Skip to main content

கொடநாடு வழக்கு; முழு ரகசியம் அறிந்த மூவர்? 

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

The case of Kodanadu; Three who know the whole secret?

 

கொடநாடு கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக மத்திய அரசின் உதவியில்லாமல் கொடநாடு கொள்ளை தொடர்பான டெலிபோன் ரெக்கார்டுகளை போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள். கொடநாடு கொள்ளை நடந்தபோது அதில் ஈடுபட்ட கனகராஜுக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் மிக முக்கியமானவை. அந்த அழைப்புகள் எல்லாம் யாரிடமிருந்து வந்தவை என்பதைக் கண்டுபிடிப்பது போலீசாருக்கு மிகச் சிரமமான வேலையாக இருந்தது. பல வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த கொலை கொள்ளையில் சம்பந்தப்பட்ட போன் கால்களின் ஆதாரங்களைப் பெறுவதற்கு மத்திய அரசு நிறுவனமான ‘TRAI’ உதவி செய்யவில்லை. அதைக் கேள்வி கேட்டு யாரும் வழக்குப் போடவில்லை.

 

இந்நிலையில் காவல்துறை அதிகாரிகள் தாங்களாகவே முயற்சி செய்து சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்களுடன் பேசி அழைப்புகள் பற்றிய புலனாய்வு விவரங்களை எடுத்துள்ளனர் என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். இந்த வழக்கு விசாரணையில் ஒரு முக்கிய திருப்பமாக கருதப்படும் இந்தத் தரவுகள் கிடைத்ததனால் குற்றவாளிகள் தரப்பு அதிர்ந்துபோய் இருக்கிறது. இந்தத் தரவுகளுடன் முக்கிய குற்றவாளியான கனகராஜின் அண்ணன் தனபாலை போலீசார் நெருக்கி வருகிறார்கள். அந்த நெருக்குதலை வெளிக்காட்டவே தனபால், “கொடநாடு விசயத்தில் எனக்குப் பல உண்மைகள் தெரியும், முதல்வர் அய்யா... என்னைக் காப்பாற்றுங்கள்” என அலறியிருக்கிறார்.

 

 

The case of Kodanadu; Three who know the whole secret?
தனபால்

தனபாலின் இந்த அலறல் ஏன்? என இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளிடம் கேட்டோம். “தனபால் மற்றும் கனகராஜின் இன்னொரு சகோதரர் ரமேஷ் ஆகியோர் இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகள். தி.மு.க. ஆட்சியில் மறுபடியும் இந்த வழக்கை நாங்கள் நோண்ட ஆரம்பித்தபோது எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. கனகராஜின் மனைவி முக்கியக் குற்றவாளி சயானுக்கு மிக நெருங்கிய நண்பராக இருந்தார். அந்தப் பெண்ணை நாங்கள் கிடுக்கிப்பிடி விசாரணை செய்ததில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன.

 

கனகராஜ் லட்சக் கணக்கில் பணத்தை அவரது சகோதரர் தனபாலிடம் கொடுத்து வைத்திருந்தார். அதை எந்த வேலைக்கும் போகாத தனபால் வட்டிக்கு விட்டிருந்தார். கனகராஜின் நிலம் தொடர்பாக கனகராஜின் மனைவிக்கும் தனபாலுக்கும் இடையே அடிதடி தகராறு ஏற்பட்டது. இந்த சமயத்தில் உள்ளே புகுந்த நாங்கள், தனபால் பற்றிய பல உண்மைகளை அவரிடமிருந்து கறந்தோம். கொலை செய்த ஒருவன் போலீசிடம் மாட்டாமல் தப்பி ஓடுவான். ஆனால், கனகராஜ் முதலில் நெல்லூருக்கு போனான். அங்கிருந்து நேரடியாக தனது சொந்த ஊரான ஆத்தூருக்கு வந்து சொந்த வீட்டிலேயே தங்கினான். இவ்வளவு தைரியமாக எந்தக் கொலைக் குற்றவாளியும் நடந்து கொள்ளமாட்டான். அவனுக்கு போலீஸ் தன்னைத் தேடுவது நன்கு தெரியும். போலீஸ் அவனை கைது செய்யாது என்கிற தைரியத்தை கொடுத்தது யார் எனக் கேட்டாம். அவனிடம் அதற்கான பதில் இல்லை. 

