காவேரி உரிமை மீட்புக் குழுவும், தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையும் இணைந்து சென்னைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருப்புக் கொடியுடன், விமான நிலையத்தை முற்றுகையிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதனால் முக்கிய செயற்பாட்டாளர்கள் நேற்று இரவே பலரும் முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்டனர். இதனால் தலைவர்கள் உசாராகி இடம் மாறி தங்கினர். போலீஸ் வரம்பு மீறியதால் கிண்டி ரவுண்டான அருகில் கூடுவதென அறிவிக்கப்பட்ட முடிவில் மாற்றம் செய்ப்பட்டது.
அதன்படி விமான நிலையத்திற்கு எதிரே திரிசூலம் ரயில் நிலையம் அருகில் உள்ள கால்பந்தாட்ட திடலில் கூடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இது காவல்துறைக்கும், உளவுத்துறைக்கும் தெரியாது. அவர்கள் கண்ணீல் மண்ணை துவுவது என போராட்ட குழுவினர் முடிவு செய்தனர்.
காலை 08:45 க்கு போராட்டக்குழு தலைவர் தோழர்.மணியரசன் தலைமையில் தமிழ் தேசிய பேரியக்க தொண்டர்களும், மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் மஜக தொண்டர்களும், தனியரசு MLA தலைமையில் கொங்கு இளைஞர் பேரவையினரும் குழமத் தொடங்கினர்.
மோடி 9:40 மணிக்கு தரையிரங்குவதாக கூறப்பட்டதால், 9:30 மணிக்கு விமான நிலையத்தை நோக்கி முன்னேறுவது என திட்டமிடப்பட்டது. நேற்று, கிண்டி என அறிவிக்கப்பட்டு இருந்தால், போலீஸ் அங்கு மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்தது, அவர்கள் திரிசூலத்தில் கூடியதை எதிர்பார்க்கவில்லை. அதற்குள் ஊடங்கள் வந்துவிட்டன. தகவல் தெரிந்து அங்கு அதிவிரைவு வாகனங்களில் வந்து போலீஸ் சுற்றி வளைத்தது.
அப்போது மணியரசன், நாங்கள் எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றார். சீமானும், பாரதிராஜாவும் வரவிருக்கிறார்கள். எங்கள் தொண்டர்கள் ரயில் வழியே வருகிறார்கள். 9:30 வரை பொறுத்திருங்கள் என தமிமுன் அன்சாரி கூறினார். தனியரசு எம்எல்ஏ அவர்கள் உயர் அதிகாரிகளிடம தொடர்பு கொண்டு அதையே வலியுறுத்தினார். முதலில் அதை கேட்டு கொண்ட அதிகாரிகள், பிறகு மேலிடத்திலிருந்து ஏதோ உத்தரவு வந்ததும், உடனே கைது செய்ய தொடங்கினர்.
அதற்குள், அணி அணியாக போலீஸார் அந்த இடத்திற்கு லத்தியோடு வந்தனர். போலீஸ் - வாக்கிகள் அலறின. தோழர் சீமான். தமிமுன் அன்சாரியை தொடர்புக் கொண்டு, வந்துக் கொண்டிருப்பதாக தகவல் கூறினார். ஆங்காங்கே தடுப்புகள் வைத்து, போராட்டக்காரர்களை போலிஸார் வரும் வழியிலேயே மக்களை ஒன்று கூட விடாமல் தடுப்பதாகவும் கூறினார்.
அதற்குள் போலிஸார் இங்கு கூட்டத்தை நகர விடாமல் தடுத்ததும் தோழர் மணியரசனும், மஜக மாநில செயலாளர் சீனி முஹம்மதுவும், போராட்டக்காரர்களும் தரையில் படுத்துக் கொண்டு கைதாகமல் முழக்கங்களை எழுப்பி கொந்தளித்தனர்.
போலீஸ் அத்து மீறியதும், அவர்களது சங்கிலி தடுப்புகளை உடைத்து கறுப்புக் கொடியுடன் தமிமுன் அன்சாரியும், போராட்டக்காரர்களில் ஒரு குழுவும் திடலிருந்து, விமான நிலையத்தை நோக்கி ஒடத் தொடங்கியது. போலீஸ் இதை எதிர்பார்க்கவில்லை. அவர்களை பின் தொடர்ந்து ஓடியது, உடனே இன்னொரு போலீஸ் படை எதிரே வந்து தடுத்து நிறுத்தியது.
