ஜெ. உயிருடன் இருக்கும்போதே அவருடைய கட்சியில் இருந்துக்கொண்டே அவருக்கு எதிராக மல்லுக்கட்டியவர்,! " நான் மப்பில் இருக்கின்றேன்." என தூத்துக்குடி வாசிகளுக்கு பீதியை கிளப்பிய ஆடியோவினை வெளியிட்டவர், நீதிமன்றம் தடை விதித்திருந்தும் வழக்கறிஞர் ராமசாமியை திருமணம் செய்தவர் என அத்தனை "ர்"க்கும் காரணம் சசிகலா புஷ்பா. யார் இந்த சசிகலா புஷ்பா..? என்ற கேள்வியுடன் இருக்கும் நக்கீரன் வாசகர்களுக்கு...
தூத்துக்குடி மாவட்டம், முதலூரரை அடுத்த அடையல் கிராமம் தான் சசிகலா புஷ்பாவிற்கு சொந்த ஊர். அம்மா கௌரி தூத்துக்குடியில் தனியார் பள்ளி ஆசிரியை. அப்பா தியாகராஜனோ டிரைவர். தூத்துக்குடி ஹோலிகிராஸ் கான்வெண்டில் 10ம் வகுப்பு படிக்கும்போது உடன் படிக்கும் மாணவி ஒருவரையும், தற்பொழுது தூத்துக்குடி தட்சிணமாற நாடார் சங்கத்தில் டீக்கடை நடத்தி வருபவரையும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு சென்று விட்டு, பெற்றோரின் தேடுதலுக்குப் பிறகே தூத்துக்குடி வந்தவர். சசிகலா புஷ்பா பத்தாம் வகுப்பு படித்த தூத்துக்குடி ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அவருக்கு அளித்த மதிப்பெண் பட்டியலில் அவரது பிறந்த தேதி 22.05.1974 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவரது +2 மதிப்பெண் சான்றிதழிலோ பிறந்த தேதி 22.05.1976 என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பொழுதே அரசியலுக்கு அச்சாரம் போட்டுவிட்டார் சசிகலா புஷ்பா.
டீச்சர் டிரெய்னிங் படிப்பு முடித்துவிட்டு அம்மி மிதித்து, அருந்ததிப் பார்த்து அவர் திருமணம் செய்தது எலெக்ட்ரீஷியன் லிங்கேஸ்வரதிலகரை. (அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தைக் கைப்பற்ற வந்து குத்துப்பட்டு மூக்கில் ரத்தம் வடிய ஓடினாரே...? அவரேதான்.!). ஊரில் நிலைமை கொஞ்சம் சரியில்லாமல் போக சிங்கார சென்னை தான் கைக்கொடுத்தது சசிகலா புஷ்பா தம்பதியினருக்கு. பெயருக்கு நர்சரிப் பள்ளி ஆசிரியையாகவும், பணத்திற்கு அப்பொழுதே மசாஜ் சென்டரையும் நடத்தி வந்தவருக்கு தற்பொழுதைய மாண்புமிகு மீன்வளத்தின் கடைக்கண் பார்வை கிடைக்க, மசாஜ் என்னவோ வி.ஐ.பி.களுக்காக மாறி அண்ணாநகரில் மகளிர் ஹாஸ்டலையே நடத்தலானார்.
அதன் பின், தாது மணல் அதிபரின் நட்பு கிடைக்க அபார வளர்ச்சியினைத் தொட்டார் சசிகலா புஷ்பா.! தாதுமணல் அதிபரின் ஆசியுடன், திருநெல்வேலி மாவட்ட அ.தி.மு.க. மகளிரணி இணைச் செயலாளராக முதன்முதலாக பொறுப்பு. அதன் பின் தூத்துக்குடி மேயராக.!! அதே வேளையில், சென்னையில் டீம் ஐ.ஏ.எஸ். அகாடமி.! என்ற பயிற்சி மையத்தை தொடங்கி நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி மேயராக இருந்த குறுகிய காலத்தில் அவர் சம்பாதித்து மட்டும் ரூ.300 கோடிக்கும் அதிகம் என்கின்றனர் உள்ளூர் கட்சிக்காரர்களே..!
