எதிரான பதிவுகள் வெளியிடுவதை அரபு நாடு சமீபமாகக் கவனித்துக் கொண்டுதான் வந்தது.
அவை எல்லைமீறிப் போனதையடுத்து இத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்களைக் கைதுசெய்து சிறையிலடைத்தும், இந்தியாவுக்குத் திரும்ப அனுப்பியும் பதில் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருக்கிறது. மேலும் தம் நாட்டில் இருந்துகொண்டே இத்தகைய விஷமப் பதிவுகளை வெளியிடுபவர்களைக் உற்றுக்கவனிக்கத் தொடங்கியுள்ளது.
அரபு தேசம் பொதுவாக இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை. குஜராத் கலவரத்தின்போதோ, சமீபத்திய தேசிய குடியுரிமை சட்டத்தின்போதோ இந்தியாவை விமர்சிக்கவோ, எதிர்ப்புத் தெரிவிக்கவோ செய்யாத நாடு ஐக்கிய அரபு அமீரகம். ஆனால் சொந்த நாட்டு பெண்களையும், அவர்களது தேசத்தில் ராமர் கோவில் கட்டுவோம் போன்ற வீண்வம்பு பதிவுகளையும் அவர்கள் அங்கீகரிக்கத் தேவையில்லை.
ஐக்கிய அரபு தேசம் தன் நாட்டுப் பணிகளுக்காக இந்தியர்களையும், பாகிஸ்தானியர்களையும் நம்பியிருந்த காலம் மலையேறிவிட்டது. ஒருசில விஷமிகளால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு பாதிக்கப்பட்டால் அதில் இந்தியாவுக்குதான் அதிக நஷ்டம் இருக்கும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.