அதன் பிறகு தமிமுன் அன்சாரி, தனியரசு, மணியரசன், உள்ளிட்ட 100 பேரை விமான நிலையத்தை நோக்கி நகரவிடாமல் போலீஸ் கைது செய்து வாகனத்தில் ஏற்றியது. வேனில் ஏறியதும், பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, 9:30க்கு போராட்டம் தொடங்கப்படும் என சொன்னோம். தொண்டர்கள் வருவதற்கு முன்பாகவே எங்களை ஓன்றுக்கூட விடாமல் கைது செய்தது அராஜகம் என்றார்.
அதற்குள் இச் செய்தியை அறிந்த இயக்குனர் கெளதமன், தமிமுன் அன்சாரியை தொடர்பு கொண்டு, நானும், பாரதிராஜாவும், வெற்றி மாறனும், அமீரும், ராமும் நேரே காரில் விமான நிலையத்திற்குள் நுழைகிறோம் என்று கூறி, அதன்படியே நுழைந்து அங்கே திடீர் போராட்டம் நடத்தி விமான நிலையத்தை அதிர வைத்தனர்.
அதன் பிறகு P.R. பாண்டியன் தலைமையிலான விவசாய சங்க ஒருங்கினைப்பு குழு சார்பில் அசோக் லோதா, வேளச்சேரி குமார், கோபிநாத், துரைசாமி போன் போன்றோர் அடுத்து வந்து அதே திடலில் கைதாகினர்.
அடுத்த 10 நிமிடத்தில் தோழர் சீமான் தலைமையில் அதே இடத்தில் போராட்டக்காரர்கள் வந்திறங்கி, முழக்கங்களை எழுப்பி கைதாகினர்.
கிண்டி எனக் கூறிவிட்டு, போராட்டக்காரர்கள் திரிசூலத்தில், அதுவும் விமான நிலையத்திலிருந்து 5 நிமிட நடை பயண தூரத்தில், காவல் தடுப்புகளை ஏமாற்றிவிட்டு, அடுத்தடுத்து குவிந்தது காவல்துறையை நிலைகுலைய வைத்துவிட்டது.
அணி அணியாய் அனைவரும் கைதாகி வாகனங்களில் கருப்பு கொடியேந்தி, முழக்கங்களை எழுப்பியபடியே அணி வகுத்தனர். பெண்களும் குழந்தைகளோடு கைதாகி ஆர்பரித்தனர். பொதுமக்கள் சாலைகளில் வாகனங்களில் இருந்தவாறு கைகளை தூக்கி காட்டி ஆதரவு கொடுத்து பெரும் எழுச்சியாக மாறியது. பல்லாவரத்தில் பல மண்டபங்களில் அடுத்தடுத்து போராட்ட் காரர்கள் சிறை வைக்கப்பட்டனர்.
மஜக, நாம் தமிழர் கட்சி, தமிழ் தேசிய பேரியக்கம் , தமிழக கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப் படை, வன்னியர் சிங்கங்கள், தமிழக அனைத்து விவசாய சங்கத்தின் ஒருங்கினைப்புக் குழு, தமிழ்தேசிய மீட்பு குழு, அம்பேத்கார் பாசறை, மககள் ஜனநாயக இளைஞர் கழகம் உள்ளிட்ட பல கட்சிகள், அமைப்புகளின் தொண்டர்கள் வழியெங்கும் கைதாகியபடியே மண்டபங்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
இதில் இவர்களோடு எந்த கட்சியும், இயக்கமும் சாராத மிக அதிகமான I T துறை இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் கைதானது குறிப்பிடதக்கது .
'எங்கள் தமிழக தலைவர்களை சந்திக்காத .. வஞ்சக நரேந்திர மோடியே.. திரும்பி போ.. திரும்பி போ' 'வேண்டும் வேண்டும்.. காவிரி மேலான்மை வாரியம் வேண்டும்' என்ற முழக்கங்களுக்கிடையே, இருண்ட முகத்துடன் சென்னையில் தரை இறங்கினார் மோடி.
சாலை வழியே செல்ல முடியாமல் நரேந்திர மோடி அவர்கள் விமானத்தில் இறங்கி. ஹெலிகாப்டர் மூலம் நிகழ்ச்சிக்கு பறந்து சென்றது தமிழர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.
நேரில் கருப்பு கொடிகளை பார்க்கமுடியாது என்பதால், மோடி எதிர்ப்பு களை பார்க்க வேண்டும் என்பதற்காக விமான நிலையத்தை சுற்றி கருப்பு பலூன்கள் ஆகாயத்தில் விடப்பட்டன. முப்பதாண்டுகளில் தமிழகத்தில் இவ்வளவு எதிர்ப்புகளை சந்தித்த ஒரே பிரதமர் மோடி தான்.