Skip to main content

'அர்பன் நக்சல்' கிரிஷ் கர்னாட்... கலையும் கலகமும்! 

Published on 11/06/2019 | Edited on 11/06/2019

மாநிலத்தில் நாளை அரசு விடுமுறை விடப்படும் என்றும், மூன்று நாட்கள் தொடர் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் கர்நாடக மாநில அரசு கடந்த 10ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
 

krish karnat



மத்தியில் உயர் பொறுப்பில் உள்ளவர்களோ அல்லது மாநில முதல்வர்களோ எதிர்பாராத விதமாக மரணமடைந்தால், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மாநில அரசுகள், அரசு விடுமுறையை அறிவிக்கும்.  அப்படி ஏதேனும் தேசிய அல்லது மாநில அளவில் அந்த குறிப்பிட்ட தேதியில் நிகழ்ந்ததா என்றால், அந்த மாதிரியான எந்த சம்பவமும் நடைபெறவில்லை. அப்படியென்றால் மாநில அரசு விடுமுறை விடும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அந்த நபர் யார் என்றால் அவர் வேறு யாரும் அல்ல 80 வயதிலும் மத பிரிவினை வாதிகளின் அச்சுறுத்தலை எதிர்த்து குரல் கொடுத்த நடிகர் கிரிஷ் கர்னாட்.

இவரை நடிகர் என்று ஒற்றைப் புள்ளியில் சுருக்கினால், மதவாதிகளை விட அவருக்கு நாம் அதிகம் தீங்கிழைத்தவராகிவிடுவோம். ஆம்...அவர் வெறும் நடிகரல்ல. இலக்கியவாதி, நாடக ஆசிரியர், கதையாசிரியர் என பல முகங்களை கொண்டவர். அவரின் இந்த பன்முகத்திறமையை போன்றும் வகையில் அவருக்கு பத்மவிபூசன், பிலிம் பேர் போன்ற விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் உச்சபட்சமாக இலக்கிய உலகின் ஆஸ்கர் விருதாகப் போற்றப்படும் ஞான பீட விருதினை பெற்றுள்ளார். மகாராஷ்ட்ராவில் பிறந்த அவர், தனது கல்லூரி வாழ்க்கையை கர்நாடகாவில் தொடர்ந்தார்.

பின்னர் மேற்படிப்பை ஆக்ஸ்போர்டில் தொடர்ந்த அவர், ஆக்ஸ்போர்ட் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் தலைவராகவும் இருந்துள்ளார். பின்னர் கர்நாடகா வந்த அவர், நாடகக் கலைஞர்களோடு இணைந்து தனது வாழ்க்கையை தொடர்ந்தார். நாடகத்துடன் எழுத்தையும், இயக்கியத்தையும் தொடர்ந்தார். இந்தக் கால கட்டத்தில்தான் அவருக்கு சினிமா வாய்ப்புக்கள் அதிகம் வரத் தொடங்கின. எழுத்தில் தடம் பதித்தது போலவே சினிமாவிலும் தான் அசைக்க முடியாதவன் என்று மிக குறுகிய காலத்திலேயே நிரூபித்தார். 'காதலன்' படத்தில் தமிழக ஆளுநராக அவர் காட்டிய உடல்மொழியை சினிமாவை அறிந்த எவரும் மறக்கமாட்டார்கள். கடந்த 2017ம் ஆண்டு வெளிவந்த 'டைகர் ஜிந்தா ஹை' திரைப்படமே அவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம். 
 

 

krish karnat


கிரிஷ் கர்னாட் தன்னை நடிகராக, இலக்கியவாதியாக, எழுத்தாளராக மட்டும் சுருக்கிக்கொள்ள முற்படவில்லை. அநீதிக்கு எதிராக வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் குரல் கொடுத்தார். ஒற்றை தேச கொள்கைக்கு எதிராக கடுமையாக போராடினார். மொழித்திணிப்பு கொள்கைக்கு எதிராகப் பொங்கினார். இதனால்தானோ என்னவோ, மதவாதிகள் அவரின் உயிருக்கு அவர் இறக்கும் வரைக்கும் அச்சுறுத்தலாகவே இருந்தார்கள். எந்த அச்சுறுத்தலையும் கண்டு கலங்காத அவர், கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட போது மதவாதிகளுக்கு எதிராக தெருவுக்கு வந்தார்.

மதவாதத்தை அழிப்பதே தன்னுடைய வாழ்க்கை லட்சியமாகக் கொண்டு செயல்பட இருப்பதாக பிரகடனம் செய்தார். அரசியல்வாதிகள் போல் அதனை வெறும் வாக்குறுதிகளாக மட்டும் தராமல், சொல்லியவாறு செயலிலும் காட்டினார். கவுரியின் முதலாமாண்டு நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவர், தன்னுடைய கழுத்தில் 'அர்பன் நக்சல்' என்ற பலகையை மாட்டிக்கொண்டு, மதவாதிகளுக்கு மாரடைப்பு வரவைத்தார். கலையை சமூகத்திற்காகப் பயன்படுத்திய கலைஞனுக்கு என்றும் மரணமில்லை.