"பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைச்சாச்சு, இனியாவது நிம்மதியா இருக்கலாம்'' என தமிழக அமைச்சர்கள் நினைத்துக் கொண்டிருந்தபோதே ஐ.டி.ரெய்டு நடத்தி, அவர்களை அலற விட்டிருக்கிறது பா.ஜ.க. மேலிடம். அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டு ரெய்டுக்கு காரணமான சில ஃப்ளாஷ்பேக் சம்பவங்களைப் பார்ப்போம்.
வேலூர் புது பஸ் ஸ்டாண்டுக்கு அருகே சுந்தர் ராஜன் என்பவருக்குச் சொந்தமான 6.9 ஏக்கர் காலி நிலம்(மார்க்கெட் மதிப்பு 280 கோடி) உள்ளது. இந்த இடத்தை பிரபல ரியல் எஸ்டேட் வியாபாரிகளான ராமமூர்த்தி-ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரும் இணைந்து 2010 ஆகஸ்டில் சுந்தர்ராஜனிடமிருந்து பவர் எழுதி வாங்கு கின்றனர். இந்த இடவிற்பனையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான ராணிப்பேட்டை காந்தியின் மகன் சந்தோஷ், நந்தகுமாரின் மச்சான் பிரகாஷ், மணல் மாஃபியா சேகர் ரெட்டி, உத்தம்சந்த் ஆகியோர் பார்ட்னர்களாக கைகோர்க்கின்றனர்.
ஜெ. ஆட்சியில் ஏற்பட்ட நெருக்கடியால் சந்தோஷும் பிரகாஷும் விலகுகின்றனர். 2013-ல் அந்த இடத்தைப் பார்த்த அமைச்சர் வீரமணி, 5 ஆயிரம் சதுர அடியை மட்டும் 30 கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொள்வதாக முடிவாகிறது. ஆனால் ஒரு வருடம் கழித்து, தனது நண்பர் திருமலா பால் கம்பெனியின் உரிமையாளரான பிரம்மானந்த தண்டாவை, ராமமூர்த்தியிடம் அறிமுகப்படுத்தி, மொத்த இடத்தையும் வாங்க ஏற்பாடு செய்கிறார் வீரமணி. இடம் விற்பனை யானது தெரிந்ததும் பழைய பார்ட்னர்கள் தங்களது பங்கை கேட்டு நெருக்கடி தருகின்றனர். சென்னையில் ஒரு ஸ்டார் ஓட்டலில் வீரமணி முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கிறது.
இப்படி ஏகப்பட்ட சுத்தல்கள் இருக்கும் போதே அந்த இடத்தைக் கைப்பற்ற களத்தில் இறங்குகிறார் அமைச்சர் வீரமணி. இது குறித்து வேலூர் எஸ்.பி.யிடமும் டி.ஐ.ஜி.யிடமும் புகார் கொடுத்தும் பலனில்லாததால், மேலிட மாளிகை யின் செயலாளர் உதவியை ராமமூர்த்தியும் ஜெயப்பிரகாஷும் நாடுகிறார்கள். அங்கிருந்து வந்த உத்தரவுக்கும் மதிப்பில்லாததால், வீரமணியின் சொத்து விபரங்களோடு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்கிறார்கள். ஃப்ளாஷ்பேக் ஓவர்.
இப்படிப்பட்ட நிலையில்தான் டெல்லியி லிருந்து ஸ்பெஷலாக அனுப்பப்பட்ட வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தலைமையில் தமிழக அதிகாரிகளும் கைகோர்த்து அமைச்சர் வீரமணியின் ஜோலார்பேட்டை, திருமண மண்டபம், ஏலகிரி, திருப்பத்தூரில் உள்ள ஹோட்டல்கள், வீரமணியின் பினாமி சிவக்குமாரின் வீடு, திருமலா பால் கம்பெனி, ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் வீடுகள் என 30 இடங்களில் ரெய்டு அடித்திருக்கிறார்கள். இந்த ரெய்டில் சிக்கியது ஒரு "கைப்பை' மட்டுமே என்கிறார்கள்.
""பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்வதை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருபவர் வீரமணி. அந்தக் கோபம்தான் இப்போது ரெய்டாக வந்து நிற்கிறது''’ என்கிறார்கள் வேலூர் அ.தி.மு.க. புள்ளிகள்.