தஞ்சை மாமன்னர் ராஜ ராஜ சோழன் குறித்தும் அவரது ஆட்சிக்காலம் குறித்தும் ஒரு கூட்டத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் விமர்சித்துப் பேசியது புயலை கிளப்பியுள்ளது. ராஜ ராஜ சோழன் ஒடுக்கப்பட்டவர்களின் நிலத்தைப் பிடுங்கி அந்தணர்களுக்குக் கொடுத்ததாகவும் அவரது ஆட்சி இருண்ட ஆட்சி எனவும் இன்னும் சில கருத்துகளையும் ரஞ்சித் கூறியிருந்தார். வரலாற்று ஆய்வாளர்கள், அறிஞர்கள் பலர் ரஞ்சித்தின் கருத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். அரசியல்வாதிகளும் பல்வேறு சங்க, அமைப்பு பிரதிநிதிகளும் ரஞ்சித்தின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். யூட்யூபில் பிரபலமான 'புட்சட்னீ' ராஜ்மோகன் ரஞ்சித்தின் பேச்சிற்கு மறுப்பையும எதிர்ப்பையும் தெரிவித்து விரிவான விளக்கத்தைக் கொண்ட வீடியோவை வெளியிட்டிருந்தார். அவரை சந்தித்துப் பேசினோம்...
ராஜராஜ சோழன் பற்றி ரஞ்சித் தெரிவித்த கருத்துக்கு எதிரா நீங்க ஒரு வீடியோ போட்டிருந்தீங்க, அதற்கு எதிரான விமர்சனங்களும் உங்களுக்கு வந்திருந்தது, அதை எப்படி பாக்குறீங்க?
நல்லதுதாங்க... விமர்சனங்களை நான் எப்போதும் வரவேற்பேன். நம்மள விமர்சனம் பன்னி இப்ப ஒன்னும் புதுசாக வரல. எப்போதுமே விமர்சனம் பண்ணுவாங்க. இது ஒரு நல்ல ரீச். 90 சதவீத பேர் அதை பாராட்டினாலும், 10 சதவீத பேர் அதை விமர்சனம் பண்றாங்க. அதில் இருந்து என்னை எப்படி வளப்படுத்திக்கலாம்னுதான் நான் பார்ப்பேன்.என்னையும் சரி, ராஜராஜனையும் சரி, ரஞ்சித்தையும் சரி கொச்சை வார்த்தை போட்டு திட்றவங்களை புறக்கணிச்சிட்டு போயிடுவேன். அந்த மாதிரி விஷயங்களை நான் பார்க்கிறது இல்லை.
ராஜராஜ சோழன் காலம் பொற்காலம்னு புனிதப்படுத்துவது சரியா? அந்த காலகட்டத்தில் எந்த பிரச்சனைகளுமே இல்லையா?
பிரச்சனை இருந்தது உண்மைதான். புனிதப்படுத்துவது மிகச் சரினு சொல்றதை காட்டிலும் சிறுமைப்படுத்துவது கூடாது என்பதுதான் நம்ம வாதம். ராஜராஜனை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஆனா விமர்சனம் செய்வதற்கு ஒரு அடிப்படை ஆதாரம் வேணும் இல்லையா? அதோடு விமர்சனம் செய்யவேண்டும். ஆனா, வெறும் உணர்வுப்பூர்வமாக விமர்சனம் செய்தால், நம்ம சமூகத்துல ஆளுமையே இல்லாம போயிடும். இந்த மாதிரி நேரத்துல நமக்கு நம்பிக்கையை கொடுப்பவர்கள் இந்த மாதிரி ஆளுமைகள்தான். அவர்கள் குறித்து தவறான தகவல்கள் தெரிவிக்கப்படும் நிலையில்தான் அதற்கான விளக்கம் கொடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
நீங்களே இரண்டாவதா போட்ட வீடியோவில் சொல்றீங்க, பிராமணர்களுக்கு ராஜராஜ சோழன் நிலம் வழங்கியதற்கான குறிப்பு இருக்குன்னு. அப்ப அவர் யாருடைய நிலங்களை வழங்கிறார்?
யாருடைய நிலங்கள் அது... நிலம் உங்களுக்கு சொந்தம், எனக்கு சொந்தம். அனைவருக்கும் பொதுவானது. இன்னும் சொல்லப்போனால் நிலம் யாருக்கும் சொந்தமில்லாத காலகட்டமும் இருந்தது. அதன்பிறகு வரி வசூல் செய்வதற்காக இந்த மன்னர்களால் பிரித்தாளப்பட்டது. அந்தணர்களுக்கு எல்லா நிலங்களையும் கொடுத்துவிட்டு அவர்கள் பின்னால் ராஜராஜன் கைகட்டி நின்றார், டயரை கும்பிட்டார் என்ற மாதிரி சொல்வது தவறான ஒன்று. அந்த காலத்துல ராஜராஜ சோழன் தவறு செய்த அந்தணர்களை சிறைபடுத்தியிருக்கார், நாடுகடத்தியிருக்கார். அந்தணர்களுக்கு ராஜராஜன் நிலம் கொடுத்து உண்மை. அதற்காக யாருடைய நிலத்தையும் அபகரித்துக் கொடுக்கவில்லை.
அப்போ நிலங்களை கொடுத்திருக்கார் இல்லையா?
ஆமாங்க, கொடுத்ததுக்கான ஆதாரம் இருக்கு, பறித்ததற்கான ஆதாரம் இல்லை. அவரு எங்கேயும் பறிக்கவில்லை. இப்பவும் நீங்க நம்பாம பேசினீங்கனா அது விதண்டாவாதம்.
விதண்டாவாதத்திற்காக கேட்கவில்லை. தஞ்சாவூர் கோவிலாகட்டும் எகிப்து பிரமிடாகட்டும், சீன பெருஞ்சுவராகட்டும் அவற்றின் கலை வடிவத்தை போற்றலாம், ஆனால் அந்தகால மன்னர்களை போற்றுவது சரியா?
அயோக்கியத்தனம் என்பதை நாம தவறுன்னு சொல்றோம். முதல் கேள்வியில் இருந்து நான் அதைதான் சொல்றேன். அந்த காலகட்டமே தவறுன்னு சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது. இன்னும் சொல்லப்போனால் விஜய நகர பேரரசுக்கு பின்னர்தான் ஜாதி பிரிவினையே வந்தது. ராஜராஜன் காலத்தில் அவர்கள் நல்ல நிலையில் இருந்தார்கள். இதை எந்த வராலாற்று ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இதை எல்லாம் தெரியாமலா முன்னாள் முதல்வர் கலைஞர் ராஜராஜனுக்கு விழா எடுத்திருப்பார்.
அதில் கூட சர்ச்சை இருக்கே?
நீங்க இதுதொடர்பாக பொதுவான எந்த தலைவர்களிடம் வேண்டுமானாலும் கேளுங்கள். அதில் உள்ள உண்மையை அறிந்துகொள்ள இயலும். கம்யூனிஸ்ட் தலைவர் பேராசிரியர் அருணனிடம் கூட கேளுங்கள். அவர்கள் காலத்தில் ஜாதியே இல்லை என்று கூறுகிறார். அவரை ஜாதி அடையாளத்தில் அடைக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
அடுத்த பகுதி:
"ரஞ்சித், தமிழ் தேசியவாதிகளை, திமுக - அதிமுகவை விமர்சனம் செய்யட்டும். ஆனால்..." - ராஜ்மோகன்