 

The case of Kodanadu; Three who know the whole secret?
சயான்

 

ஆனாலும், கொடநாடு கொள்ளை, கொலை கனகராஜ் மட்டும் செய்தது அல்ல. இதில் முழு ரகசியத்தையும் தெரிந்தவர்கள் மூன்று பேர். கனகராஜின் சகோதரர்களான தனபால், ரமேஷ் மற்றும் முக்கியக் குற்றவாளியான சயான். இவர்கள் மூவருக்கும் ரகசியம் தெரியும். கனகராஜ் கொள்ளையடித்த பொருட்களோடு கொடநாடு எஸ்டேட் பங்களா இருந்த மலையிலிருந்து கீழே வரும்பொழுது, கொள்ளையின் போது அவன் உபயோகித்த செல்போனை வாங்கி தனபால் தீ வைத்து எரித்திருக்கிறார். இது சயானின் கண் முன்பே நடந்த வேலை. அந்த செல்போனில் முக்கியமான ஒருவர் பேசியிருக்கிறார். அதனால்தான் குறிப்பிட்ட செல்போனை அழித்திருக்கிறார்கள். கனகராஜ் இறந்து விட்டாலும் கொடநாடு கொலை கொள்ளை சம்பந்தமான முழு மர்மங்களையும் அறிந்தவர்களாக அவனது சகோதரர்கள் தனபாலும் ரமேஷும் சயானும் இருக்கிறார்கள்” என கனகராஜின் மனைவி உண்மைகளைப் போட்டுடைத்தார்.

 

நாங்கள் கனகராஜின் செல்போன் அழைப்பு தொடர்பாளர்களைத் தேடி புறப்பட்டோம். கொடநாடு கொலைக்கும் கனகராஜ் இறப்பதற்கும் இடையே நெல்லூருக்குப் போய்விட்டு வந்த கனகராஜ், பல சிம்கார்டுகளை வாங்கியிருக்கிறார். ஒவ்வொரு சிம்கார்டாக நாங்கள் தேட ஆரம்பித்தோம். கடைசியாக அவர் பி.எஸ்.என்.எல். சிம்கார்டை உபயோகித்தார். அந்த சிம்கார்டில்தான் எடப்பாடியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த கனகராஜ் (அவர் பெயரும் கனகராஜ்தான்) பேசியிருந்தார். அதை நாங்கள் கண்டுபிடித்தோம். அவரை விசாரிக்க முற்படும்பொழுது அப்போது உளவுத்துறை தலைவராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதமும் தடையாக வந்தார். எங்கள் டீமில் இருந்த எடப்பாடிக்கு நெருக்கமான டி.ஐ.ஜி. முத்துசாமிக்கு இந்த விவரம் தெரிந்தவுடன் அவர் டேவிட்சனுக்கு இதைச் சொல்ல, எங்கள் விசாரணைக்கு உளவுத்துறை டேவிட்சனால் தடைவந்தது. சயான், தனபால், ரமேஷ் மூவரும் வாழும் கனகராஜுகள். இந்த மூவரையும், போலீஸ் டி.எஸ்.பி. கனகராஜையும் நன்கு விசாரித்தால் கொடநாடு கொலை வழக்கு முடிந்துவிடும்” என்கிறார்கள் காவல்துறையினர்.

 

The case of Kodanadu; Three who know the whole secret?
ரமேஷ்

 

சி.பி.சி.ஐ.டி. தற்பொழுது அந்த முயற்சியில் சிறப்பாக ஈடுபட்டுள்ளது. அதனால் டெலிபோன் ரெக்கார்டுகளில் முதல் வெற்றியும் பெற்றுள்ளது. இந்த விவரங்கள் தனபாலுக்கும் தெரியும். தனபாலை கவனிக்கவேண்டிய விதத்தில் கவனித்தாலே போதும், அல்லது அவருக்கொரு பெருந்தொகை கொடுப்பதாக சொன்னாலேகூடப் போதும்... கொடநாடு மர்மம் விலகி விடும். ஆனால், "அதெல்லாம் வேண்டாம், நாங்கள் எங்கள் முயற்சியிலேயே அதைக் கண்டுபிடித்துவிடுவோம்” என்கிறார்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசார்.