Skip to main content

அயோத்தி வேண்டாம், கடன் நிவாரணம் வேண்டும்! டெல்லியை கலங்கடித்த முழக்கம்

Published on 30/11/2018 | Edited on 01/12/2018

புழுக்கள் கூட மிதிபட்டவுடன் நிமிர்ந்தெழும். ஆனால், விவசாயத்தை அடித்தளமாகக் கொண்ட இந்தியாவில் விவசாயிகள் மட்டுமே நாதியற்றவர்களாக கருதப்படும் நிலை நீண்டகாலமாக நீடிக்கிறது.

விவசாயம் செய்யும்போது இருக்கும் விலை அறுவடை செய்யும்போது இருப்பதில்லை. செலவு செய்ததை மீட்பதற்கே படாதபாடு படவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். பல சமயங்களில் மழை வெள்ளமும், வறட்சியும் நிலத்தில் பயிர் செய்ததை அறுவடையே செய்ய முடியாத நிலையையும் சந்தித்தார்கள்.

 

farmers



எப்படியாகினும் அந்த இழப்பைத் தாங்கி அவன் அடுத்த பருவத்தில் விவசாயத்தை நடத்த வேண்டும். அல்லது, கடனுக்கு பயந்து நிலத்தை விற்றுவிட்டு கூலி வேலைக்கு செல்லவேண்டும். அல்லது, தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும்.

விவசாயிகள் இப்படிப்பட்ட அவலத்தை சந்திக்கும்போது, அவர்களுடைய விவசாயத்தை நசியச்செய்யும் கார்பரேட் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் வரிச்சலுகையும், கடன் தள்ளுபடியும் பெற்று கொழிக்கும் நிலையில் இந்த நாட்டில் சர்வசாதாரண நிகழ்வுகளாக தொடர்கின்றன.

விவசாயிகள்தான் இந்த நாட்டின் முதுகெலும்பு என்று முழங்கிக்கொண்டே, பெருமுதலாளிகளின் காலடியில் கிடக்கும் அரசுகளின் அடக்குமுறைகளையும் ஆண்டுதோறும் விவசாயிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

விதைகள், உரங்கள், மின்சாரம், பயிர்க்காப்பீடு ஆகியவற்றை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கவேண்டும். விளைபொருள் விலையை அரசே தீர்மானிக்கட்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து நீண்டகாலமாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். கடன் தொல்லையால் நிகழும் தற்கொலைகளை தவிர்க்க விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கடந்த ஐந்து ஆண்டுகளாக உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தியும் அந்த மாநில அரசுகள் கண்டுகொள்ளவே இல்லை.

ஆனால், மகாராஸ்டிராவில் விவசாயிகளை ஒருங்கிணைத்து அகில இந்திய விவசாயிகள் சங்கம் நடத்திய பிரமாண்டமான பேரணியைத் தொடர்ந்து அந்த மாநில அரசு கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. பஞ்சாபில் காங்கிரஸ் அரசு அமைந்தவுடன் அங்கும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், மத்தியப்பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் போராடிய விவசாயிகள் மீது கொடூரமான அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டது.

ஆனால், ஐந்தாண்டுகள் ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளை அடக்கி ஒடுக்கிய மாநில அரசுகள் இப்போது தங்களுக்கு மீண்டும் வாக்களித்தால் கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி கொடுக்கின்றன. விவசாயிகளின் இன்றைய இழிநிலையைப் போக்கவே டெல்லியில் 29 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பிரமாண்டமான பேரணியை நடத்தியிருக்கிறார்கள். இந்திய அளவில் 200க்கு மேற்பட்ட விவசாய சங்கங்களை அகில இந்திய விவசாய சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைத்து இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது.

 

delhi farmers rally



1991ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அறிமுகப்படுத்திய புதிய பொருளாதரக் கொள்கையால்தான் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் கொடூரமான தாக்குதலுக்கு ஆளாகினர். நவீன விவசாய சாதனங்கள் அறிமுகமாக ஏராளமான விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பறித்தது. அதேசமயம் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் கிராமப்புற வாழ்க்கையைச் சீரழித்து, நகரமயமாக்கியது. இந்த உண்மை 1996 ஆம் ஆண்டுதான் மக்களுக்கு புரியத் தொடங்கியது. 1996 ஆம் ஆண்டு தொடங்கிஇன்றுவரை இந்தியா முழுவதும் மூன்று லட்சம் விவசாயிகள் கடன் சுமையாலும், விளைபொருளுக்கு நியாயவிலை கிடைக்காததாலும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நவம்பர் 30 ஆம் தேதி டெல்லியில் செங்கடல்போல் சங்கமித்த விவசாயிகளின் கூட்டம் மத்திய அரசாங்கத்தின் குரல்வளையை இறுக்கியிருக்கிறது. கார்பரேட்டுகளின் ஊதுகுழலாக, மோடிக்கு வக்காலத்து வாங்கும் மீடியாக்கள்கூட இந்தப் பேரணியின் வெற்றியை மறைக்க முடியவில்லை.  டெல்லியில் பல்கலைக் கழக மாணவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் என்று பலரும் விவசாயிகளுக்குஆதரவாக களம் இறங்கியிருப்பது மாற்றத்திற்கான அடையாளம்.  பேரணியில் வரும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் மருத்துவர்கள் முகாம்களை நடத்தியிருக்கிறார்கள். தங்களுக்கு சோறு போடுகிறவர்களின் முக்கியத்துவத்தை இந்த நாடு உணரத் தொடங்கியிருக்கிறது. ஆனால் நாடாள்வோர் எப்போது உணர்வார்கள் என்பதே விவசாயிகளின் கேள்வியாக இருக்கிறது.

உயரமான சிலைகளைக் காட்டி விவசாயிகளின் உயிருக்கு உலை வைக்க இனியும் விவசாயிகள் அனுமதிக்க மாட்டார்கள். ராமர் சிலையை காட்டி விவசாயிகளின் நெற்றியில் பட்டைநாமம் சாத்த விடமாட்டார்கள். அயோத்தி பிரச்சனை எங்களுக்கு தேவையில்லை. கடன் நிவாரணமே எங்களுக்குத் தேவை என்று விவசாயிகள் எழுப்பிய முழக்கம் நாடாளுமன்றக் கட்டிடத்தை உலுக்கியிருக்கிறது.தூக்கு மாட்டிக்கொண்டு சாவதை விட போராடுவதே தங்களுக்கு பெருமை என்ற முடிவுக்கு விவசாயிகள் வந்திருக்கிறார்கள் என்பது பெருமிதம் அளிக்கிறது.