Skip to main content

கொடநாடு வழக்கில் புதிய திருப்பம்! நக்கீரன் புலனாய்வில் அம்பலமான ரகசியம்! 

Published on 11/12/2021 | Edited on 11/12/2021

 

New twist in Kodanadu case! Secret Revealed in Nakkheeran Investigation

 

கொடநாடு கொலை வழக்கில் நக்கீரன் நடத்திய தொடர் புலனாய்வில், முக்கிய குற்றவாளிகளான சயானும், கனகராஜும் வந்த பாதையை நக்கீரன் ஆய்வு செய்து, கொடநாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்கள் யாரிடம் கொடுக்கப்பட்டது என்பதும் அது எப்படி எடப்பாடி பழனிசாமி கையில் போய்ச் சேர்ந்தது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

 

கொடநாட்டில் கொள்ளையடித்துவிட்டு ஒரு காரில் கனகராஜும் சயானும் புறப்பட்டார்கள். அவர்களுக்கு அப்போது கொடநாடு கொள்ளையின்போது காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டது தெரியாது. கொடநாட்டில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் அறையிலிருந்த முன்னாள் அமைச்சர்களான ஓ.பி.எஸ்., நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் சொத்து டாக்குமெண்ட்டுகளை எடுத்துக்கொண்டு புறப்பட்ட கனகராஜுக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணமிருந்தன.

 

New twist in Kodanadu case! Secret Revealed in Nakkheeran Investigation

 

எல்லாமே இண்டர்நெட் கால் எனப்படும் பிரைவேட் நம்பர்களிலிருந்து பேசப்பட்டது. அதில் ஒரு ஃபோன்தான் கொடநாட்டில் ஓம்பகதூர் என்கிற காவலாளி கொள்ளையின்போது இறந்துவிட்டார் என சொன்னது. பதற்றமடைந்த கனகராஜ், பல்வேறு எண்களுக்கு வாட்ஸ்அப் கால்களில் பேசினார். சயானும் பலரிடம் பேசினார். (இப்போது சயானுக்கு அந்த எண்கள் பற்றி ஞாபகமில்லை என போலீசில் தெரிவித்திருக்கிறார்).

 

New twist in Kodanadu case! Secret Revealed in Nakkheeran Investigation
மாதிரி படம் 

 

அங்கிருந்து புறப்பட்ட கனகராஜ், கொடநாட்டிலிருந்து கோத்தகிரி வழியாக கோவை வருகிறார். கோவை நகரத்தில் சுங்கம் பகுதியில் அமைந்துள்ள சயானின் அறைக்குச் சென்று காலைக்கடன்களை முடித்துவிட்டு கோவையிலிருந்து பைபாஸ் சாலை வழியாக சேலம் நோக்கி பயணிக்கிறார். அவருடன் வந்த சயானை அந்த சாலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அமைந்துள்ள டோல்கேட்டை தாண்டியவுடன் உட்கார வைத்துவிட்டு, எதிர்ப்புறம் சாலையில் காரில் அவருக்காக காத்திருந்த அண்ணன் தனபாலை சந்திக்கிறார்.

 

கொடநாடு கொள்ளையை முடித்துவிட்டு வந்த தம்பி கனகராஜை, பெருந்துறைக்குச் செல்லும் சாலையில் கோவை - சேலம் வழியில் சந்திக்கும் இடத்தில் கட்டிப்பிடித்துப் பாராட்டிய அண்ணன் தனபால், கனகராஜுக்கு புதிய செல்ஃபோன்களையும், சிம் கார்டுகளையும் பரிசளிக்கிறார். அவற்றைப் பெற்றுக்கொண்டு புதிய எண்களுக்கு வந்த இண்டர்நெட் கால்களை அட்டண்ட் செய்தபடி சயானுடன் பயணிக்கிறார். (இந்த ஃபோன் கால்களையெல்லாம் போலீசார் கண்டுபிடித்துவிட்டனர்.)

 

அவர் நேராகச் சென்றது சேலம் புறநகர்ப் பகுதியான அரியானூர் என்கிற இடத்திற்கு. அங்கு ஒரு பழைய பேக்கரியும் செல்ஃபோன் கடையும் இருக்கிறது. அங்கே சயானை அமர வைத்துவிட்டு கொடநாட்டில் கொள்ளையடித்த டாக்குமெண்ட்டுகளோடு அரைமணி நேரம் காரில் பயணித்து யாரோ ஒருவரிடம் கொடுத்துவிட்டு வந்தார் என்கிறார் சயான்.

