Skip to main content

புருவப் பாடலுக்கு ஆதரவு தெரிவித்த கேரள முதல்வர் !!

Published on 16/02/2018 | Edited on 16/02/2018

‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தில் இடம்பெற்றிருக்கும் “மாணிக்ய மலயராயி பூவி” என்கிற பாடல் சிலநாட்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி வைரலாகியது. ப்ரியா ப்ரகாஷ் வாரியர் ரியாக்சன் ஹிட்டடித்த அதே நேரத்தில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு அமைப்பு இந்த பாடலுக்கு எதிர்ப்பும் தெரிவித்திருந்தது.
 

oru adaar love


கிட்டத்தட்ட 40 வருடங்களாக மலையாள குடும்பங்களிலும் சுப நிகழ்வுகளிலும் பாடப்பட்டு வரும் இந்த பாடல் முகமது நபிகள் மற்றும் கதீஜா பீவி ஆகியோருக்கிடையே இருந்த அன்பை பற்றி குறிக்கும் பாடலாகும். தாஃபுல் இஃப்டா ஜமியா நிஜாமியா என்கிற அந்த அமைப்பு முகமது நபிகளின் புகழ் மீது களங்கம் கற்பிக்கிறது என்று கூறி அந்த பாடலை எதிர்த்து ஃபட்வா அறிவித்திருந்தது.
 

இந்நிலையில் இந்த பாடலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கும் கேரள முதல்வர் பிணராயி விஜயன் சகிப்பின்மையை எந்த வடிவிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். 
 

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கும் கேரள முதல்வர் ‘சமூகத்தின் எந்தப் பிரிவிலிருந்து சகிப்பின்மை வெளிப்பட்டாலும் அது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. இந்து, முஸ்லிம் வெறியர்கள் இப்படிப்பட்ட சகிப்பின்மையை தங்களிடையே பரப்புவதில் ஒரு சதி இருக்கிறது என்று மக்கள் நினைத்தால் அதற்காக மக்களை குறைசொல்ல முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
 

மேலும் இந்த பாடல் உருவான விதம் பற்றியும் கேரள முதல்வர் விளக்கியிருக்கிறார். ‘முகமது நபிகள் மற்றும் கதீஜா பீவி இருவருக்கும் இடையே உருவான காதலைப் பற்றியும் அது திருமணத்தில் இணைந்ததைப் பற்றியும் பேசுகின்ற பாடல் இது. பி.எம்.ஏ ஜப்பார் எழுதி, தலசேரி ரஃபீக் பாடி இந்த பாடல் அகில இந்திய வானொலியில் 1978 ல் ஒலிபரப்பப்பட்டது. அதன்பின் மாப்ளாப்பட்டு பாடகர் இரஞ்சோலி மூசா அந்த பாடலை பல இடங்களில் பாடி மக்களிடையே கொண்டுபோய் சேர்த்தார்’ என்றும் கேரள முதல்வர் பிணராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.