Skip to main content

காற்றில் பறக்கும் அரசு உத்தரவுகள்...

Published on 07/09/2020 | Edited on 07/09/2020

 

Government laws and orders flying in the air ..


கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்போது தமிழக அரசு கடுமையான விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி பொது இடங்களில் எச்சில் துப்பினால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காவிட்டால் ரூ.500 அபராதமும், மாஸ்க் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு ரூ.200 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விதிகளை மீறும் சலூன், உடற்பயிற்சி கூடம் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .

 

இப்படி அரசின் விதிமுறைகளைப் பின்பற்றாத தனிநபர்களுக்கு ரூ.500 அபராதம். தமிழக அரசின் இந்தச் சட்டத் திருத்தத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தச் சட்டம் 4-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் சாதாரண நோய்கள் முதல் கடுமையான நோய்கள் வரை பரவாமல் தடுக்கப்படும். ஆனால் தமிழக அரசின் இந்த அவசரச் சட்டம் நடைமுறையில் முறையாகக் கடைப்பிடிக்கப்படுமா (உதாரணமாக டாஸ்மாக் கடைக்கு வரும் மது அருந்துவோர் இதை நடைமுறைப்படுத்துவார்களா) என்பதுதான் மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. காரணம் ஏற்கனவே டூ-வீலரில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டம், பொது இடங்களில் புகைப்பிடித்தால் அபராதம் விதிக்க்கும் சட்டம், பிளாஸ்டிக் பொருட்களை முழுவதையும் ஒழிக்கும் சட்டம் என பொதுமக்களுக்கு மிகவும் பயனளிக்கக்கூடிய மேற்படி பல சட்டங்கள் போடப்பட்டு நடைமுறையில் உள்ளன. ஆனால், அதனை முறைப்படுத்தி கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகள் அரசு அலுவலர்கள் முழுவதும் கட்டுப்படுத்தினார்களா? கட்டுப்படுத்தப்பட்டதா? என்றால் இல்லை.

 

சட்டம் மட்டும் அமலில் உள்ளது. சட்டத்தை மீறி அனைத்தும் நடந்து கொண்டுதான் உள்ளது. அவ்வப்போது காவல்துறை, வாகனங்களில் செல்வோரை வழிமறித்து அபராதம் விதிப்பதன் மூலம் அரசுக்கு வருவாய் வருகிறது. ஆனால் அரசின் சட்ட விதிகள் மக்களை முழுவதும் கட்டுப்படுத்தவில்லை. இதற்கு காரணங்கள் என்ன என்பது பற்றி ஆய்வுசெய்து சட்டத்தை மீறக்கூடாது என்று ஒவ்வொரு மனிதனும் உணரவேண்டும். அதைக் கடைப்பிடிக்க வேண்டும். அந்த வழிமுறைகளை அரசு செய்ய வேண்டும். சட்டத்தை மீறுபவர்களிடமிருந்து அபராதத் தொகை வசூலிப்பது மட்டும் நிரந்தர தீர்வாகுமா? மக்கள் ஒவ்வொருவரும் அரசு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு சட்டத்தின் மூலம் தண்டனையைக் கடுமையாக்க வேண்டும். என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வருபவர்களைப் பார்த்து முகக் கவசம் அணிந்து உள்ளவர்கள் ஏன் ஒரு பத்து ரூபாய் கொடுத்து ஒரு முகக் கவசம்போடக் கூடாதா அது பாதுகாப்பாக இருக்குமே என்று அறிவுரை கூறினால் முகக் கவசம் போடுவதும் போடாததும் என் இஷ்டம் உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ என்று எதிர்க் கேள்வி கேட்கிறார்கள். முகக் கவசம் போட்டுக் கொண்டு வந்தால்தான் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல், டீசல் நிரப்பப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகா மூரி அறிவித்துள்ளார். ஆனால், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் உட்பட வணிக நிறுவனங்கள் நடத்தும் பெரும்பாலானவர்கள், முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு வியாபாரம் செய்ய மாட்டோம் என்ற அரசு உத்தரவைக் கடைப்பிடிப்பதில்லை. காரணம் அவர்கள் வருமானத்தை மட்டுமே பார்க்கிறார்கள். நோய் வந்து இறந்தாலும் பரவாயில்லை பணம் சம்பாதிக்க வேண்டும் என்று மட்டுமே பெரும்பாலான வணிக நிறுவனங்கள் செயல்படுகின்றன.

 

Ad

 

சட்டங்களையும் விதிமுறைகளையும் அறிவித்தால் மட்டும் போதாது அதைச் செயல்படுத்தும் அரசும், அரசு அலுவலர்களும், அதிகாரிகளும் அதை முதலில் கடைப்பிடிக்க வேண்டும். கறார் தன்மையோடு சட்ட நடைமுறைகளைச் செயல்படுத்தினால்தான் முகக் கவசம் அணிய வேண்டிய அவசியம் உட்பட அரசு அறிவித்த அனைத்து அறிவிப்புகளும் சட்டங்களும் முழுமையாக நடைமுறைக்கு வரும், வரவேண்டும்! அரசு அறிவிப்புகள் தற்போது 'ஏட்டு சுரைக்காய் சமையலுக்கு உதவாது' என்ற கதை போன்ற நிலையில்தான் உள்ளது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.