சென்ற வருடத்தின் இறுதி நாளன்று, விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி. வி. சண்முகம் ஆவேசம் பொங்க முன்வைத்த குற்றச்சாட்டுகள் பரபரப்பை உருவாக்கியிருக்கின்றன. ஆதரித்தும் மறுத்தும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தப் பரபரப்பில் அமைச்சர் சி. வி. சண்முகம் குறிப்பிட்ட ஒரு முக்கிய தகவல் மட்டும் ஏனோ அதற்குரிய அலசலைப் பெறத் தவறிவிட்டது.
78 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றும் மரணமுற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1 கோடியே 17 லட்சம் ரூபாய்க்கு இட்லி, தோசை, உப்புமா சாப்பிட்டார் என்று செலவுக் கணக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்தான் அந்த செய்தி.
அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆமோதித்திருக்கிறார். சசிகலா குடும்பத்தினர் அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் அறை எடுத்து 5 நட்சத்திர ஓட்டல் போல சொகுசாக இருந்ததால்தான் அவ்வளவு செலவு ஆகியிருக்கிறது என்ற பொருள்பட பேசியிருக்கிறார். உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கவேண்டியிருக்கிறது. என்ன ஆனாலும் அமைச்சர்களுக்கு வரலாறு முக்கியமல்லவா!
உச்சநீதிமன்றத்தால் “அக்யூஸ்ட் நம்பர் 1” என்று குறிப்பிடப்பட்ட முன்னாள் முதல்வர் “மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்” மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவரது வரவு – செலவுக் கணக்குகளைப் பரிசீலனை செய்த உச்சநீதிமன்றம், நீளமானதொரு செலவுக் கணக்குப் பட்டியலை பார்வையிட்டுத் தந்திருக்கிறது.
1.07.1991 முதல் 30.04.1996 வரையிலான அந்த செலவுக் கணக்கு, பிற்சேர்க்கை நான்காகத் தரப்பட்டுள்ளது. 570 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், 30 பக்கங்களுக்கு நீளும் இந்த பிற்சேர்க்கையில் (பக்: 36 – 66) மொத்தம் 248 செலவினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இவற்றில் எண் 86-லிருந்து 115 வரை, சற்று தள்ளித் தரப்பட்டுள்ள எண் 128-ம் சேர்த்து, 3 பக்கங்களுக்கு நீளும் மொத்தம் 31 செலவினங்கள் இனிப்புக் கடைகள், ஓட்டல்களுக்கு செய்யப்பட்ட செலவுகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. 1995 ஆம் ஆண்டு செய்யப்பட்ட எண் 86 செலவைத் தவிர மற்ற அனைத்தும் 1992 ஆம் ஆண்டு, பெரும்பாலும் மே மாதத்தில் செய்யப்பட்ட செலவுகள்.
அந்த செலவினங்கள் பின்வருமாறு:
86) அடையார் கேட் ஹோட்டலுக்கு (19.09.95) ரூ. 1,75,246.25
87) அகர்வால் ஸ்வீட்ஸ் (23.05.92) ரூ. 12,000.00
88) விஜயலட்சுமி ஸ்வீட்ஸ் (29.05.92) ரூ. 12,320.00
89) கேஃப்டீரியா (21.05.97) (92) (97 அச்சுப்பிழை) ரூ. 19,600.00
90) எக்மோர் பவன் (15.05.92) ரூ. 19,300.00
91) அரசன் ஸ்வீட்ஸ் (21.05.92) ரூ. 16,225.00
92) வசந்த பவன் (27.05.92) ரூ. 11,160.00
93) அர்ச்சனா ஸ்வீட்ஸ் (21.05.92) ரூ. 75,675.00
94) ஆரிய பவன் (22.05.92) ரூ. 77,580.00
95) வெல்கம் ஓட்டல் (09.05.92) ரூ. 22,000.00
96) அசோக் பவன் (03.06.92) ரூ. 21,250.00
97) பாம்பே மில்க் (25.5.92) ரூ. 7,500.00
98) பாம்பே ஸ்வீட் ஸ்டால் (25.09.92) ரூ. 15,000.00
99) சென்ட்ரல் கஃபே (30.05.92) ரூ. 48,645.00
100) காஃபி ஹவுஸ் (27.05.92) ரூ. 17,450.33
101) தேவநாதன் ஸ்வீட்ஸ் (23.05.97)/(2) ரூ. 18,042.00
102) கணபதி விலாஸ் (26.05.92) ரூ. 12,996.00
103) ஓட்டல் ஆகாஷ் (03.06.92) ரூ. 18,422.00
104) ஜோதி ஆனந்த பவன் (04.06.92) ரூ. 8,840.00
105) லட்சுமி விலாஸ் (04.06.92) ரூ. 1,880.00
106) மாஸ்டர் பேக்கரி (27.05.92) ரூ. 9,091.50
107) ஜெயராம் ஸ்வீட்ஸ் (01.06.92) ரூ. 10,224.00
108) மயில் மார்க் மிட்டாய்க் கடை (01.06.92) ரூ. 39,000.00
109) நந்தினி (ஸ்வீட்ஸ்?) (15.05.92) ரூ. 21,000.00
110) நியூ ரமா கஃபே (26.05.92) ரூ. 74,342.25
111) நியூ அகர்வால் (26.05.92) ரூ. 14,000.00
112) நியூ பாம்பே ஸ்வீட்ஸ் (21.05.92) ரூ. 15,150.00
113) ராமலட்சுமி ஸ்வீட்ஸ் (03.06.92) ரூ. 16,637.40
114) ரொலாண்ட் பேக்கரி (18.06.92) ரூ. 13,302.90
115) சேலம் கஃபே (21.05.92) ரூ. 13,520.00
128) தமிழக இனிப்பகம் (01.06.92) ரூ. 27,000.00
மொத்த செலவு 8,64,399 ரூபாய் 63 காசுகள். இதன் இன்றைய மதிப்பு ஏறத்தாழ ரூ. 51,46,722 அதாவது அரை கோடியாகும்.
