பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். சண்டிகரில் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்த அமரீந்தர் சிங், தனது ராஜினாமா கடிதத்தையும், தனது தலைமையிலான மாநில அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தையும் ஆளுநரிடம் வழங்கினார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்துவுடன் மோதல் வலுத்த நிலையில் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளார். இதனிடையே, இன்று (18/09/2021) மாலை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், முன்னதாகவே தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்தக் கூட்டத்தில் புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்படவுள்ளார்.
செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமரீந்தர் சிங், "தொடர்ந்து மூன்றாவது முறையாக நான் அவமானப்படுத்தப்பட்டுள்ளேன். காங்கிரஸ் தலைமை யாரை நம்புகிறதோ அவர்களை முதலமைச்சராக தேர்வு செய்துகொள்ளட்டும். எனது ராஜினாமா முடிவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். கட்சியில் நிலவிய ஊழல் விவகாரங்கள் அழுத்தத்தை ஏற்படுத்தியதால் ராஜினாமா செய்தேன். தற்போதுவரை நான் காங்கிரஸ் கட்சியில்தான் உள்ளேன்; எதிர்கால திட்டம் பற்றி விரைவில் அறிவிப்பேன். ஆதரவாளர்களுடன் கலந்து பேசிய பின் எதிர்கால நடவடிக்கைப் பற்றி முடிவெடுப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.