தமிழகத்தில் நிலவிவரும் பரபரப்பான அரசியல் சூழலில் நடிகர் கமல்ஹாசன் நாளை(பிப்ரவரி 21-ஆம் தேதி) தன் கட்சி பெயர், கொடி மற்றும் கொள்கைகளை வெளியிட்டு தன் அரசியல் பயணத்தை இராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் வீட்டிலிருந்து தொடங்குவதாக கூறியிருக்கிறார். கமல் ரசிகர்கள், ஆதரவாளர்கள் கட்சிக்கு வலுசேர்க்க தீயாக செயல்பட்டு வருகின்றனர். கமல் நற்பணி மன்றத்தின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் கோமகனிடம் பேசினோம்.
சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகள், எதிர்பார்ப்புகள் எந்த அளவில் உள்ளது?
ரொம்பவே உற்சாகமாக உள்ளோம். மத்திய சென்னை சார்பாக மட்டும் பதினைந்து கார்கள், ஐந்து டெம்போ ட்ராவலர்கள் ஏற்பாடு செய்துள்ளோம்.
ரஜினி, கமல் சந்திப்பினால் ஒருபலனும் இல்லையென அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருக்கிறாரே... அது பற்றி?
யார் எது வேண்டுமானாலும் சொல்லட்டுமே, கமல் ஆட்சி ஊழலற்ற ஆட்சியாக இருக்கும் என ரஜினியே சொல்லியிருக்கிறார். மிகச்சிறந்த சிந்தனையாளர், முற்போக்கு எண்ணங்கள் கொண்டவர் எங்கள் தலைவர். ஓட்டுக்கு காசு கொடுக்கும் கூட்டம் அல்ல. குவாட்டருக்கும் பிரியாணிக்காகவும் நாங்கள் போகவில்லை. உண்மையான தலைவனின் தொண்டனாக போகவிருக்கிறோம். இதற்காக இதுவரை எங்களுடைய சொந்த பணத்தையே செலவு செய்திருக்கிறோம். எப்படியும் குறைந்தபட்சம் மூன்று லட்சம் பேர் கூடவிருக்கிறோம்.
அப்துல் கலாம் வீட்டிலிருந்து பயணத்தைத் தொடங்ககூடாது என பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறாரே?
மதங்களுக்கும் கட்சிகளுக்கும் அப்பாற்பட்ட தலைவர் கலாம் அய்யா அவர்கள். எனவே யார் வேண்டுமானாலும் அங்கே செல்லலாம். இன்னார் போகவேண்டும், போகக்கூடாது என்றில்லை, அதை சொல்ல தகுதியுமில்லை உரிமையுமில்லை. இதே கருத்தை அப்துல் கலாம் வீட்டில் உள்ளோர் சொல்லியிருந்தால் ஏற்கத்தக்கது. ஏனெனில் அவர்களுக்கு அந்த உரிமையுள்ளது, அவர்களும் எங்கள் வருகையை ஏற்றுக்கொண்டுவிட்டனர். எனவே அய்யா கலாம் வீட்டிலிருந்து தொடங்குவதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
நடிகர்கள் அரசியலில் ஜெயிக்கக்கூடாது என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளாரே?
எங்களை பொருத்தவரை MGR தான் மக்கள் மனங்களில் இடம்பிடித்தவர். மக்களை ஏமாற்றாமல் மக்கள் நலம் கருதி உழைத்தவர். அவருக்கு பிறகு அதிகப்படியான மக்களின் வரவேற்பை பெற்றவர் எங்கள் தலைவர். தன்னுடைய சொந்த வருமானத்திற்கான வருமான வரியை நேர்மையாக கட்டும் தலைவர் அவர். அப்படியிருக்க மக்கள் விஷயத்தில் அவர் கடைபிடிக்கப் போகும் நேர்மையை பார்க்கத்தான் போகிறீர்கள். விரைவில், சாதாரணமக்கள் கூட எங்கள் கட்சியில் சேர உறுப்பினர் படிவம் உள்ளதா என விசாரித்த வண்ணம் உள்ளனர். சத்யராஜ் இன்றைய காலகட்டத்தில் மார்க்கெட் இல்லாத நடிகர். அவர் பேசியதை சில நேரங்களில் அவரே பின்வாங்கக்கூடிய நடிகர். எனவே அவர் கருத்து எங்களை பாதிக்காது.
ரஜினி கமல் ஒன்று சேர்ந்தாலும் 10% வாக்குகளைக்கூட பெறமுடியாது என்று மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். அதுபற்றி உங்கள் கருத்து?
பொறுத்திருந்து பார்த்தால் மக்கள் மூலமாகவே அறிவார்கள். 10% வாக்குகள் கூட வாங்க முடியாது என்று சொல்லியிருந்தாலும் அவர்களே இதுவரை ஜெயிக்கவில்லையே... அது ஏன் என்று சொல்லமுடியுமா அவர்களால்? தற்போது மக்கள் மாற்றத்தையே விரும்புகிறார்கள். அந்த மாற்றம் தலைவர் ஆட்சியிலேயே நடக்கும் என நினைக்கிறார்கள். எங்கள் கட்சியில் சேர்வதற்கான அடிப்படை உறுப்பினர் படிவம்கூட இன்னும் தயாராகவில்லை. ஆனாலும் தினமும் மக்களிடமிருந்தும் பிற கட்சிகளில் இருந்தும் கூட உறுப்பினர்களாகச் சேர தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. சேர்க்கை தொடங்கிவிட்டால் பிற கட்சிகள் கரையும். கண்டிப்பாக மாற்றம் ஏற்படும். மதுரையில், கட்சி கொடி பெயர் அறிவிக்கவுள்ளார். அதற்கு பலம் சேர்க்க எல்லா வகையிலும் தயாராக உள்ளோம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செயலாற்றி வருகிறோம். இன்னும் தலைவரை முதல்வர் பதவியில் அமரவைக்க உயிரைக்கூட கொடுப்போம்.