Skip to main content

"ஆளுநர் பாஜக ஏஜெண்ட் போல செயல்படக்கூடாது; 33 பேரை இதுவரை பலி கொடுத்துள்ளோம்..." - கொதித்த ராம. சுப்பிரமணியன்

Published on 02/12/2022 | Edited on 03/12/2022

 

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டம் காரணமாகப் பல இளைஞர்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்டுவரும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனைத் தடுக்கும் விதமாகத் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதித்து தமிழக அரசு சில மாதங்களுக்கு முன்பு அவசரச் சட்டம் இயற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அவருக்கு அனுப்பி இருந்தது. இந்நிலையில் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காத நிலையில் தற்போது இந்த சட்டம் காலாவதியாகியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மூத்த அரசியல் விமர்சகர் ராம.சுப்பிரமணியன் அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம்.நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு. 

 


ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத காரணத்தால் தற்போது அந்த சட்டம் காலாவதியாகியுள்ளதாகச் செய்திகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி அவர்களும் ஆளுநரைச் சந்தித்து இது தொடர்பாகப் பேசியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

 

ஆன்லைன் சூதாட்டம் பற்றி நாம் தெளிவாகப் பார்க்க வேண்டிய தேவை உள்ளது. நீங்களும் நானும் இத்தகைய விளையாட்டை விளையாண்டால் அதில் சிறப்பான விளையாட்டு திறமை இருப்பவர்கள் வெற்றி பெறலாம். இது ரம்மி விளையாட்டு மட்டுமல்ல, ஆன்லைன் செஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுக்களுக்கும் இது பொருந்தும். மனிதன் நேரடியாக விளையாடாமல் மறுபக்கம் மிஷன் விளையாடுவதே இந்த ஆன்லைன் கேம்கள். இதில் மனிதர்கள் வெற்றிபெறுவதைக் காட்டிலும் புரோகிராம் செய்யப்பட்ட மிஷின்கள் வெற்றி பெறுவதற்கே வாய்ப்புக்கள் அதிகம். 

 

ஏனென்றால் அது மனிதர்கள் அடுத்து என்ன நினைக்கிறார்கள், என்ன செய்வார்கள் என்பது வரை ஊகித்துவிடுகின்றது. அதற்கேற்ப அந்த புரோகிராம் செய்யப்பட்ட மிஷின்கள் விளையாடுவதால் மனிதர்கள் அதனோடு மோதி வெற்றி பெறுவது என்பது அதிகம் இயலாத காரியமாக மாறி விடுகின்றது. குறிப்பாகக் குறிப்பிட்ட சில வினாடிகளில் மிஷின்கள் முடிவெடுப்பதைப் போல் மனிதர்களும் சில நொடிகளில் அடுத்தகட்ட நகர்வை எடுக்க வேண்டிய தேவை இருப்பதால் மிஷின்களுக்கு இணையாக மனிதனால் திறமையாக விளையாட முடியாது. இதுவும் ஒரு வகையில் அவர் தோற்றுப்போவதற்கான அடிப்படை வழிமுறையாக அமைந்து விடுகின்றது. 

 

இந்த விபரீத விளையாட்டில் சிக்கி இதுவரை 33 பேர் தமிழகத்தில் உயிரிழந்திருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு திருமணமான பெண் ஒருவர் குழந்தைகளைத் தவிக்க விட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். புரோகிதர் ஒருவர் தற்போது தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கெல்லாம் என்ன வருமானம் கிடைத்துவிடப் போகிறது. அவர் குடும்பத்தைத் தவிக்கவிட்டு தற்போது மரணமடைந்துள்ளார். இதையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் தமிழக அரசு இந்த அவசரச் சட்டத்தை இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அதில் கூட ஆளுநர் சந்தேகம் கேட்டார். அதற்கும் தமிழக அரசு விளக்கம் அளித்திருந்த நிலையில் தற்போது காலக்கெடு முடிந்த காரணத்தால் சட்டம் காலாவதியாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

இனி வரும் கூட்டத்தொடரில் இதை நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப வேண்டிய தேவை இருக்கிறது. கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்திருந்தாலும், இந்த முறை குழு அமைத்து நீதிமன்றம் கூறிய அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றியே இந்த சட்ட முன்வரைவு கொண்டுவரப்பட்டது. இதையும் ஆளுநர் புறந்தள்ளியிருப்பது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. தமிழக அரசு எதைச் செய்தாலும் முட்டுக்கட்டை போடுவேன் என்று ஆளுநர் கூறுவதைப் போலத்தான் இதைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது. ஆளுநர் பாஜகவின் ஏஜெண்டாக செயல்படுவதாக இருக்கக்கூடாது. நல்ல விஷயங்களை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.