Skip to main content

2024; விடைதெரியா ம...ரணங்கள் 

Published on 28/12/2024 | Edited on 31/12/2024
 2024; Unanswered deaths

இதோ இன்னும் சில நாட்களில் விடை கொடுக்க காத்திருக்கிறது '2024'. 2000 ஆவதுகால ஓட்டத்தில் கால் நூற்றாண்டை தொட காத்திருக்கிறது உலகம். புத்தாண்டு நாளில் புதிய வேட்கைகளும், ஏற்றங்களும், நம்பிக்கைகளும் இடம் பிடித்திருக்க வேண்டியதைப் போல் வாழ்க்கையில் மறவாத சில சறுக்கல் நிகழ்வுகளையும் பின்னோக்கி பார்ப்பது அவசியமாகிறது. இன்பம் மட்டுமல்ல சில தும்பியல் நிகழ்வுகளும்தானே வாழ்க்கை. அந்த வகையில் 2024 ல்  நாம் சந்தித்த சில துயரங்கள், மரணங்கள், வடுவாகிப்போன ரணங்களை தொகுப்பாக்கிறது இந்த வரைவு.

மக்களை விழுங்கிய மலை மண்

 2024; Unanswered deaths

தொடர் கனமழையால் கேரளம் ஸ்தம்பித்திருந்த நேரம் அது. சுமார் நள்ளிரவு ஒரு மணி அளவில் வயநாடு மாவட்டம் முண்டக்கை மலைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவு தூங்கிக் கொண்டிருந்த பல பேரின் உயிர்களை அவர்களுக்கு தெரியாமலேயே பறித்திருந்தது. சுவடு கூட தெரியாமல் அழிந்த நிலத்தில் கண்ணீருடன் தத்தளித்த மக்களும் மழலைகளும் தஞ்சமடையக் கூட இடமில்லாமல் தவித்த நாளானது அந்த நாள் (30/7/2024). சூரல்மலை என்ற இடம் வரை சுமார் இரண்டு கிலோ மீட்டருக்கு ஏராளமான வீடுகள் அடித்துச் சென்ற இந்த பேரிடர் ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் 420 உயிர்கள் பறிபோனது. 397 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். 2024-ல் பல உயிர்களைப் பலிகொண்ட சம்பவமாக வயநாடு சம்பவம் வரலாற்றில் இருப்பது பெரும் சோகத்தில் ஒன்று.

கள்ளச்சாராயத்திற்கு இரையான கள்ளக்குறிச்சி

 2024; Unanswered deaths

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகர்ப் பகுதியான கருணாபுரம் பகுதியில் (20/06/2024) அன்று பலர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் முன்னதாக நான்கு பேர் உயிரிழந்த நிலையில் மரணத்திற்கு கள்ளச்சாராயம் காரணமல்ல என்பதைப் போன்று வெளியான முரண்பட்ட தகவல்களால் இறந்தவர்கள் வீடுகளுக்கு துக்கம் விசாரிக்க வந்தவர்கள் கள்ளச்சாராயம் அருந்ததியில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் அந்த நேரத்தில் ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தில் அரசின் அறிக்கை படி இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர். முரண்பட்ட தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் அன்றைய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார். அவர் மட்டுமல்லாது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட ஒன்பது பேர் இந்த சம்பவம் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். 

காவல் நிலையத்திற்கு சில மீட்டர் தூரத்திலேயே கள்ளச்சாராயம் சட்ட விரோதமாக விற்கப்படுவதாக அந்த பகுதி மக்களிளே நேரடியாக குற்றச்சாட்டு வைத்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தது. இக்குற்றத்தோடு தொடர்புடைய 24 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 17 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இச்சம்பவத்தின் இறுதி வடிவாக தற்பொழுது சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு நிலுவையில் தொடர்ந்து வருகிறது. 67 பேர் உயிர்களை பலி கொண்ட கள்ளச்சாராயம் மரணம் இந்த ஆண்டின் பெரும் சோகம்தான்.

