நேற்று இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் இந்தியா முழுவதும் 97 தொகுதிகளுக்கு நடைபெற்றது. குறிப்பாக தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கும், புதுச்சேரி 1 தொகுதியிலும் மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.
வழக்கம்போல தமிழ் திரையுலக பிரபலங்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் அவர்களுக்கான தகுந்த பூத்களில் சென்று தங்களின் ஜனநாயக கடைமையை ஆற்றினார்கள்.
பிரபலங்கள் வாக்கு செலுத்தியதுபோன்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவியதுபோல கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தமிழ்நாட்டிற்கு வந்து ஓட்டு செலுத்தியதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. பலரும் இது உண்மை என நம்பி சுந்தர் பிச்சையை பாராட்டினார்கள்.
கடந்த தீபாவளி அன்று விஜய் நடித்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘சர்கார்’ என்று ஒரு அரசியல் படம் வெளியானது. அதில் விஜய் உலகின் மிகப்பெரிய நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்துகொண்டு வாக்குச் செலுத்துவதற்காக தமிழ்நாடு வருவார். இதைபோல கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தமிழ்நாட்டில் நேற்று நடந்த தேர்தலுக்காக தன்னுடைய வாக்கை செலுத்தினார் என்று அந்த புகைப்படத்தை பகிர்ந்து வந்தனர்.
இது அனைவரும் வாக்குச் செலுத்த வாருங்கள் என்று மக்களுக்கு அறிவுரை செய்ய சரியாக இருந்தாலும் சுந்தர் பிச்சை தமிழகம் வந்து வாக்கு செலுத்தினார் என்பது தவறான தகவல் ஆகும்.
சுந்தர் பிச்சை என்னதான் தமிழ்நாட்டில் பிறந்த இந்திய பிரஜையாக இருந்தாலும் தற்போது அமெரிக்க வாழ் இந்தியராகதான் வாழ்ந்து வருகிறார். அதாவது அவருக்கு அமெரிக்காவில்தான் குடியுரிமை உள்ளது. இந்தியாவில் அவருக்கு குடியுரிமை இல்லை பின்னர், அவர் எப்படி இந்திய தேர்தலில் வாக்குச் செலுத்தமுடியும்.
சுந்தர் பிச்சை வாக்குச் செலுத்துவதற்காக வந்ததாக சமூக வலைதளத்தில் பரவும் புகைப்படம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சுந்தர் பிச்சை இந்தியா வரும்போது ட்விட்டரில் பதிவிட்டது. 2017ஆம் ஆண்டில் சுந்தர் பிச்சை இந்தியாவில் அவர் படித்த ஐஐடி கரக்பூர் கல்லூரிக்கு சென்றிருந்தார். அச்சமயத்தில் அந்த புகைப்படத்தை பதிவிட்டு, 24 வருடங்கள் கழித்து கல்லூரிக்கு திரும்பியதில் மகிழ்ச்சி என்று பதிவிட்டிருந்தார். அப்போது 3000 மாணவர்களுடன் கலந்துரையாடலும் செய்தார் சுந்தர் பிச்சை. 1993ஆம் ஆண்டுக்கு பின் முதன் முறையாக ஐஐடி கராக்பூருக்கு சுந்தர் பிச்சை அப்போதுதான் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்திய நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு கட்ட தேர்தல்களில் முடிவடைந்துள்ளன. மே 19ஆம் தேதி வரை மீதமுள்ள ஐந்து கட்ட தேர்தல்களும் நடைபெற்று, மே23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.