'பேட்ட', ரஜினி ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே எடுக்கப்பட்ட படம். அவ்வகையில் தன் கடமையை செவ்வனே செய்திருக்கிறது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நல்ல திரைப்படங்களைத் தரக்கூடியவர். இப்போது மசாலா மரணமாஸ் படங்களைத் தருவதிலும் வல்லவர் என்பதை காட்டியிருக்கிறார். 'மரணமாஸ்... மரணமாஸ்' என்கிறார்களே, அது என்ன என்பதையும் கச்சிதமாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மரணமாஸ் என்றால் என்ன? எல்லோருக்கும் தெரியும். ஆனால், இதுதான் என்று யாரும் வரையறுத்து சொன்னதாகத் தெரியவில்லை. சிலர் ‘பஞ்ச் டயலாக்’ பேசுவது மாஸ் என்று நினைக்கிறார்கள். சிலர், கதாநாயகன் பத்து ஆட்களை அடித்து தூள் பறத்துவது என்று நினைக்கிறார்கள். சிலர் அசத்தலான, அலட்டலான நடிப்பு என்று நினைக்கிறார்கள். ஆனால், கார்த்திக் சுப்புராஜ் அதன் நாடித்துடிப்பைச் சரியாகப் புரிந்துகொண்டுள்ளதோடு, படத்தின் ஒரு காட்சியில் அதை மிகத் துல்லியமாக குறிப்பிட்டும் காட்டியிருக்கிறார்.
ரஜினியும் விஜய் சேதுபதியும் முதன்முதலாகச் சந்திக்கும் காட்சியில், ரஜினி விஜய் சேதுபதியை மடக்கி நாற்காலியில் உட்கார வைக்கிறார். விஜய் சேதுபதி ரஜினியை நோக்கி, “மாஸு” என்கிறார். 'மாஸ்' எனப்படுவது என்ன என்பதை இக்காட்சியில்தான் கார்த்திக் சுப்புராஜ் கனகச்சிதமாக, இரத்தினச் சுருக்கமாக குறித்துக்காட்டியிருக்கிறார். அதாகப்பட்டது, 'மாஸ்' எனப்படுவது யாதெனின், கதாநாயகன் வில்லனை சாமர்த்தியமாக மடக்கி காட்டுவது – out smart செய்வது. அதைச் சற்று பெரிய அளவில் அட்டகாசமாக செய்தால் 'மரணமாஸ்'. மாஸ், மரணமாஸ் குறித்த அறிவுப்பூர்வமான வரையறை இவ்வளவுதான். பஞ்ச் டயலாக் பேசுவது, பத்து பேரை அடித்து தூள் கிளப்புவது, ஸ்டைல் செய்து காட்டுவது, தங்கச்சி சென்டிமெண்ட், நண்பனுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பது, நீதிக்குத் தலை வணங்குவது, இவை எல்லாமும் இதற்கு உட்பட்டதுதான்.
கதாநாயகன் வில்லனை out smart செய்யவேண்டிய தேவை என்ன? மரணமாஸ் ஏன் முளைக்கிறது?கதாநாயகன் பலசாலிதான். ஆனால் அவனிடத்தில் பலவீனங்கள் உண்டு. தங்கச்சி பாசம், காதல், நட்பு, நீதி - நியாயத்திற்குக் கட்டுப்படுவது போன்றவைதான் அவனுடைய பலவீனங்கள். வில்லன் கதாநாயகனை காட்டிலும் பலவீனமானவன்தான். ஆனால், அவனுக்கு மேலே சொன்ன பலவீனங்கள் எதுவும் கிடையாது. எந்த நியதிக்கும் கட்டுப்படாதவன் அவன். அதுவே அவனுக்கு அளவில்லாத பலத்தைத் தந்துவிடுகிறது. ஆகையால், அவன் கதாநாயகனை விட பலசாலியாக ஆகிவிடுகிறான். மூர்க்கமான பலத்தோடு, வெல்லமுடியாத சக்தியாக உருப்பெற்றுவிடுகிறான்.
