Skip to main content

நித்தி பதுங்கிய நாடு! கண்டுபிடித்த பக்தர்கள்!

Published on 02/02/2019 | Edited on 04/03/2019

யார் எந்தக் கேள்வி கேட்டாலும் படார் என பதில் சொல்லும் பாணிமூலம் பிரபலமடைந்தவர்தான் ரஞ்சிதாவுடனான வீடியோ புகழ் நித்தியானந்தா சுவாமிகள். உலகமெங்கும் இருக்கும் அவரது பக்தர்கள் கேட்கும் ஒரேயொரு கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.

அந்தக் கேள்வி மிகக்கடினமான கேள்வியல்ல.

""சுவாமி நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? உங்களை நேரில் தரிசிக்க முடியுமா?'' -என்பதுதான் அந்தக் கேள்வி.

nithy


""நான் எங்கே இருக்கிறேன் என்பது முக்கியமல்ல. பரபிரம்மமான நான் தூணிலும் துரும்பிலும், காற்றிலும் மழையிலும், கொட்டுகின்ற பனியிலும் என எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறேன். என்னால் உங்களை உணர முடியும். நீங்கள் என்னை உணரலாம். நீங்கள் என் உடல் எங்கிருக்கிறது என கேட்கிறீர்கள். நான் உங்கள் உயிரின் ஒலியை உணர்ந்துகொண்டிருக்கிறேன். என் உடலை தேடாதீர்கள். அது நிரந்தரமற்றது'' என வளைத்து வளைத்து ஆன்லைன் வீடியோக்களில் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார் நித்தியானந்தா.

திருவண்ணாமலை ஆசிரமம், பெங்களூரு பிடதி ஆசிரமம், மதுரை ஆதீனம், கும்பமேளா என அனைத்து இடங்களிலும் திருவிழாக் களிலும் பெண் பக்தர்கள் புடைசூழ காட்சியளிப்பதை வழக்கமாகக் கொண்ட நித்தியானந்தாவை கடந்த மூன்று மாதமாகக் காணவில்லை. தினமும் பக்தர்களுக்காக இணையதளங்களில் மட்டும் தோன்றி ஆசிர்வதித்து வருகிறார். அவர் எங்கே இருக்கிறார் என கேள்வி கேட்கும் பக்தர்களுக்கு "நித்தியானந்தா இமயமலையில் தவம் புரிந்துவருகிறார்' என பதில் சொல்கிறார்கள் ஆசிரமவாசிகள். இமயமலையில் உலகிலேயே அதிக குளிர் நிலவுகிறது. இந்தச் சூழ்நிலையில் இமயமலையில் தவம் புரிந்தால் நித்தியானந்தா இறந்து விடுவார் என அறிவாளித்தனமாக கேள்வி எழுப்புபவர்களுக்கு எந்தப் பதிலும் சொல்வதில்லை ஆசிரம வாசிகள்.

தோண்டித் துருவி கேள்வி கேட்கும் பக்தர்களுக்கு, "நித்தியானந்தா இந்தியாவில்தான் இருக்கிறார். அவர் கட்டாயம் இந்தியாவில்தான் இருந்தாக வேண்டும். அவர் வெளிநாடு போகவேண்டும் என்றால் கடவுச்சீட்டு எனப்படும் பாஸ்போர்ட் இருக்கணும். அவரது பாஸ்போர்ட் கடந்த அக்டோபர் மாதமே காலாவதியாகி விட்டது. அதை அவர் புதுப்பிக்கவில்லை. பாஸ்போர்ட் இல்லாமல் நித்தி, வெளிநாட்டுக் குச் செல்ல முடியுமா?' என எதிர் கேள்வி கேட்கிறார்கள் நித்தியானந்தா தியான பீடத்தின் நிர்வாகிகள்.

நித்தியானந்தாவும் ரஞ்சிதாவும் இணைந்த வீடியோ வெளியானபோது நித்தியையும் ரஞ்சிதாவையும் இணைத்து வைத்தவர். அவருக்கு எல்லாம் தெரியும். அவரை கைதுசெய்து விசாரிக்க வேண்டும் என ஒருவரைப் பற்றிய செய்திகள் வெளிவந்தன. அவர் பெயர்... மா நித்தியானந்த கோபிகா. அவர் தலைமறைவானார். அவரைப்பற்றி இதுவரை எந்தச் செய்தியும் வெளிவரவில்லை. கோபிகா எங்கிருக்கிறார், என்ன செய்கிறார் என நித்தியானந்தாவைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. இப்பொழுது நித்தியானந்தா வையே காணோம். அவர் கோபிகாவோடு இணைந்துவிட்டாரா? என பக்தர்கள் கேள்வி கேட்டால், "தெரியாது' என்கிற பதிலே ஆசிரம வட்டாரத்திலிருந்து வருகிறது என்கிறார்கள் பக்தர்கள்.

