Skip to main content

இந்தியா திரும்பிய காந்தி.. கையில் எடுத்த முதல் போராட்டம்...?

Published on 25/01/2019 | Edited on 25/01/2019
gandhi


என்ன இருக்கிறது அஹிம்சையில்? அது ஒரு வெற்று வழியான போராட்டக்குணம்! அச்சம் உள்ளவர்கள் அதை கையாளலாம், வீரம் நிறைந்த நாம் அதைப் பின்பற்றலாமா? காந்தியால் நூறாண்டுகளில் பெறப்பட்ட விடுதலை; சுபாஷ் சந்திரபோஸ் வழியில் சென்றிருந்தால் அரை நூற்றாண்டில் பெற்றிருக்கலாம். இதுதான் பொதுவாக மக்கள் மனதில் இருக்கும் கருத்து. காந்தியின் அறவழி போராட்டமும், சுபாஷ் சந்திரபோஸின் போர்முனை போராட்டமும், ஒன்றுக்கு ஒன்று சளைத்ததில்லை. இரண்டுமே சமம்தான். ஆனால் கத்தி முனையைவிட  பேனா  முனை கூர்மையானது. அதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது என நம்புகிறேன். அதனால் காந்தியை பற்றிய நமது கருத்து எதுவாய் இருந்தாலும் அதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு. அறவழி என்ன செய்தது என்று கொஞ்சம் பார்ப்போம்.
 

மகாத்மா காந்தி, இந்த பெயர் எப்பொழுதெல்லாம் உச்சரிக்கப் படுகிறதோ அப்பொழுதெல்லாம் முரண்களைக் கடந்தபடியேதான் பேச வேண்டியிருக்கும். இது இவருக்கு மட்டுமில்லை, சாதாரண மனிதரை எடுத்துக்கொண்டாலும் இதுதான் நிதர்சனம். எப்பொழுதும் ஒரு மனிதருக்கு இரண்டு பக்கங்கள் இருக்கும். வரலாறும் அந்த இருபக்கங்களையும் பிணைத்துதான் ஒரு மனிதனை தன்னுள் எழுதிக்கொள்ளும். மகாத்மாவையும் அது அப்படிதான் எழுதி வைத்திருக்கிறது. இந்த தொகுப்பு மகாத்மா என்பவர் எந்த பக்கம் இருக்கிறார் என்பதைக் காட்டப்போவதில்லை. மாறாக அவரின் முதல் சத்தியாகிரகத்தையும், மகாத்மாவால் முதலில் கையாளப்பட்ட அறப்போரைப்  பற்றியும் ஒரு சிறிய முன்னோட்டத்தை தரப்போகிறது.
 

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நிலப் பிரபுத்துவம் உயர்ந்த இருந்த தருணம்.  பிஹாரில் உள்ள சம்பாரண் மாவட்டத்தில், அவுரி என்னும், துணிகளுக்கு சாயம்போட உதவும் செடியைதான் வளர்க்க வேண்டும் என்று பிரிட்டிஷார் கட்டளை இட்டிருந்தினர். அவுரி துணி ஐரோப்பியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் விளைவிப்பதில் 75% பிரிட்டிஷ் அரசுக்கு கொடுக்க வேண்டும். இதனால் அந்த மாவட்ட விவசாயிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தனர். அதே காலகட்டத்தில் 1915 ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியிருந்தார் காந்தி. அவர் இந்தியா வந்ததும், நாடு முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். 1916 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 'லக்னோ' நகரத்தில் நடைப்பெற்ற காங்கிரஸ் மாநாட்டில் காந்தி கலந்துகொண்டார். அங்குதான் ராஜ்குமார் சுக்லா என்னும் சம்பாரண் விவசாயி, காந்தியை முதன்முதலில் சந்தித்து அவர்கள் படும் துயரத்தைப் பற்றி எடுத்துச்சொல்லி, காங்கிரஸ் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றார். அதற்கு காந்தி "நான் நேரில் வந்து பிரச்சனை என்னவென்று பார்க்காமல் எதுவும் செய்ய முடியாது" என்றார். அதன் பிறகு பல பேச்சுவார்த்தைகளுக்கு பின் காந்தி நிச்சயம் ஒருநாள் தான் வருவதாய் ஒப்புக்கொண்டார். ஆனால் அவ்வளவு எளிதில் காந்தி அங்கு செல்லவில்லை. வெகுநாட்கள் பின்தொடர்ந்த ராஜ்குமார் சுக்லா காந்தியை 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 அன்று சம்பாரண் பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கிருந்த விவசாயிகளை சந்தித்து பேசிய காந்தி, அவர்களின் குறைகளை எல்லாம் இனம் கண்டார். இது குறித்து தோட்ட முதலாளிகள், சங்கத் தலைவர்களை சந்தித்து பேசினார். இதனை எல்லாம் தெரிந்துகொண்ட அந்த ஜில்லா மாஜிஸ்திரேட் 'காந்தி உடனடியாக  சம்பாரணை விட்டு வெளியே செல்ல வேண்டும்' என்றார். அதற்கு காந்தி 'இவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு பெறாமல் நான் வெளியேற மாட்டேன், அதற்காக சிறை சென்றாலும் மீண்டும் வெளியே வந்து இவர்களுக்கான தீர்வு காண்பேன், அதுவரை நான் இங்கேயேதான் இருப்பேன்" என்று தெரிவித்தார். பெருந்திரளான விவசாயக்கூட்டம் அவருக்குப்பின் நின்றதால் நீதிமன்றம் பின்வாங்கியது.
 

