அமெரிக்க- இந்திய உத்திகள் மற்றும் பங்கேற்றல் அமைப்பின் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகையில்,
நமது பொருளாதார அமைப்பு, சுகாதார அமைப்பினை சோதித்து பார்க்கிறது கரோனா. 2020 ஆம் ஆண்டின் முடிவு இப்படி இருக்கும் என ஆண்டின் தொடக்கத்தில் நாம் நினைத்தோமா? இந்தியாவில் கரோனா இறப்பு விகிதம் குறைவு. மிக விரைவாக மருத்துவ வசதிகளை உருவாக்கியதால் கரோனா இறப்பு விகிதம் இந்தியாவில் குறைவாக உள்ளது. கரோனா காலத்தில் 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்பட்டன. கரோனாவால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தாலும் இந்தியர்களின் உழைப்பு மற்றும் நம்பிக்கையை அது பாதிக்கவில்லை என்றார்.
இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் என அமெரிக்க தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, இந்தியாவில் முதலீடு செய்ய அந்நிய முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும். இந்த ஆண்டு மட்டும் 20 பில்லியன் டாலர் அன்னிய முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளது. உலகிலேயே மிகப் பெரிய வீட்டு வசதி திட்டம், டிஜிட்டல் மருத்துவமனை வசதிகளை இந்தியா உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் நாளை வளமாக மாறும். தற்சார்பு இந்தியா உருவாகும். கைபேசி, மின்சாதன பொருட்கள், மருத்துவ சாதனங்கள் இந்தியாவிலேயே உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.