2ஜி அலைக்கற்றை, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஆகியவை தொடர்பான ஊழல் குற்றசாட்டுகளும், விலைவாசி உயர்வுகளும், வளர்ச்சி என்ற கோஷங்களுமே 2014-நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் அதிகம் பேசப்பட்டது. 2014 தேர்தலில் வெற்றி, தோல்வியைத் தீர்மானித்ததில் இந்த 3 காரணிகளும் பெரும் பங்கு வகித்தன.
2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு முக்கிய பிரச்சனையாக பேசப்பட்டது. சென்ற நாடாளுமன்ற தேர்தலில் விலைவாசி உயர்வு 19%, ஊழல் 12%, வளர்ச்சியின்மை 11%, வேலைவாய்ப்பின்மை 8% ஆகியவை வாக்களிக்க முக்கிய பங்கு வகித்ததாக வளரும் சமூகங்கள் குறித்தான ஆய்வு மையத்தின் சர்வே தெரிவிக்கிறது.
டெல்லியில் உள்ள வளரும் சமூகங்கள் குறித்தான ஆய்வு மையம் தன்னாட்சி பெற்ற சமூக அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமாகும். 1997-ஆம் ஆண்டிலிருந்து பல அரசியல் நிபுணர்களையும், ஆசிரியர்களையும் கொண்டு தேர்தல் தொடர்பான சர்வே முடிவுகளை வெளியிட்டு வருகிறது.
சமீபத்தில் நடந்த தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் வேலைவாய்ப்பின்மை 12%, குடிநீர் பிரச்சனை 11%, வளர்ச்சியின்மை 9% ஆகிய காரணிகள் பெரிதாக இருந்தன. சத்தீஸ்கர் தேர்தலில் வேலைவாய்ப்பின்மை 26%, விலைவாசி உயர்வு 17%, வளர்ச்சியின்மை 7%, ஊழல் 6% ஆகியவை ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக இருந்தது.
மத்தியப்பிரதேச தேர்தலில் வேலைவாய்ப்பின்மை 21%, விலைவாசி உயர்வு 17%, வளர்ச்சியின்மை 6%, இருந்தது. ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் வேலைவாய்ப்பின்மை 26%, விலைவாசி உயர்வு 15%, ஊழல் 5%, வளர்ச்சியின்மை 5% ஆக இருந்ததாக சர்வே முடிவுகள் கூறுகின்றன.
இந்த நிலையில் புதிதாகத் தொடங்கப்படாத வேலைவாய்ப்புகளும், பல படித்த இளைஞர்கள் அடிப்படை வேலை இல்லாமல் இருப்பதும் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வாஷிங்டனில் உள்ள பியூ ஆராய்ச்சி மையம் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் உள்ள இந்த நிறுவனம் உலகம் முழுவதும் சமூகப் பிரச்சினைகள், மக்கள் கருத்துகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.
76% மக்கள் வேலைவாய்ப்பின்மையை பெரிய பிரச்சனையை கருதுகின்றனர். நாட்டில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாக வேலைவாய்ப்பு வாய்ப்பு முதலிடத்தில் உள்ளது. ஊழல் அதிகாரிகள், பயங்கரவாதம் மற்றும் குற்றம் ஆகியவை நாட்டின் அடுத்தகட்ட பிரச்சினைகளாக உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலைவாய்ப்பு நிலை முன்னேற்றமடைந்ததாக 21 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். 67 சதவீதத்தினர் வேலைவாய்ப்பு நிலை மோசமடைந்ததாகத் தெரிவித்தனர்.
வேலையின்மை விகிதம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் தற்போது உயர்ந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நகர்ப்புறங்களில் 7.8% மற்றும் கிராமப்புறங்களில் 5.3% ஆக வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது.
இந்திய பொருளாதாரம் கண்காணிப்பு மையம் சி.எம்.ஐ.இ. வெளியிட்டுள்ள தகவல்களின் படி 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் வேலையின்மை விகிதம் 7.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 5.8 சதவீதமாகவும், 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 5.9 சதவீதமாகவும் இருந்தது. சி.எம்.ஐ.இ. ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் கிட்டத்தட்ட 11 மில்லியன் மக்கள் வேலை இழந்ததாகத் தெரிவித்திருந்து. பணமதிப்பு இழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவை பெரும்பாலானோர் வேலை இழந்ததற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
இந்தியா மட்டுமல்ல மற்ற நாடுகளிலும் வேலைவாய்ப்பின்மை பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.