தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் புதுமடம் ஹலீம் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பாஜகவின் கொள்கைகளில் ஒன்று. ஒருகாலத்தில் இந்த தேர்தல் முறை தான் இந்தியாவில் நடைமுறையில் இருந்தது. ஆனால் அதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. இந்தியாவில் இது சாத்தியப்படாது என்று கைவிடப்பட்ட திட்டம் இது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்று கொண்டுவந்துவிட்டால் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மக்களை சந்தித்தால் போதும் என்று நினைக்கிறது பாஜக. ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் இப்போதுள்ள அனைத்து மாநில சட்டமன்றங்களையும் கலைத்து விடுவீர்களா?
அடிக்கடி தேர்தல்கள் நடப்பது தான் ஜனநாயகத்தின் முக்கியமான மாண்பு. மக்களின் குறைகளைக் கேட்பது இவர்களுக்குப் பிடிக்காது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை ஏன் இவர்கள் ஆட்சிக்கு வந்த புதிதில் செய்யவில்லை? ஆட்சி முடியப்போகும் நேரத்தில் ஏன் செய்கிறார்கள்? முன்பு பாஜகவுக்கு பயம் இல்லை. இப்போது இந்தியா கூட்டணி வலுவடைந்து வருவது அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவாகத் தேர்தல் நடத்தினால் இந்தியா கூட்டணிக்கு சிக்கல் ஏற்படும் என்று இவர்கள் நினைக்கின்றனர்.
இந்த மாதம் பாஜக கூட்டியுள்ள சிறப்பு பாராளுமன்றக் கூட்டத்தில் பெரிய விஷயம் எதையாவது நிச்சயம் அறிவிப்பார்கள். பாஜகவுக்கு ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தும் வகையிலும் அவர்களுடைய செயல்பாடு இருக்கும். தான் ஆட்சியில் இருக்கும்போது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாத எடப்பாடி பழனிசாமி, இன்று அதை ஏற்றுக்கொள்கிறார். கொள்கையே இல்லாத தலைவர் என்றால் அது எடப்பாடி பழனிசாமி தான். அவர்தான் இன்று பாஜக கூட்டணியில் இரண்டாவது பெரிய தலைவராக இருக்கிறார். பாஜக கொண்டுவந்த எந்த திட்டத்திற்காவது அதிமுக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறதா?
எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அவர்கள் மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்ததில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு எந்தக் கொள்கையும் இல்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் என்று நடத்துவதற்கு எந்த சாத்தியக்கூறுகளும் இல்லை. இதை அவர்களால் செய்ய முடியாது. ஆனால் எதிர்க்கட்சிகளை பயமுறுத்துவதற்காக இதுகுறித்து பேசுகிறார்கள். சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொள்ள வேண்டும் என்கிற நிலை வந்தால் எதிர்க்கட்சி கூட்டணி பிரிந்துவிடும் என்று கணக்குப் போடுகிறார்கள். ஆனால் அது நடக்காது. மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் ஒற்றை நோக்கம்.
கீழே உள்ள லிங்கில் பேட்டியை முழுமையாகக் காணலாம்...