மாயமான சிறுமி சாக்கடையில் சடலமான பேரதிர்ச்சி 

 2024; Unanswered deaths

ஒட்டுமொத்த புதுச்சேரியே அதிர்ந்திருந்தது அந்தச் சம்பவத்தால். புதுச்சேரி பகுதியில் உள்ள சோலை நகர் என்ற இடத்தில் ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி ஐந்தாம் வகுப்பு பயின்று வந்த 9  வயது சிறுமி ஒருவர் காணாமல் போயிருந்தார். அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று சகஜமாக விளையாடி மகிழ்ந்து வந்த நிலையில் சிறுமி காணாமல் போனதுதான் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. நேரடி விசாரணை, சிசிடிவி ஆய்வு என போலீசாரின் பலகட்ட தேடலுக்கு பிறகு அதே பகுதியில் உள்ள அம்பேத்கர் நகரில் சாக்கடை வாய்க்காலில் கை, கால்கள் கட்டப்பட்டு போர்வையால் சுற்றப்பட்ட சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞனும், விவேகானந்தன் என்ற 59 வயது கொண்ட நபரும் சேர்ந்து சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றது தெரியவந்தது.

மயங்கி விழுந்த சிறுமியை இருவரும் கொலை செய்து மூட்டையில் கட்டி சாக்கடையில் வீசிய அந்த பேரதிர்ச்சி புதுச்சேரி மக்கள் மட்டுமல்லாது தமிழகத்தையே உலுக்கி இருந்தது. போலீசாரின் தொடர் விசாரணையில் கைது செய்யப்பட்ட கருணாஸ் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவன் என்பது தெரிய வந்தது. சிறுமியை கொலை செய்த நபர்களை விடவேக் கூடாது என அந்த பகுதி மக்கள் கொதித்தெழுந்தனர். இந்த சம்பவத்தில் கருணாஸ், விவேகானந்தன் கைது செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் சிறையில் இருந்த விவேகானந்தன் சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது. 

சிறுமியின் இறுதி ஊர்வலத்தில் புதுச்சேரி மக்கள் கண்ணீர் மல்க கலந்து கொண்டதும் சிறுமி பயன்படுத்திய விளையாட்டு பொம்மைகள், புத்தகப் பை ஆகியவற்றை அவருடைய உடலுடனே எடுத்துச் சென்று அடக்கம் செய்ததும் புதுச்சேரிக்கு சோக முகத்தை கொடுத்தது.

'இன்னும் ஒரு ராமஜெயம்...' அதிர்ச்சியை கொடுத்த அடுத்தடுத்த நாட்கள் 

 2024; Unanswered deaths

விடை தெரியா மர்மமாக தற்போது வரை நீடிக்கிறது நெல்லை காங்கிரஸ் பிரமுகரின் கொலை. திசையன்விளை பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் தனசிங் (60) நெல்லையின் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தார். கட்சி பிரமுகராக மட்டுமல்லாமல் தொழிலதிபராகவும் அந்த பகுதியில் வலம் வந்த ஜெயக்குமார் தனசிங், (02/05/2024) அன்று வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவே இல்லை. குடும்பத்தினரும் உறவினர்களும் ஜெயக்குமார் தனசிங்கை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அடுத்த நாளே(03/05/2024) காவல்துறைக்கும் புகார் கொடுக்கப்பட்டது. அவருடைய செல்போன் எண்ணை வைத்து போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் இறுதியில் கரைச்சுத்து புதூர் பகுதியில் உள்ள வீட்டின் பின்புற தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் அதற்கடுத்த நாளே (04/052024) சடலமாக மீட்கப்பட்டார்.உடல் பாதி எரிந்தும், கற்களால் சில இடங்கள் தாக்கப்பட்டு இருந்ததாலும் இது கொலையாக இருக்கலாம் என போலீசார் விசாரணையை தொடங்கி இருந்தனர்.

அதற்கு முகாந்திரம் இருக்கும் வகையில் அவருடைய மருமகனுக்கு சிலர் பெயர்களை குறிப்பிட்டு ஜெயக்குமார் தனசிங் கடிதம் எழுதி இருந்தது ஐயப்பாடை அதிகமாக்கியது. ஆனால் மறுபுறம் இது தற்கொலையா கொலையா என்ற கேள்விகளே நீண்டு இருந்தது. கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் தானாக குப்புற விழ வாய்ப்பில்லை என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் நிகழ்ந்தது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணையை தொடக்க, அடுத்த கட்டமாக சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு தற்பொழுது வரை விசாரணையில் இருந்து வருகிறது. திமுக பிரமுகர் ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்பொழுது வரை யார் குற்றவாளி என தெரியாமல் விசாரணை தொடர்ந்து வரும் சம்பவம் போல அதே பாணியில் காங்கிரஸ் நிர்வாகி மரணத்திலும் நீடிக்கிறது அதே மர்மம்.

