"என்ன படிச்சாலும் இங்கு கூலி வேலை தான். தயை செய்து இன்னும் எங்களை அகதிகளாகப் பார்க்காதீர்கள்.!" என மன்றாடுகின்றனர் இலங்கையிலிருந்து தமிழகத்தில் தஞ்சமடைந்து 28 வருடங்களாக வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் அகதிகள்
யுத்தம் தொடங்கிய 1983 ஆண்டிலிருந்தே, தங்களின் உயிர்களை பாதுகாத்து கொள்ள, தங்களின் உடமைகளை உறவுகளையும் சொந்த நாட்டையும் விட்டு விட்டு, கையில் கிடைத்தப் பொருட்களுடன் இலங்கை இராணுவத்திற்கு தெரியமால் கடலில் படகில் உயிரை பணயம் வைத்து, அகதியாக தமிழக தனுஷ்கோடி பகுதிக்கு வந்து இறங்கியவர்களை மீட்டு மண்டபம் கேம்ப்பில் இலங்கை தமிர்கள் மறுவாழ்வு முகாமில் அகதியாக பதிவு செய்த பின், மண்டபம் உட்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களுக்கு அவர்களை அனுப்பி வைத்தது அரசு. அத்தோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு மாதம் தோறும் குடும்ப தலைவருக்கு 1000 ரூபாய் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு 750 ரூபாய் நிவாரணமாகவும் கொடுத்து வருவதுடன் ரேசன் பொருட்களையும் இலவசமாக அனைத்து மாதந்தோறும் வழங்கி வருகின்றது.
"உயிரை பாதுகாத்துக்கொள்ள தமிழகத்தில் தஞ்சம் அடைந்தோம்.! இது வரை அரசும் உதவி செய்து வருகின்றது. இங்கு திருமணம் செய்திருக்கின்றோம். திருமணம் முடிந்து எங்கள் மக்கள் குழந்தைகளைப் பெற்று, அதற்கான பிறப்பு சான்றிதழையும் பெற்றிருந்தாலும் இன்னும் எங்களை அகதிகளாகவேப் பார்க்கின்றது அரசு. அகதியாக பதிவு செய்து படித்து நல்ல நிலைக்கு வந்தாலும் எங்கும் எங்களால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இரவானால் இங்கு வந்துவிட வேண்டும் என்ற கட்டாயம் இருக்கு. தமிழகத்திற்கு முக்கிய பிரமுகர்கள் வரும் போது தணிக்கை என்று அறிவிக்கப்படுவதால் என்ன செய்வது என்று தெரியாமல் உடனே சம்பந்தப்பட்ட முகாமிற்கு வந்து தணிக்கையின் போது தங்களின் பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் இல்லை என்றால் அகதி என்ற பதிவு முற்றிலும் நீக்கப்படுவதால் கிடைக்கும் சில சலுகைகள் அனைத்து நிறுத்தப்படுகிறது. இதனால் நல்ல வேலை கிடைத்தும் எங்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. என்ன தான் படித்தாலும் இங்கு கூலி வேலை தான் கிடைக்கின்றது. தயை செய்து எங்களை அகதிகளாகப் பார்க்காதீங்க" என வேண்டுகோள் வைத்தனர் மண்டபம் முகாம் வாசிகள்.