நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணராகத் திகழ்கிறார். இவர், உலகின் மிகப்பெரிய மதிய உணவுத் திட்டமான 'அக்ஷயபாத்ரா' திட்டத்தின் தூதராகவும் செயலாற்றுகிறார். 'வேர்ல்டு விஷன்' (World vision) என்ற அமைப்புடன் இணைந்து கிராமப்புற குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் சத்தான ஊட்டச்சத்து கிடைக்க வகை செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். தற்போது, கரோனா ஊரடங்கு சமயத்தில் கவனமாக இருக்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து மக்களுக்கு சில அறிவுறுத்தல்களை கொடுக்கிறார். திவ்யா சத்யராஜ் நம் வழியாக மக்களுக்கு தெரிவிப்பது...
"லாக்டவுன் காலத்தில் மருந்து கடைகளுக்கு வரவேண்டிய சப்ளை வராமல் இருக்கலாம். வெளியூர்களிலும், வெளிநாடுகளிலிருந்தும் வர வேண்டிய மருந்துகள் லாக்டவுனால் மருந்துக் கடைக்கு வந்து சேர முடியாது. அதனால் சில மருந்து கடைகளில் பழைய மருந்துகள் இருப்பு இருக்கலாம். மக்கள் அனைவரும் இந்த நேரத்தில் வாங்கும் மருந்துகளின் காலாவதி தேதியை கவனமாக பார்த்த பின்னரே வாங்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகளுக்கு வாங்கும் பால் பவுடர், க்ரீம், ஷாம்பூ, பேபி ஆயில் போன்ற அனைத்து பொருட்களின் காலாவதி தேதியை பார்த்து வாங்குவது மிக மிக அவசியம். காலாவதியான மருந்துகளை உபயோகிப்பதால் உடலில் பல உபாதைகள் வரலாம்.
மருந்து கடை வைத்திருப்பவர்களுக்கும் ஒரு வேண்டுகோள்... மக்கள் அனைவரும் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்து வைத்த காசில்தான் மருந்து வாங்க வருகிறார்கள். அவர்கள் வாங்கும் மருந்து அவர்களை குணப்படுத்தும் என்ற நம்பிக்கையில்தான் வாங்குகிறார்கள். தயவு செய்து உங்கள் கடைகளில் காலாவதியான மருந்துகளை டிஸ்போஸ் செய்ய ஒரு சிஸ்டம் அமைக்க வேண்டும்".
ஏற்கனவே மருத்துவ துறையின் முறைகேடுகள் குறித்தும், நீட் தேர்வை எதிர்த்தும் பிரதமருக்கு திவ்யா சத்யராஜ் எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.