வெல்லமுடியாத சக்தியாகத் தோன்றும் வில்லனை, தன்னைக் கட்டுப்படுத்தும் பலவீனங்களை இழந்துவிடாமல் முறியடித்து வெற்றி பெறவேண்டிய கட்டாயம் கதாநாயகனுக்கு ஏற்பட்டுவிடுகிறது. ஒன்று, கதாநாயகன் தன் முழு பலத்தையும் திரட்டி வில்லனோடு நேருக்கு நேர் மோதி அழிக்கவேண்டும். அது வாழ்வா சாவா போராட்டம். அல்லது, தனது புத்திசாலித்தனத்தால், சற்றும் எதிர்பாராத கோணத்தில் வில்லனை தாக்கி அழிக்கவேண்டும். பலம் அல்லது புத்திசாலித்தனம் ஏதாவது ஒன்றால், கதாநாயகன் வில்லனை out smart செய்தே ஆகவேண்டும். மாஸ் – மரணமாஸ் படங்கள் அனைத்திற்கும் இதுதான் பொது நியதி, அடிச் சரடு. “பேட்ட” படத்திலும் இந்த அடிச்சரட்டைக் கதையில் தொய்வு ஏற்பட்டுவிடாமல் சுவாரசியமாக நகர்த்தி சென்று, மீண்டும் செய்துகாட்டியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
தன்னைவிட பலமடங்கு பலமான சக்தியாக உருவாகிவிட்ட வில்லனையும் அவனது மகன் கதாபாத்திரமாக வரும் விஜய் சேதுபதியையும் இந்த 'மாஸ்' ஃபார்முலாவின் மூலம் out smart செய்து முறியடிக்கிறார் கதாநாயகன் ரஜினி. விஜய் சேதுபதியை தன் மகன் என்று நம்ப வைக்கிறார். விஜய் சேதுபதியையும் நம்ப வைக்கிறார், பார்வையாளர்களையும் நம்ப வைக்கிறார். விஜய் சேதுபதியைத் தன் பக்கம் சேர்த்துக்கொண்டு, வில்லனை அவன் கோட்டைக்குள் புகுந்தே தாக்கி அழிக்கிறார்.
க்ளைமாக்சில் தான் விஜய் சேதுபதியை தன் மகன் என்று சொன்னது, வில்லனை முறியடிக்கச் செய்த `ராஜ தந்திரம்` என்ற உண்மையை ரஜினி வெளிப்படுத்துகிறார். விஜய் சேதுபதி அதிர்ச்சியில் உறைந்து கல்லாய் சமைந்திருக்க, பார்வையாளர்களுக்கும் எதிர்பாராத திருப்பத்தினால் ஆச்சரியம். ஆனால், அந்த ஆச்சரியத்தை அதன் இயல்பான முடிவிற்கு கொண்டுசென்றுவிடாமல், அதாவது, ரஜினி விஜய் சேதுபதியை கொல்கிறாரா இல்லையா என்பதை காட்டிவிடாமல், ரஜினி காமிராவை நோக்கி துப்பாக்கியை நீட்ட, படக்கென்று கட் செய்து, சாமர்த்தியமாக படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர். இப்படி “விட்ட குறை தொட்ட குறையாக” படத்தை முடித்திருப்பதால் பார்வையாளர்களுக்கு எந்தக் குழப்பமும் ஏற்பட வாய்ப்பில்லை. மாறாக, முழுத் திருப்தியே கிடைத்திருக்கும்.
'மக்கள் திலகம்' என்று பெயரெடுத்த எம்ஜிஆருக்கு பிறகு, 'மக்கள் செல்வன்' என்ற பட்டப் பெயரைப் பெற்றிருப்பவர் விஜய் சேதுபதி. அவர் திரையில் கொல்லப்படுவதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை தெளிவாக உணர்ந்தே இயக்குனர், படத்தை அப்படி முடித்திருக்கிறார் என்று கருதலாம். ஒருவேளை இயக்குனர் 'பேட்ட 2' என்று அடுத்த படத்தைத் தருவதற்கான முத்தாய்ப்பாகக் கூட அவ்வாறு முடித்திருக்கலாம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இந்த 'விட்ட குறை தொட்ட குறை' முடிவு மற்றொரு திரைப்படத்தை நினைவிற்கு கொண்டுவந்துவிடுகிறது. 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்து 1979 ஆம் ஆண்டு வெளிவந்து சக்கை போடு போட்ட 'நான் வாழவைப்பேன்' என்ற திரைப்படம். திரைப்படத்தின் கடைசி 20 நிமிடங்களில்தான் ரஜினிகாந்த் படத்தில் தோன்றுவார். ஆனால், திரைப்படம் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம், ரஜினிகாந்த் வரும் அந்தக் கடைசி 20 நிமிடங்கள்தான். இளையாஜாவின் அருமையான பின்னணி இசையில், நான்கு ஹிட் பாடல்களும் உண்டு.