 

சயானின் இந்த ஸ்டேட்மெண்ட்டை வைத்து அவர்கள் இருவரும் எந்த இடத்திற்குப் போனார்கள் என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் நக்கீரன் இறங்கியது. ஆனால் சயான் ஊட்டியைவிட்டு வெளியே போகக் கூடாது என நீதிமன்றம் நிபந்தனை விதித்திருக்கிறது. அதனால் சயானை அழைத்துக் கொண்டு செல்லக் கூடாது என தடை விதித்தார்கள் போலீசார். ஊட்டி நகர அரசு வக்கீலான ஆனந்த்தும் சயான் ஊட்டியைவிட்டு வெளியே போகக் கூடாது என தடை விதித்தார்.

 

இந்த வழக்கில் அடிப்படையான இந்த உண்மையை கடந்த 4 வருடங்களாக போலீசார் ஏன் கண்டுபிடிக்கவில்லை என போலீசாரிடமும் வழக்கறிஞர் ஆனந்த்திடமும் வாதிட்டோம். அவர்கள், நிபந்தனை ஜாமீனில் உள்ள சயான் அந்த நிபந்தனைகளை மீறினால் மீண்டும் சிறைக்குச் செல்ல நேரிடும் என எச்சரித்தார்கள். எனவே சயானை வீடியோ காலில் வைத்துக்கொண்டு, அவர் கொடநாட்டிலிருந்து எப்படி சேலம் போனார் என கிட்டத்தட்ட 3 மணி நேரம் அவருடன் பேசிக்கொண்டே பயணித்தோம்.

 

கோத்தகிரி வழியாக கோவைக்கு வந்த சயான், அங்கிருந்து நேராகப் பெருந்துறை செக் போஸ்ட்டைக் கடக்கும்வரை சரியாக பாதைகளை சொல்லிக்கொண்டே வந்தார். பெருந்துறைக்குச் செல்லும் அறிவிப்பு பலகை அமைந்துள்ள சாலையில் வந்து தனபாலை கனகராஜ் சந்தித்துவிட்டு சென்றார் என அந்த இடத்தை அடையாளம் காட்டினார்.

 

New twist in Kodanadu case! Secret Revealed in Nakkheeran Investigation

 

சயானும் கனகராஜும் பயணிக்கும் 2017 காலகட்டத்தில், சேலம் - கோவை சாலையில் பாலங்கள் இல்லை. எடப்பாடி முதலமைச்சராக இருக்கும்போது அவர் ஏகப்பட்ட பாலங்களைக் கட்டி சாலையின் அமைப்பையே மாற்றிவிட்டார். நம்முடன் வீடியோ காலில் பேசியபடி வந்த சயானுக்கு அந்த இடங்கள் அடையாளம் தெரியவில்லை. சுமார் ஒன்றரை மணிநேரம் சேலத்தை சுற்றி வந்தோம். அவர் சொன்ன முக்கிய அடையாளமான பேக்கரியும், செல்ஃபோன் கடையும் ஒருங்கே அமைந்துள்ள இடம் மாறாமல் அரியானூர் பகுதியில் இருந்தது.

 

அந்தக் கடைகள் 2017ஆம் ஆண்டிலிருந்து அங்கேயே அப்படியே இருக்கிறதா என கேட்டு உறுதிசெய்துவிட்டு சயானுக்கு காட்டினோம். அவர் தனது நினைவலைகளை உரசிப் பார்த்து வீரபாண்டிக்குப் பக்கத்தில் உள்ள அரியானூரில்தான் கனகராஜ் என்னை இறக்கிவிட்டார் என்று கூறினார். அந்த சாலையின் ஒட்டுமொத்த கட்டமைப்புமே 2019இல் அங்கு கட்டப்பட்ட பாலத்தினால் மாறிவிட்டது. மறுபடியும் மறுபடியும் சயானுக்கு அந்த பகுதிகளைக் காட்சிப்படுத்தி உறுதிசெய்துகொண்டோம். ஆனால் அங்கிருந்து, கனகராஜ் அரைமணி நேர பயணத்தில் எங்கு சென்றார் என சயானுக்கு தெரியவில்லை. அங்கிருந்து வீரபாண்டி வழியாக ஆட்டையாம்பட்டி மற்றும் திருச்செந்தூர் போகக்கூடிய சாலையில்தான் கனகராஜ் சென்றார் என சயான் கூறினார். நாம் அந்த சாலையை நோக்கி செல்லும்போது அங்கு ஒரு பெரிய அதிமுக மன்றம், எடப்பாடி பழனிசாமி, சேலம் இளங்கோவன் படத்துடன் அமைந்திருந்தது.