பகிரங்க கொலை... தமிழகமே பற்றி எரிந்த ஆம்ஸ்ட்ராங் தீ

 2024; Unanswered deaths

மேலே குறிப்பிடப்பட்ட காங்கிரஸ் நிர்வாகியின் கொலைக்கும் நேர் எதிரான சம்பவம் இது. தமிழகத்தை அன்றைய நாளில் புரட்டிப்போட்ட சம்பவமும் இதுவே. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் (05/07/2024) அன்று பட்டப்பகலில் பகிரங்கமாக திட்டமிட்டு பல நபர்களால் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. காய் நகர்த்தி காய் நகர்த்தி பல்வேறு திட்டமிடல்களுக்குப் பிறகு இந்த கொலை அரங்கேறியது போலீசார் விசாரணையில் அடுக்கடுக்கான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக்கொலை தொடர்பான அந்த சிசிடிவி காட்சியை இப்போது பார்த்தாலும் கொலை நடுங்கும். பெயர் போன ரவுடிகள் முதல் பிரபல கட்சிகளின் நிர்வாகிகள் என 28 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் இதுவரை என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல இவ்வழக்கில் பல நபர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக தற்பொழுது வரை இருந்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட 28 பேரில் 19 பேர் குண்டர்  சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். 30 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாக பிரபல ரவுடி ராகவேந்திரனும் ஏ2 குற்றவாளியாக சம்போ செந்திலும் இடம் பெற்றுள்ளனர். ஆறு மாதங்கள் திட்டமிட்டு 'ரெக்கி ஆபரேஷன்' என்ற பெயரில் நடத்தப்பட்ட திட்டத்தில் ஆர்ம்ஸ்டராங் கொலை செய்யப்பட்டதாகவும் இக்கொலைக்கு 10 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொலை பகிரங்கமாக நடத்தப்பட்டது என்றாலும் கொலைக்கான காரணம் இன்று வரை தெளிவில்லாத மர்மமாகவே உள்ளது இவ்வழக்கில்.

வரிசைகட்டிய என்கவுண்டர்கள்

 2024; Unanswered deaths

தமிழகத்தில் அவ்வப்போது என்கவுண்டர் நடைபெறுவது வழக்கம் என்றாலும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகு அடுக்கடுக்காக வரிசை கட்டி நின்றது என்கவுண்டர்களின் எண்ணிக்கைகள். குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகாக ரவுடிகளை ஒழிக்கும் முயற்சியில் தமிழக காவல்துறை தீவிரமாக இறங்கியது. சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேடப்படும் குற்றவாளிகள், கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களை போலீசார் தீவிரமாக தேடினர். தேடுதலின் பொழுது ஏற்பட்ட தாக்குதல் நிகழ்வுகளின் காரணமாக பல ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்பட்டிருந்தனர். அதன்படி திருவேங்கடம், காக்கா தோப்பு பாலாஜி, ரவுடி துரை, சீஸிங் ராஜா உள்ளிட்ட பலர் இந்த வருடத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. அதேபோல் பலர் சுட்டுப்பிடிக்கப்பட்டிருந்தனர்.

உயிரைப் பறித்த படிக்கட்டு பயணம்... இனியேனும் முற்றுபெறுமா...?

 2024; Unanswered deaths

சமீபமாகவே பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணிக்கும் காட்சிகளும் பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் நிறைந்து வருகிறது. இப்படி ஒரு சம்பவத்தில் மகனை இழந்த தந்தை, மாணவர்கள் முன்னிலையில் கண்ணீர் விட்டு வைத்த கோரிக்கை தான் இந்த சம்பவத்தின் உச்சமே. வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் (26/11/2024) அன்று கடலூரில் பல இடங்களில் மழைநீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. அன்றைய நாள் மாலை பள்ளி மாணவர்கள் துரிதமாக வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் ஆபத்தான முறையில் பேருந்துகளில் பயணம் செய்து வீடு திரும்ப முன்றனர். அப்பொழுது மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று வந்த பதினோராம் வகுப்பு மாணவன் கைலாஷ் தேவனாம்பட்டிக்கு செல்லும் தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தில் கூட்டம் என்பதால் படியில் நின்ற மாணவன் கைலாஷ் திடீரென தவறி விழுந்த நிலையில் பேருந்தின் பின் சக்கரம் ஏறி உயிரிழந்தார்.

