Skip to main content

பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு அநீதி!

Published on 10/12/2017 | Edited on 10/12/2017
பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு அநீதி! 

மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் ஒதுக்க வகை செய்யும் சட்டத்தை அமல்படுத்தி 24 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், பிற்டுத்தப்பட்டோர் வேலைவாய்ப்புப் பெற்றிருப்பதைப் பார்த்தால் அந்தச் சட்டம் நிஜமாகவே மதிக்கப்பட்டதா என்ற சந்தேகம்தான் எழுகிறது.

24 ஆண்டுகளுக்கு முன் சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் தனது பதவியை பலிகொடுத்து மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த சட்டம் கொண்டுவந்தார்.

ஆனால், அந்தச் சட்டம் 1993ஆம் ஆண்டுதான் முறைப்படி அமல்படுத்தப்பட்டது. அப்போதிருந்து காங்கிரஸ் அரசு சட்டத்தில் வகைசெய்துள்ள 27 சதவீதம் என்பதை மத்திய அரசுத் துறைகளுக்கு முழுமையான இலக்காகக் கொண்டு செயல்படவில்லை. அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே நிலைமைதான் நீடித்திருக்கிறது.



மண்டல் பரிந்துரையின்படி மத்திய அரசுப் பணியில் அமர்த்தப்பட்ட நபருடன் 
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்

சமீபத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் துணைப் பிரிவுகளை பரிசீலிக்க ஐந்து உறுப்பினர் கொணட் கமிஷன் ஒன்றை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்தார். சமூகநீதியை விரிவுபடுத்த இந்த கமிஷன் பரிந்துரைகள் உதவும் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில்தான், டாக்டர் முரளிதரன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், மத்திய அமைச்சரவை மற்றும் மத்திய அரசுத் துறைகள், 8 அரசியல் சட்ட அமைப்புகள் ஆகியவற்றில் எதிலுமே பிற்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான கணக்குப்படி, 35 மத்திய அமைச்சரவைகளில் 24 அமைச்சரவைகள், 37 மத்திய அரசுத் துறைகளில் 25 துறைகளிலும், பிரதமர் அலுவலகம், குடியரசுத்தலைவர் செயலகம், தலைமைத் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அரசியல்சட்ட அமைப்புகளில் வேலைவாய்ப்புப் பெற்றவர்களின் விவரம் கிடைத்துள்ளது.

பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அளித்த தகவல்படி, 24 மத்திய அமைச்சரவை துறைகளில் குரூப் ஏ பிரிவு அதிகாரிகளில் பிற்படுத்தப்பட்டோர் வெறும் 17 சதவீதம்தான் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அதே துறைகளில் குரூப் பி அதிகாரிகள் 14 சதவீதம் பேர் மட்டும்தான் பணியாணை பெற்றுள்ளனர். இதேபோல, மேற்படி 24 துறைகளில் குரூப் சி பிரிவில் 11 சதவீதமும், குரூப் டி பிரிவில் 10 சதவீதம் பேரும் மட்டுமே வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மக்களவையில் மத்திய பணியாளர் நல அமைச்சர் ஜிதேந்திரா சிங் தெரிவித்த விவரப்படி, 71 மத்திய அமைச்சகங்கள் மற்றும் மத்திய அரசுத்துறைகளில் வேலைவாய்ப்பு பெற்ற பிற்படுத்தப்பட்டோர் 19.28 சதவீதம் மட்டுமே.

மத்திய அரசுப் பணிகளில் ஏற்படும் காலியிடங்களையும் அவற்றை நிரப்புவதற்கான ஆள்எடுப்பு பணிகள் நீண்ட கால அவகாசத்தை எடுப்பது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துவதாக ஜிதேந்திரா சிங் தெரிவித்தார்.

37 மத்திய அமைச்சரவைகள் மற்றும் துறைகளில் 24 அமைச்சரவைகள் 25 துறைகள் மற்றும் எட்டு அசியல் சட்ட அமைப்புகளில் மொத்தமாக உள்ள பணியாளர்கள் எண்ணிக்கை என்ன தெரியுமா? குரூப் ஏ அதிகாரிகளில் 14 சதவீதமும், குரூப் பி, சி, டி ஆகியவற்றில் முறையே 15, 17, 18 சதவீதம் ஆகும்.

