
விழுப்புரம் மாவட்டம் நகராட்சி மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பில் மகளிர் தின விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் கலந்து கொண்டார். அப்போது அங்கு மாற்றுக் கட்சியில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்கள் ஆனந்தை வரவேற்க திட்டமிட்டனர்.
ஆனால் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களின் வரவேற்பை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாற்றுக் கட்சியில் இருந்து பல்வேறு காரணங்கள் வெளியே வந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இது குறித்து ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''இந்த கட்சி எப்படி முன்னுக்கு வரும், டெவலப் ஆகும். விஜய் அவர்களே தயவு செய்து உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன் அறிவார்ந்த அரசியல்வாதிகளை கையில் எடுத்து உங்கள் கட்சியை நடத்துங்கள். மக்கள் ஓட்டு போட தயாராக இருக்கிறார்கள். ஆனால் அறிவார்ந்தவர்கள் கூட இல்லையென்றால் கோமாளி கூட்டத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்தால் டெபாசிட் போய்விடும். கண்டிப்பாக டெபாசிட் போய்விடும். இங்கு இருக்கும் எல்லோரும் படித்தவர்கள். அருகில் இருப்பவர் டாக்டர் பட்டம் வாங்கியவர். நான் ஏற்கனவே கவுன்சிலராக இருந்தேன்'' என தெரிவித்தார்.

அதேபோல் மாற்றுக் கட்சியிலிருந்து தவெகவில் இணைந்த மற்றொரு நபர் பேசுகையில், ''ஊழலற்ற நிர்வாகத்தை கொடுக்க முடியும் என்றால் பொறுப்பு வாங்கும் போதே பணம் வாங்கிக்கொண்டு எப்படி பொறுப்புகளை கொடுக்க முடியும். அதுவும் எண்ணற்ற இளைஞர்கள் விஜய்யை நம்பி வருகிறார்கள். 50,000 ரூபாய் கொடு, ஒரு லட்சம் ரூபாய் கொடு எனக் கேட்கிறார்கள். ஏற்கனவே 15 லட்சம் ரூபாய் நகர மன்ற தலைவருக்கு கேட்டார்கள். அதை நாங்கள் மீடியாவிற்கு கொண்டு போகவில்லை. இந்த விஷயத்தை யார் போட்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால் நாங்கள் தான் இந்த விஷயத்தை வெளியே சொன்னோம் என தலைமை வரை சென்று எங்களை மீண்டும் மீண்டும் புறக்கணிக்கிறார்கள்'' என்றார்.