மேயராக இருக்கும்போதே ராஜ்யசபா வேட்பாளர் அவதாரம் எடுத்தவர், தன்னுடைய ராஜ்யசபா வேட்பு மணுவில் 2007ஆம் ஆண்டு பொது நிர்வாகத்துறையில் எம்.ஏ. பட்டமும், 2005ஆம் ஆண்டு சிங்கப்பூரில் உள்ள சதர்ன் கிராஸ் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத் துறையில் பட்டய படிப்பு படித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார் சசிகலா. ஆனால், அதற்கான ஆதாரம் சமர்ப்பிக்கபடவில்லை. அது போல், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் முனைவர் பட்டம் வழங்கியதும் தற்பொழுது வரை பெரும் சர்ச்சையே.!
ஏனெனில், பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகள் முழுநேர முனைவர் பட்டப் படிப்பில் சேர்ந்தவர்களுக்குதான் முனைவர் பட்டம் வழங்கப்படுவது வழக்கம். இப்படிப்பை முடித்து பட்டம் பெற குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாகிவிடும். சசிகலா புஷ்பா 3 ஆண்டுகள், 11 நாட்களில் (2015 அக்டோபர் 19ம் தேதி) தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையை சமர்ப்பித்திருப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்தது. முதுகலை படிப்பின்போது 53 சதவீத மதிப்பெண்களை மட்டுமே பெற்றிருந்த அவர், முனைவர் பட்டப்படிப்பில் 200க்கு 193 மதிப்பெண்கள் பெற்றதாக பல்கலைக் கழகம் தெரிவித்தது. அப்பொழுது தூத்துக்குடி மேயராகவும், அ.தி.மு.க. மகளிரணி மாநிலச் செயலாளராகவும், ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்துகொண்டு, எப்படி ஒரு பல்கலைக்கழகத்தில் முழுநேர ஆராய்ச்சி மாணவியாக சசிகலா புஷ்பா பயின்றிருக்க முடியும். 3 ஆண்டுகளில் ஆராய்ச்சியை முடித்து, முனைவர் பட்டம் பெற்றது சர்ச்சைகளை உருவாக்கியது. ஆனாலும் எடுபடவில்லை இப்பொழுது வரைக்கும்.
இதேக் காலக்கட்டத்தில், "37 வார்டு அதிமுக கவுன்சிலர் வெள்ளைப்பாண்டி கொலை வழக்கின் முதன்மை குற்றவாளி சசிகலா புஷ்பாவே.! வெள்ளைப்பாண்டியை கொலை செய்தது இவர் தான் என சசிகலா புஷ்பாவைக் குறிப்பிட்டு அவரது மகள் எஸ்.பி.யிடம் புகார் கொடுக்க, அது கிடப்பில் போடப்பட்டு வேறொரு ஆளை குற்றவாளியாக பிக்ஸ் செய்தது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராஜ்யசபா உறுப்பினரான பின் திமுக எம்.பி. திருச்சி சிவாவுடன் நெருக்கமாக இருந்ததாக சர்ச்சை எழுந்ததால், அ.தி.மு.க. மேலிடம் கண்டிக்க, அப்பொழுது அமைதியானவர் பின்னாளில் "ஜெ" இன்னொருவர் பிடியில் இருக்கின்றார். நடக்கும் குழப்பத்திற்கு அவர் தான் காரணம் என நேரடியாக எதிர்க்க ஆரம்பித்தார். அதன் பின் அவர் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டது தனிக்கதை. ஆனால், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாபுஷ்பா எம்.பி.யின் வீட்டில் வேலைபார்த்த இளம்பெண் பானுமதி, அவருடைய சகோதரி ஜான்சிராணி ஆகியோர் சசிகலாபுஷ்பா உட்பட குடும்பத்தினர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தூத்துக்குடியில் புகார் செய்ய வைத்து, சசிகலா புஷ்பா, அவருடைய கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப்ராஜா, சசிகலாபுஷ்பாவின் தாயார் கவுரி ஆகியோர் மீது புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாரினைக் கொண்டு வழக்குப்பதிவு செய்த வைத்தது ஆளும் அரசு. இதற்காக, நிரந்தரமாக டெல்லியிலேயே தங்கிவிட்டார் அவர்.
ஜெ.மறைவிற்கு பின் வெளிவந்த சசிகலா புஷ்பா தன்னுடைய கணவர் லிங்கேஸ்வர திலகனைக் கொண்டு கட்சியின் தலைமை அலுவலகத்தைக் கைப்பற்ற அனுப்பி, அடி வாங்க விட்டதும், அவரை விவகாரத்து செய்துவிட்டு தனக்கு ஆலோசகராக வந்த ராமசாமியை (மதுரையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தவர் என்று தெரிந்தும்) நீதிமன்ற உத்தரவினை மீறி 26/03/2018ல் திருமணம் செய்துள்ளார்.