ஹரியானா மாநிலத்தில் குர்கானிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தருஹிராவில் 10வயதுடைய பார்வையற்ற சிறுமி தன்னை பலாத்காரம் செய்தவன் மீண்டும் தன் வீட்டிற்கு அருகே வந்தபொழுது அவன் குரலை வைத்து கண்டுபிடித்துள்ளார். அந்த நபரின் பெயர்சனோஜ் குமார். தற்போது சனோஜ் குமாரை அந்த சிறுமியின் குடும்பத்தார் காவல்துறையிடம் ஒப்படைத்து உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அச்சிறுமியின் தந்தை காவல்துறையிடம் கூறும்பொழுது, இருபது நாட்களுக்கு முன்பு என் மனைவி மற்றும் மகள் இருவரும் ஜார்கண்டிலிருந்து தருஹிராவிற்கு தொழிற்சாலையில் வேலை செய்வதற்காக வந்தனர். அப்போது கடந்த 11ஆம் தேதி அன்று என் மனைவி, என் மகளை உறவினர் வீட்டிற்கு சென்றதால் தனியாக வீட்டில் விட்டுச்சென்றுள்ளார். அவர் மீண்டும் வீட்டிற்கு வந்தபொழுது என் மகள் ஒரு வீத கலக்கத்திலும், பயத்திலும் இருந்தாள். என்னவென்று விசாரித்தபொழுது தன்னை யாரோ தாக்கி, பலாத்காரம் செய்துவிட்டதாக கூறியுள்ளார். இதை கேட்ட என் மனைவி, யார் என்று கேட்டபொழுது அவளுக்கு தெரியவில்லை. ஏனென்றால் என் மகளுக்கு பார்வை குறைபாடு உள்ளது.
இதுகுறித்து நாங்கள் தருஹிரா காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்தோம். அப்பொழுது யார் குற்றவாளி என்று கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது. வேறுவழியின்றி அங்கு உள்ளவர்களை பேசவைத்து கண்டுபிடித்துவிடலாம் என்று நினைத்து அதையும் செயல்படுத்தினோம் அப்பொழுதும் தெரியவில்லை. ஒருநாள் சனோஜ் எங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள வீட்டிலுள்ளவரிடம் பேசியபொழுது என் மகள் அவன் குரலை கண்டுபிடித்துவிட்டாள். உடனே அவனை அடையாளம் கண்டு என் மனைவியிடம் கூறியவுடன், என் மனைவி அங்குள்ள இளைஞர்கள் மூலம் தப்பிக்க இருந்தவனை பிடித்துவிட்டனர் என்றார். தற்போது ரேவரி பெண்கள் காவல் நிலைய அதிகாரிகள் சனோஜ் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து கைது செய்துள்ளனர்.
குழந்தைகளின் மீதான பாலியல் தாக்குதல் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதே அங்கிருக்கும் மக்களின் கருத்தாக இருக்கிறது.