 

New twist in Kodanadu case! Secret Revealed in Nakkheeran Investigation

 

நாம் அங்கிருந்த ஆட்டோ டிரைவர்களிடம் "இளங்கோவன் இங்கு வருவாரா?'' எனக் கேட்டோம். இளங்கோவனின் வீடு புத்திரகவுண்டம்பாளையம் என்றாலும் இந்தப் பகுதியில் கனகராஜ் சயானை இறக்கிவிட்ட அரியானூரிலிருந்து 4கி.மீ. தொலைவில் உள்ள ஆட்டையம்பட்டி என்கிற ஊருக்கு அடிக்கடி வருவார் என்று சொன்னார்கள். நாம் ஆட்டையம்பட்டிக்குச் சென்றோம். அங்குள்ள அதிமுக மற்றும் திமுக பிரமுகர்களிடம் "இளங்கோவன் யார் வீட்டுக்கு வருவார்?'' என விசாரித்தோம். "ஆட்டையம்பட்டியிலுள்ள டி.பி.எஸ். திரையரங்கத்திற்கு எதிரே உள்ள ஒரு வீட்டிற்கு இளங்கோவன் வருவார்'' என்று அவர்கள் சொன்னார்கள்.

 

அந்த வீடு டி. சிவக்குமார் என்பவருக்கு சொந்தமானது. அந்த சுமாரான கிராமத்தில் இரண்டு பிரம்மாண்டமான வீடுகளை சாலை ஓரத்திலேயே சிவக்குமார் கட்டியிருந்தார். ராஜபாளையம் என்கிற ஊராட்சிக்குத் தலைவராக முன்பு பதவி வகித்தவர் இந்த சிவக்குமார்.

 

திமுகவிலிருந்து அதிமுகவிற்கு சென்ற இவர், இளங்கோவனுக்கு மிக நெருக்கமான நண்பரானார். காலப்போக்கில் அவரது பினாமியாகவும் மாறினார். இளங்கோவன் வீட்டிற்கு காலையும் மாலையும் தவறாமல் செல்வது சிவக்குமார் வழக்கம். சிவக்குமாரின் வீட்டிற்கும் இளங்கோவன் வந்து செல்வார். ஜெயலலிதாவிடம் டிரைவராக இருந்த கனகராஜும், இளங்கோவனுக்கும் சிவக்குமாருக்கும் பழக்கமான நண்பர்கள் என ஆட்டையம்பட்டியைச் சார்ந்த திமுக மற்றும் அதிமுக பிரமுகர்கள் நம்மிடம் தெரிவித்தார்கள்.

 

New twist in Kodanadu case! Secret Revealed in Nakkheeran Investigation

 

அரியானூரிலிருந்து அரைமணி நேரத்தில் சென்று திரும்புவது என்றால் ஆட்டையம்பட்டியிலுள்ள சிவக்குமாரின் வீட்டிற்குத்தான் கனகராஜ் வந்திருக்க வேண்டும். அவர் அங்கு அடிக்கடி வருவார் என ஆட்டையம்பட்டியிலுள்ள அரசியல்வாதிகள் தெரிவித்தார்கள்.

 

நாம் நேராகச் சென்று சிவக்குமார் வீட்டை படம் எடுத்தோம். நாம் படமெடுப்பதைக் கண்ட சிவக்குமார், 4, 5 பேர் புடைசூழ வந்து... "நீங்கள் யார்?'' எனக் கேட்டார். நாம் அவரிடம் "உங்களிடம் பேச வேண்டும்'' எனக்கூறி, "உங்களுக்கு இளங்கோவனை தெரியுமா?'' எனக் கேட்டோம். அவர், "தெரியும் எதற்காகக் கேட்கிறீர்கள்?'' என்று திருப்பிக் கேட்டார்.