மீட்கப்பட்ட மாணவனின் உடல் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மகனுடைய மரணச் செய்தியை கேட்டு அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாணவன் கைலாஷ் பயின்று வந்த பள்ளியில் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் மாணவனுடைய தந்தை கலந்து கொண்டார். அப்போது அங்கு குழுமியிருந்த மாணவர்கள் மத்தியில் கைகூப்பி  'பசங்களா தயவு செஞ்சு படியில் நிக்காம உள்ள போயிடுங்க... என் புள்ள போய்ட்டான் பா. எப்ப பஸ்ஸில் ஏறினாலும் படிக்கட்டில் நிற்காதிங்கப்பா. உங்க கால்ல விழுந்து கேட்கிறேன்பா' என கண்ணீருடன் அழுதோடு, திடீரென தரையில் மண்டியிட்டு கண்ணீர் விட்டு தனது கோரிக்கையை வெளிப்படுத்தினார். 

பல ஆபத்தான பயணங்களை சமூக வலைத்தளங்கள் வாயிலாக நாம் பார்த்து வரும் நிலையில் தன் மகனின் இழப்பே கடைசியானதாக ஒன்றாக இருக்க வேண்டும் என கண்ணீரருடன் மண்டியிட்ட இந்த சம்பவம் சோகத்தின் உச்சமாகவே இருந்தது. இனியேனும் அலட்சிய பயணங்களும், உயிரிழப்புகளும் முற்றுபெறுமா...? என்ற கேள்வியை விதைத்துள்ளது.

கொங்குவை பதற வைத்த கொலை

 2024; Unanswered deaths

அதிகாலை நேரத்திலேயே வெட்டி சாய்க்கப்பட்ட மூன்று உடல்களும் கொங்கு பகுதியை பதற வைத்திருந்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் உள்ள சேமலை கவுண்டம்பாளையத்தில் நிகழ்ந்த இந்த கொலை சம்பவத்தில் தற்பொழுது வரை விசாரணை நீண்டு வருகிறது.

தெய்வசிகாமணி (வயது 76) என்பவரும், அவரது மனைவி அமலாத்தாள் (வயது 70) மற்றும் மகன் செந்தில்குமார் (வயது 46) ஆகியோர் பண்ணை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 29/11/2024 அன்று அதிகாலை வீட்டுக்கு வந்த சவரத் தொழிலாளி மூன்று பேரும் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவிநாசிபாளையம் போலீசார் மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில் கொலைக்கான காரணம் குறித்து தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது வரை இந்த கொலைச் சம்பவத்திற்கான காரணம் தெரியாமல் விசாரணை நீண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆன்மீக பூமியிலும் பேரதிர்ச்சி

 2024; Unanswered deaths

எதிர்பாராத சம்பவம் எனினும் ஆன்மீக பூமியை தூக்கமிழக்க செய்தது அந்த ஏழு பேரின் உயிரிழப்பு. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் ஃபெஞ்சல் புயல் காரணமாக பரவலாக மழை பெய்து வந்த நேரத்தில் திருவண்ணாமலையின் மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி நகர் பகுதியில் இரவு நேரத்தில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகளில் சேதமடைந்திருந்தாலும் ஒரே வீட்டுக்குள் மட்டும் பாறைகளும் மண் சகதிகளும் தேங்கி நின்றது.

அந்த வீட்டிற்குள் சிறுவர், சிறுமியர், பெரியவர்கள் என ஏழு பேர் இருந்ததாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தெரிவித்திருந்தனர். எப்படியும் அவர்களை மீட்டு விடலாம் என்ற எண்ணத்தில் மாநிலப் பேரிடர் மீட்புப்படை முதல் தேசிய பேரிடர் மீட்புப் படைவரை அங்கு முகாமிட்டனர். பல்வேறு சீதோசன நிலைகளுக்குப் பிறகு படிப்படியாக மீட்புப் பணிகள் நடைபெற்றாலும் இறுதியில் 7 பேரின் உடல்களும் சடலமாக மீட்கப்பட்டது. அதிலும் சிறுவர், சிறுமிகளின் சடலங்கள் தலை, கை, கால்கள் என தனித்தனியாக மீட்கப்பட்டது அன்றைய நாளில் சோகத்தின் உச்சமாக இருந்தது.

 

கொலைகளும், மரணங்களும் உங்களை ரணப்படுத்தி இருக்கலாம். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள். 'துயரங்கள் இல்லா...' நோ நோ எதார்த்தத்தில் அதற்கு வாய்ப்பில்லை எனினும், துயரங்கள் குறைவான ஆண்டாக 2025-ஐ நம்புவோம்... வரவேற்போம்...!