காந்தி சம்பாரண் மாவட்டத்தின் கிராமங்களுக்கு எல்லாம் சென்று அவர்களின் குறைகளை பதிவு செய்தார் மொத்தம் 8,000 விவசாயிகளின் பதிவை தன் கையில் வைத்திருந்தார். இந்த நடவடிக்கைகளை எல்லாம் கவனித்துக்கொண்டு இருந்த லெஃப்டினெண்ட் கவர்னர் 'சர் எட்வர்டு கெய்ட்' ஜூன் 4 அன்று காந்தி ராஞ்சியில் தன்னை சந்திக்கவேண்டும் என்று சம்மன் அனுப்பினார். அதனை ஏற்ற காந்தி தன் கையில் வைத்திருந்த விவசாயிகளின் சாட்சிகளோடு காந்தி ஜூன் 4ல்  'சர் எட்வர்டு கெய்டை' சந்தித்தார். பிறகு அதன் மீது விசாரணை நடைபெற்றது அதைத் தொடர்ந்து ஜூன் 13 ஒரு விசாரணைக் குழுவை அறிவித்தார் 'சர் எட்வர்டு கெய்ட்'. அதில் காந்தியும் இடம் பெற்றிருந்தார். கடைசியாக அக்டோபர் 3 அன்று அந்தக் குழு இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் பிறகு 1918 மே மாதம் அந்த மசோதாவிற்கு லெஃப்டினெண்ட் கவர்னர் 'சர் எட்வர்டு கெய்ட்' ஒப்புதல் அளித்தார்.

 

 

Next Story

“கல்விக்காக சரஸ்வதி எதையும் செய்யவில்லை” - புகைப்படம் வைக்க மறுத்த ஆசிரியர் மீது அதிரடி நடவடிக்கை

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Action taken against teacher who refused to post photo god Saraswati

ராஜஸ்தான் மாநிலம், பாரான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேம்லதா பைர்வா. இவர் கிஷன்கஞ்ச் பகுதியில் உள்ள லக்டாய் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதியான குடியரசு தின நாளில், பள்ளியில் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் உள்ளூர் மக்களும் பங்குபெற்றனர்.

அப்போது, விழா மேடையில், மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் புகைப்படங்களுக்கு அருகே கடவுள் சரஸ்வதியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் அந்த ஆசிரியரிடம் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அவர்கள் வைத்த கோரிக்கையை, ஆசிரியர் ஹேம்லதா பைர்வா ஏற்க மறுத்துள்ளார். இதனால், இருதரப்பினருக்கும் வாக்குவாதம் எழுந்தது. அந்த சமயத்தில், ‘கல்விக்காக சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பும் செய்யவில்லை’ என்று ஆசிரியர் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த 22ஆம் தேதி, ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் மதன் திலாவர், கிஷன்கஞ்ச் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். அதில் அவர், “சிலர் பள்ளிகளில் சரஸ்வதி தேவியின் பங்களிப்பு என்ன? என்று கேட்கிறார்கள். சொல்லி இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவரை நான் சஸ்பெண்ட் செய்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். 

கல்வி அமைச்சரின் இந்த அறிவிப்புக்குப் பின், மாவட்டக் கல்வி அதிகாரி பியூஷ் குமார் சர்மா, ஆசிரியர் ஹேம்லதா பைர்வாவை பணி இடைநீக்கம் செய்து அதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளார். 

Next Story

'கொடி காத்த குமரனுக்கு மணிமண்டபம் வேண்டும்' - எழும் கோரிக்கை

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
 Mani Mandapam for Kodikatha Kumaran - the demand that arises

கொடி காத்த குமரனுக்கு மணிமண்டபம் வேண்டும் என கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்று சமுதாய அமைப்பு அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகில் உள்ள மேலப்பாளையம் என்னும் கிராமத்தில் 1904 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி நாச்சிமுத்து - கருப்பாயி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக குமரன் பிறந்தார். இவருடைய இயற்பெயர் குமாரசாமி.

தன் குடும்பத்தின் வறுமை சூழ்நிலை காரணமாகப் பள்ளிப் படிப்பை ஆரம்பப் பள்ளியிலேயே முடித்துக் கொண்டார். பின்னர் அவர் கைத்தறி நெசவு தொழிலை செய்து வந்தனர். 1923ல் ராமாயி என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார். கைத்தறி நெசவுத் தொழிலில் அவருக்கு போதிய வருமானம் கிடைக்காததால் மாற்று தொழில் தேடி திருப்பூர் சென்று அங்கு இருக்கும் ஈஞ்சையூரில் ஒரு மில்லில் எடை போடும் வேலையில் சேர்ந்தார்.

திருப்பூரில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேய சிப்பாய்களால் அடிபட்டு கையில் இந்திய தேசியக் கொடியுடன் மயங்கி விழுந்து இறந்ததால் இவருக்கு கொடி காத்த குமரன் என்ற பெயர் வந்தது. இவருக்கு சென்னிமலையில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக  சமுதாய அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகிறது. இதுகுறித்து செங்குந்த மகாஜன சங்க தலைவர் நந்தகோபால் மற்றும் செயலாளர் ஆசை தம்பி ஆகியோர் கூறும்போது, "அனைத்து சமுதாய தலைவர்களுக்கும் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்டு உயிர் நீத்த கொடிகாத்த குமரனுக்கு மட்டும் அரங்கம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.  தேச விடுதலைக்காகப் போராடிய கொடி காத்த குமரனுக்கு மணிமண்டபம் அவர் பிறந்த சென்னிமலையில் கட்ட வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்கள் சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னிமலையில் விரைவில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.