 

நாம், "கொடநாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட அமைச்சர்களின் சொத்து ஆவணங்களை உங்களிடம்தான் கொண்டுவந்து கொடுத்தார் என ஆட்டையம்பட்டியில் உள்ளவர்கள் உங்களுக்கும், ஜெயலலிதாவின் டிரைவர் கனகராஜுக்கும், இளங்கோவனுக்கும் உள்ள முக்கோண நட்பை அடிப்படையாக வைத்துச் சொல்கிறார்கள்'' என்றோம். அவர் அதை ஏற்கவில்லை. மறுத்தார்.

 

ஆனால், இந்த விவரத்தைப் பற்றி நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரிகள் அனைவரும், "இது உண்மையாக இருக்க 100 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறது'' என்று நக்கீரனின் புலனாய்வு பயணத்தைப் பாராட்டினார்கள்.

 

போலீசின் பயணமும் தெளிவாக இருந்தால் குற்றவாளிகள் தப்பவே முடியாது.

 

 

Next Story

கொடநாடு பங்களாவில் சி.பி.சி.ஐ.டி. ஆய்வு!

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
C.b.C.I.D search in KodaNadu Bungalow

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 10 பேர்  ஈடுபட்டது தெரியவந்தது. இதில் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சி.சி.டி.வி. ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி முதல் இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த ஒரு ஆண்டாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி. முருகவேல் நியமிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உதகை நீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் என்பவர், கொடநாடு பங்களாவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தடயங்களை அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதால் நீதிமன்றத்தின் சார்பில் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இதற்கு பதிலளிக்குமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அப்போது நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார், தடயவியல் துறையினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின் துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் கொடநாடு பங்களாவிற்கு ஆய்வு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. தரப்பில் மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கொடநாடு பங்களாவை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கொடநாடு எஸ்டேட்டில் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. மாதவன் தலைமையில் விசாரணை அதிகாரி ஏ.டி.எஸ்.பி. முருகவேல், புலனாய்வு அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் மின் துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் என 20 பேர் கொண்ட குழுவினர் இன்று (07.03.2024) நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வின் போது கொடநாடு பங்களாவில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவா என சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு உதகை அமர்வு நீதிமன்றத்தில் நாளை (08.03.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

'சர்ச் வாரண்ட் ரெடி'- தீர்வைத் தேடும் 'கொடநாடு'

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
'Search Warrant Ready'- Kodanadu looking for a solution

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இதில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. ஓட்டுநர் கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த 23/02/2024  அன்று நடந்த வழக்கு விசாரணையில் கொடநாடு பங்களாவில் ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. அன்றைய தினம்  உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசாரும், அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாளையார் மனோஜ், சயான் ஆகிய இருவர் மட்டுமே ஆஜராகினர்.

கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற கொடநாடு பங்களாவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாலும், அதை நீதிபதி நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என எதிர்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் என்பவர் கடந்த வழக்கு விசாரணையில் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சிபிசிஐடி தரப்பில் ஏற்கெனவே கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழு அமைத்திருப்பதாகவும், அந்தக் குழு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்தனர்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சம்பந்தப்பட்ட பங்களாவில் ஆய்வு செய்ய அனுமதிப்பதாகவும், ஆய்வின் போது ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்வதை முழுமையாக வீடியோ பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அங்கு இருக்கக்கூடிய தடயங்களை அழிக்கவோ அல்லது மாற்றவோ கூடாது என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் எட்டாம் தேதிக்கு  ஒத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில், வரும் வாரத்தில் சிபிசிஐடி கொடநாடு பங்களாவில் ஆய்வு நடத்த தற்போது நீதிமன்றம் தேடுதல் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவல்துறை மற்றும் மின்சாரம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழு வரும் வாரத்தில் கொடநாடு பங்களாவில்  ஆய்வு செய்வதற்கான தேடுதல் உத்தரவு (SEARCH WARRANT) கொடுக்கப்பட்டுள்ளது.