நித்தியானந்தாவிற்கு எதிராக மைசூர்-ராம்நகர் கோர்ட்டில் ஒரு பாலியல் வழக்கு நடந்துவருகிறது. அந்த வழக்கில் நித்தி ஆஜராகவில்லை. அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி, நித்திக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கிறார். அதை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தை நாடுகிறார் நித்தி. அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் நித்திக்கு எதிரான பிடிவாரண்டை ரத்து செய்கிறது. கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கிறார். ஆனால் "பிப்ரவரி முதல் வாரத்திலிருந்து நித்தி அவருக் கெதிரான வழக்கு நடக்கும் ராம்நகர் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்' என உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிடிவாரண்டை ரத்துசெய்யும் வழக்கை நடத்த வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்த நித்தி, வழக்கு தொடர்பான ஆவணங்களில் கையெழுத்துப் போட்டிருக்கிறார். உண்மையில் நித்தி எங்குதான் இருக்கிறார் என நாம் விசாரணையைத் தொடங்கினோம்.

nithyநவம்பர் மாதம் வடமாநில சுற்றுப்பயணம் செய்வதாக பெங்களூரு பிடதி ஆசிரமத்திலிருந்து புறப்பட்ட நித்தி அதிலிருந்து காணவில்லை. அவரைக் கடைசியாக உத்திரப் பிரதேசத்தில் பார்த்ததாக அவரது பக்தர்கள் தெரிவிக்கின்றனர். உத்திரப்பிரதேசத்திற்குப் பக்கத்திலிருக்கும் நாடுதான் நேபாளம். அங்கு செல்வதற்கு பாஸ்போர்ட் தேவை யில்லை. வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பித்துவிட்டு நேபாளத்திற்குச் செல்லலாம். நேபாள தலைநகர் காட்மண்டுவில் சர்வதேச விமானநிலையம் உள்ளது. அங்கிருந்து வெளிநாடுகளுக்குப் பறக்கலாம்.

உத்திரப்பிரதேசம் வழியாக காட்மண்டு சென்ற நித்தி யானந்தா அங்கிருந்து தென் அமெரிக்க நாடான பிரேசிலின் தலைநகரான ரியோடி ஜெனிரோ வுக்குச் சென்றார். அங்கிருந்து பிரேசிலின் பக்கத்தில் உள்ள குட்டிநாடான சுரிநாமுக்கு சென் றிருக்கிறார். தென்அமெரிக்க நாடுகளிலேயே இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடு சுரிநாம். அந்த நாட்டின் லட்சக்கணக்கான மக்கள்தொகையில் பாதிபேர் இந்தியர்கள். இந்தியர் ஒருவர்தான் அந்நாட்டின் துணை ஜனாதிபதியாக உள்ளார். அந்த நாட்டில்தான் ஏற்கனவே நித்தியானந்தா ஆசிரமத்தி லிருந்து காணாமல் போன மா நித்தியானந்தா கோபிகா இருக்கிறார் என்கிறார்கள் ஆசிரமத்தைச் சேர்ந்த பக்தர்கள்.

"இதை எப்படி உறுதிப் படுத்தினீர்கள்' என கேட்டோம். ""தற்பொழுது தகவல் தொழில் நுட்பம் வளர்ந்துவிட்டது. தினமும் ஃபேஸ்புக்கிலும் யு-டியூப் போன்ற இணையதளங்களில் வரும் நித்தியானந்தாவின் லைவ் நிகழ்ச்சிகள் எங்கிருந்து இணையதளத்தில் ஏற்றப்படுகிறது என கண்டுபிடிக்கும் கணினி வல்லுநர்கள் இந்தியாவில் நித்தியின் பக்தர்களாகவே இருக்கிறார்கள்'' என்கிறார்கள் ஆசிரமவாசிகள்.

"ஏன் நித்தி பயந்து ஓடவேண்டும்' என கேட்டதற்கு, ""வடநாட்டில் உள்ள சாமியார்களான ஆசாராம் பாபு, ராம்ரஹீம் போன்றவர்களுக்கு நீதிமன்றங்கள் வழங்கிய தண்டனை தனக்கும் கிடைக்கும் என நம்புகிறார் நித்தி. அவர்களைப் போலவே "நான் கடவுள்' எனச் சொல்லி ஆன்மிக பாலியல் உறவு வைத்திருக்கிறார் நித்தி. அவர்களாவது பெண்களைக் கற்பழித்தார்கள்... நித்தி ஒரு ஆணுடன் பாலியல் உறவு வைத்ததாக வழக்கு நடக்கிறது. "அந்த வழக்கை தினமும் நடத்தவேண்டும், விரைவில் தீர்ப்பு தரவேண்டும்' என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேர்மைக்குப் புகழ்பெற்ற நீதிபதி விசாரிக்கும் பாலியல் வழக்கில் தண்டனை நிச்சயம் என்பதால் தீர்ப்பு வருவதற்கு முன்பே தலைமறைவாகி ஆன்லைன் சாமியாராகிவிட்டார் நித்தி'' என்கிறார்கள் அவரது பக்தகோடிகள்.