அந்தக் கால கட்டத்தில், சிவாஜி கணேசன், தொப்பையை மறைக்க, எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் கோட் போட்டே நடித்துக்கொண்டிருந்தார். மார்க்கெட்டைத் தக்க வைக்க, இளம் கதாநாயகிகளான லட்சுமி, ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா போன்றவர்களுடன் ஜோடி சேர்ந்து மரத்தைக் கட்டிப் பிடித்து டூயட் பாடல்களில் சிவாஜி கணேசன் நடித்துக்கொண்டிருந்த காலமது. இளம் கதாநாயகிகளோடு ஜோடி சேர்ந்து நடித்த பிறகு, அடுத்த கட்டமாக, வளர்ந்து கொண்டிருந்த புதிய கதாநாயகர்களைத் துணைக் கதாபாத்திரங்களாக நடிக்க வைக்கும் படலமும் சிவாஜி கணேசனுக்கு ஆரம்பமானது. அவ்வாறான முதல் படம் “ஜஸ்டிஸ் கோபிநாத்“. அதில் சிவாஜி கணேசனுக்கு மகன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த்.
அடுத்த படம்தான் 'நான் வாழவைப்பேன்'. 1978 -இல் ரஜினிகாந்தின் ஹிட் 'ப்ரியா'. 1979 -இல் ரஜினிகாந்தின் மெகா ஹிட் படங்கள், 'குப்பத்து ராஜா', 'தாயில்லாமல் நானில்லை', 'தர்ம யுத்தம்', 'ஆறிலிருந்து அறுபது வரை', 'அன்னை ஓர் ஆலயம்'. அதே ஆண்டு ரஜினிகாந்தும் கமலும் சேர்ந்து கொடுத்த மெகா ஹிட், 'நினைத்தாலே இனிக்கும்'. 1980 இல் ரஜினிகாந்த்தின் மெகா ஹிட் 'பில்லா'.
40 வருடங்கள் உருண்டோடிவிட்டன.
இப்போது ரஜினிகாந்த் 1979-இல் சிவாஜி கணேசன் இருந்த நிலைக்கு வந்திருக்கிறார். தன்னை விட மிகவும் வயது குறைந்த இளம் கதாநாயகிகளோடு ஜோடி சேர்ந்து டூயட் பாடி முடித்து, அடுத்த கட்டமாக, வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களைத் துணைக் கதாபாத்திரமாக இணைத்துக்கொள்ளும் கட்டத்திற்கு வந்திருக்கிறார்.
1979 –இல் சிவாஜி கணேசனுக்கு ரஜினியை போல, 2019 -இல் ரஜினிகாந்துக்கு விஜய் சேதுபதி. அதனால்தானோ என்னவோ படத்தின் ஆரம்பத்திலிருந்தே சிவாஜி கணேசன் நடித்த “பாவ மன்னிப்பு” படத்திலிருந்து “வந்த நாள் முதல் இந்த நாள் வரை” பாடலை பின்னணி இசையாக கொண்டு படம் தொடங்குகிறது. “புதிய பறவை”-படத்திலிருந்து “உன்னை ஒன்று கேட்பேன்” பாடலும்கூட.
கடைசியாக, படம் 'முள்ளும் மலரும்' படத்திலிருந்து “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே“ என்ற பாடலை நினைவு கூர்ந்து முடிகிறது. அப்படத்தில் ரஜினி நடித்த 'காளி' கதாபாத்திரம் தமிழ் சினிமா வரலாற்றில் முத்திரை பதித்த ஒரு பாத்திரம். ஆனால், அதன் சிறப்பு முழுக்க முழுக்க, அப்படத்தின் இயக்குனர் மகேந்திரனுக்கே உரியது. அத்தகைய ஒரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்த மதிப்பு ரஜினிக்கு உண்டு என்பதையும் மறுக்க முடியாது. அக்காலத்தில், ரஜினிகாந்த் 'சூப்பர் ஸ்டாராக' உருப்பெற்றிருக்கவில்லை. நல்ல நடிகராக இருந்தார். நன்றாக நடித்துக்கொண்டிருந்தார். அவர் 'சூப்பர் ஸ்டாராக' உருமாறியது ஒரு வகையில் தமிழ் சினிமாவிற்கு இழப்பு.
ரஜினிகாந்த் 'சூப்பர் ஸ்டாராக' மாறி 20 ஆண்டுகள் கழிந்து, ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு அதை தூக்கி நிறுத்த கார்த்திக் சுப்புராஜ் போன்ற திறம் மிக்க இயக்குனர் தேவைப்படுகிறார். என்றாலும் அது 100 சதவிகிதம் சாத்தியமில்லை, அதுதான் நிதர்சனம். மகேந்திரனே நினைத்தாலும் அது சாத்தியமில்லை. 'காளி', சூப்பர் ஸ்டாருக்கு முந்தையவன்.
கட்டுரை ஆசிரியரை தொடர்பு கொள்ள...
(mathi2006@gmail.com)