இந்த 31 செலவினங்களை எத்தனை நாட்களில் எப்படி செலவு செய்திருக்கிறார் என்று பார்த்தால் பிரமிப்பு தட்டிவிடும். 1995 ஆம் ஆண்டு ஒரே நாளில் அதிகபட்சமாக ரூ. 1,75,246.25 செலவு செய்திருக்கிறார். 1992 மே மாதத்தில் மட்டும் 10 நாட்களில் ரூ. 5,17,597.08 செலவு செய்திருக்கிறார். 1992 ஜூன் மாதத்தில் 4 நாட்களில் ரூ. 1,56,556.30 – மும், செப்டெம்பர் மாதம் ஒரு நாள் ரூ. 15,000-மும் செலவு செய்திருக்கிறார்.
ஒரு மாதம் ஒரு நாள் (செப்டெம்பர் 1995) அதிகபட்சம் ரூ. 1,75,246.25 மும் ஒரு மாதம் ஒரு நாள் (செப்டெம்பர் 1992) குறைந்தபட்சம் ரூ. 15,000 மும், செலவு செய்திருக்கிறார் ஜெயலலிதா. 10 மடங்கு வித்தியாசம்.
அதாவது இன்றைய மதிப்பில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக ஏறத்தாழ 10 லட்சமும், குறைந்தபட்சமாக ஏறத்தாழ 1 லட்சமும் செலவு செய்யக்கூடியவர் அவர். இரண்டிற்கும் சராசரியை பார்த்தால்கூட நாளொன்றுக்கு 5 ½ லட்சம் செலவு செய்யக்கூடியவர்.
இது ஒரு நாளுக்கான அனைத்து செலவுகளையும் உள்ளடக்கியதன்று. இனிப்புப் பண்டங்களுக்காகவும் ஓட்டலில் உணவு வாங்கி சாப்பிடுவதற்காகவும் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இனிப்புப் பண்டங்களுக்காகவும் ஓட்டலில் உணவு வாங்கி சாப்பிடுவதற்காகவும் உடல்நிலை நன்றாக இருந்த நிலையில், நாளொன்றுக்கு சராசரியாக 5 ½ லட்சம். இதன்படி, மாதமொன்றுக்கு ஏறத்தாழ ஒரு கோடியே 65 லட்சம் செலவு செய்யக்கூடியவர். 78 நாட்களுக்கு 4 கோடியே 29 லட்சம் செலவு செய்திருப்பார் என்று கூட்டல் – வகுத்தல் – சராசரிக் கணக்கு சொல்கிறது. உடல்நிலை பாழ்பட்டு, வாழ்விற்காக போராடிக் கொண்டிருந்த 78 நாட்களிலோ 1 கோடியே 17 லட்சம் மட்டுமே செலவு செய்திருப்பதாகக் கணக்கு காட்டப்பட்டிருக்கிறது. இது அவருடைய சராசரி இனிப்புப் பண்ட, ஓட்டல் உணவு செலவை விட மூன்று மடங்கு குறைவு.
கணக்கு வழக்கு இப்படி இருக்க, சட்டத்துறை அமைச்சர் எதற்காக ஆவேசப்பட்டார் என்றுதான் வியக்கவேண்டியிருக்கிறது. ஒரு பக்கம் உண்மைகள் வெளிவர வெளிவர, இன்னொரு பக்கம் அமைச்சர்கள் ஆளாளுக்கு வாய் திறக்க, அதிமுகவுக்கு இப்போது எதிமுக தான்.
எப்பக்கம் திரும்பினாலும் முட்டுக்கு கட்டைதான்.
(mathi2006@gmail.com)