Skip to main content

குஜராத் தேர்தல் அறிவிப்பு தள்ளிவைப்பு மோடிக்காகவா? காங்., பாஜக கருத்து!

Published on 13/10/2017 | Edited on 13/10/2017
குஜராத் தேர்தல் அறிவிப்பு தள்ளிவைப்பு மோடிக்காகவா? காங்., பாஜக கருத்து! 



குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலத் தேர்தல்களை ஒரே நேரத்தில் அறிவிக்காமல் குஜராத் தேர்தலை தனியாக நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது குறித்து முன்னாள் தேர்தல் கமிஷனர் குரேஷி கூறுகையில், தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டிய 2 மாநில தேர்தலில் ஒன்றுக்கு மட்டும் தேதியை அறிவித்து விட்டு, ஒன்றுக்கு அறிவிக்கவில்லை. மோடி வருகைக்காக தான் இந்த தாமதமா என்ற சந்தேகம் எழுகிறது. இது துரதிஷ்டவசமானது என தெரிவித்துள்ளார்.

பா.ஜ.,வின் அழுத்தம் காரணமாகவே குஜராத் தேர்தல் தேதியை அறிவிப்பதில் தேர்தல் கமிஷன் தாமதம் காட்டுகிறது. அடுத்த வாரம் குஜராத் தலைநகர் காந்திநகரில், பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடக்க உள்ளது. இதில் மோடி பல முக்கிய சலுகைகளை அறிவிக்க உள்ளார். இதற்கு அனுமதி அளிப்பதற்காகவே குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழக காங்கிரஸ் சட்டமன்ற கொறடா விஜயதாரணி இதுபற்றிக் கூறுகையில், அசாம், மேற்கு வங்கம், கேரளா, பாண்டிச்சேரி, தமிழ்நாடு ஆகிய 5 மாநில தேர்தல் தேதிகள் ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டன. இந்த இரண்டு மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் அறிவித்து நடத்த முடியாதா? 

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி சொல்லியிருப்பதில் உண்மை இருப்பதாகத்தான் பார்க்கப்படுகிறது. எங்கள் காங்கிரஸ் தலைவர்கள் சந்தேகப்படுவதிலும் உண்மை இருப்பதாகவே நினைக்கிறேன். 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் சிறப்பு அறிவிப்புகளை வெளியிட முடியாத சூழல் வந்துவிடும் என்பதால் பாஜகவுக்கு சாதகமான சூழல் உருவாக்கவே குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளிப்போகிறது. தேர்தல் ஆணையமே மோடியின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக சந்தேகம் எழுகிறது. தேர்தல் ஆணையம் தன்னுடைய பணியை சரியாக செய்யவில்லை என்பதையே காட்டுகிறது.

பாஜகவின் கரு.நாகராஜன் கூறுகையில், குஜராத் மோடி வளர்த்த மாநிலம். அவர் சாதனை படைத்த மாநிலம், புதிய அறிவிப்புகளை அறிவித்த பிறகுதான் மோடி செயல்படக்கூடியவர் என்று எடுத்துக்காட்ட வேண்டிய தேவை அங்கு இல்லை. இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக குஜராத்தை உருவாக்கிக் காட்டியவர் மோடி. இது குஜராத் மக்களுக்கு நன்றாகவே தெரியும். தேதி அறிவிப்பதில் பாரபட்சம் இருக்க வாய்ப்புகள் இல்லை. ஏனென்றால் இமாச்சலப்பிரதேசத்தின் கலாச்சாரம் வேறு, குஜராத்தின் கலாச்சாரம் வேறு. பண்டிகைகள், விஷேச நாட்களை கணக்கில் எடுத்துக்கொண்டு தாமதமாக அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதேயொழிய, வேறொன்றும் இல்லை. வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு குற்றம் சாட்டுகின்றனர்.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் வேண்டுமென்றே குற்றம் சொல்கின்றன என்றாலும், முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷியும் சொல்லியிருக்கிறாரே?

பதவியில் இருக்கும்போது எதுவும் சொல்லாமல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தால், பதவி விலகுவதை தவிர தனக்கு வேறு வழி இருந்திருக்காது என ரகுராம் ராஜன் தெரிவித்தார். அதுபோல பதவியை விட்டு போன பிறகு குரேஷி சொல்லியிருக்கிறார். பதவியைவிட்டுபோன பிறகு அவர்கள் மனத்திற்கு பட்டதை சொல்கிறார்கள். ஆகையால் தேர்தல் தேதி அறிவிப்பதில் எந்த பாரபட்சமும் இல்லை என்பது எனது கருத்து என்றார்.

-வே.ராஜவேல்

சார்ந்த செய்திகள்