கேபினட் செகரட்டேரியட்டில் பிற்படுத்தப்பட்ட அதிகாரிகள் சுத்தமாக இல்லை. அவற்றில் 64 குரூப் ஏ அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களில் 64 பேர் முற்படுத்தப்பட்டோராகவும், 4 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பினராகவும் இருக்கிறார்கள்.

தகவல் ஒலி, ஒளி பரப்புத்துறையில் மொத்தமுள்ள 503 ஏ குரூப் அதிகாரிகளில் பிற்படுத்தப்பட்டோர் வெறும் 25 பேர்தான்.

கிடைத்திருக்கும் தகவல் 24 அமைச்சரவைகளில் மட்டும்தான். தகவல் தர மறுத்த 11 அமைச்சரவைகளில்தான் மிகப்பெரும் எண்ணிக்கையில் பணியாளர்கள் வேலை பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 11 அமைச்சரவைகளில் ராணுவம், உள்துறை, நிதித்துறை, ரயில்வே ஆகியவையும் அடங்கும்.

இந்த 11 துறைகளில் மொத்த மத்திய அரசுப் பணியாளர்களில் 91.25 சதவீதம் பேர் பணிபுரிகிறார்கள் என்பதும், தகவல் கிடைத்துள்ள 24 அமைச்சரவைகளில் பணிபுரிவோர் வெறும் 8.75 சதவீம் பணியாளர்கள்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உதாரணத்துக்கு 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எடுக்கப்பட்ட மத்திய அரசுப்பணியாளர் கணக்குப்படி ரயில்வேயில் மட்டும் 13 லட்சத்து 28 ஆயிரத்து 199 பேர் பணிபுரிகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எண்ணிக்கையில் சாதி அடிப்படையிலான புள்ளிவிவரம் இல்லை.

உண்மையைச் சொல்லப்போனால், சுமார் 31 லட்சம் மத்திய அரசுப் பணியாளர்களில் 2 லட்சத்து 71 ஆயிரத்து, 375 பணியாளர்களில் மட்டுமே இப்போது பிற்படுத்தப்பட்டோருக்கான வேலைவாய்ப்பு சதவீதம் கிடைத்துள்ளது.



மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட பணியாளர்களின் சதவீதம்

பணி வாரியாக வேலைவாய்ப்பு ஒதுக்கீடை பின்பற்றும்படி உச்சநீதிமன்றம் கூறியிருந்தாலும், காலியிடங்கள் வாரியாக வேலைநியமன முறையைத்தான் இதுவரை பின்பற்றுகிறார்கள் என்கிறார் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின்  முன்னாள் உறுப்பினர் எஸ்.கே.கார்வேந்தன்.

இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசில் 83 துணை செயலாளர்கள் மட்டத்திலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதில் மூன்று பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டோர், 5 பேர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் என்று கூறுகிறார் பிற்படுத்தப்பட் மத்திய அரசு  ஊழியர்களுக்கான கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கே.தனசேகர்.

மத்திய நிதித்துறை அமைச்சகத்தில் மட்டுமே குரூப் ஏ பிரிவு அதிகாரிகளின் பிரதிநிதித்துவம் ஓரளவு திருப்தியாக இருப்பதாக இவர் கூறுகிறார்.

தற்போதைய நிலவரப்படி இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோர்தான் மிகப்பெரிய எண்ணிக்கையில் உள்ளனர். பிற்படுத்தப்பட்டோருக்குள் பிளவு ஏற்படுத்தவே, அவர்களுக்குள் துணைப்பிரிவுகளை ஏற்படுத்தவே மத்திய அரசு புதிய கமிஷனை நியமித்திருப்பதாக டாக்டர் முரளிதரன் கருத்து தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில் ஆட்சியை பலிகொடுத்து முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அமல்படுத்திய மண்டல் பரிந்துரைகளை நீர்த்துப்போகச் செய்ய மத்திய அரசு முயற்சிப்பதாகவே நினைக்க வேண்டியிருக்கிறது.

- ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்