"இந்த ஆண்டு பொங்கலுக்கு என் மகன் வருவான் என்று காத்திருந்தேன். அது கானல் நீராகிவிட்டது. எனக்கு 71 வயது ஆகிவிட்டது. நான் கண்ணை மூடுவதற்குள் என் மகனை பார்ப்பேனா?'' என்று வாய்விட்டு அழுகிறார் அற்புதம்மாள்.
மதுரைக்கு வந்த அவரை நக்கீரனுக்காக சந்தித்தபோது நம்மிடம் அவர் கூறியது… “""பேரறிவாளன் ஒப்புதல் வாக்குமூலத்தை திரித்து எழுதிவிட்டேன் என்றும், மனித வெடிகுண்டு தனு பயன்படுத்திய பெல்ட்பாம் தயாரித்தது யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், பேரறிவாளன் விஷயத்தில் சட்டமறியா பிழை நடந்துவிட்டது என்றும் ராஜீவ் கொலையை விசாரித்த அதிகாரிகளே வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள்.
ஆனாலும் என் மகனை இதுவரை விடுதலை செய்யாமல் என் மகனைக் கேட்டு மடிப்பிச்சை ஏந்த வைக்கிறார்கள். ஒரு தாயின் ஏக்கம் ஆளும் அரசை சும்மாவிடாது. நாங்கள் பெரியார் இயக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 19 வயதில் எனது மகன் சிறைக்குச் சென்றான். இப்போது 28 ஆண்டுகள் கடந்துவிட்டன. அனைத்து அரசியல் கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும்கூட எனது மகனை விடுதலை செய்வதில் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் ஆளுநரின் ஒரு கையெழுத்துக்காக காத்திருக்கிறது.
148 நாட்கள் ஆகியும் ஏன் ஆளுநர் தாமதிக்கிறார்? நியாயமான கோரிக்கை புறந்தள்ளப்படுகிறது. தமிழக அரசு, "எங்கள் வேலை முடிந்துவிட்டது, இனி மத்திய அரசின் ஆளுநர் கையில் இருக்கிறது' என்கிறது. சு.சாமியோ, "பா.ஜ.க. இருக்கும்வரை பேரறிவாளனுக்கு விடுதலை கிடையாது' என்று ஆணவமாக சொல்கிறார். அவரைதான் விசாரணை செய்ய வேண்டும். என்ன காரணமோ பெரிய மனிதர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் தப்பித்துவிட்டனர். 28 வருடம் என் மகனை பலிகடா ஆக்கிவிட்டனர்.
சிறையில் அவனுடைய உடல் ஆரோக்கியமற்று இருக்கிறது. சிறுநீரக கோளாறு ஏற்பட்டிருக்கிறது. இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சிறையிலேயே அவனை கொன்றுவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. அப்படி ஏதாவது நடந்தால் நானும் சாவதைத் தவிர வேறுவழி இல்லை. தமிழகம் மக்களிடம் சென்று ஒரு தாயாக என் கண்ணீருக்கு பதில் கேட்கப்போகிறேன். ஆளுபவர்களின் பொய் முகத்தை மக்களுக்கு எடுத்துக் காட்டப் போகிறேன். இனியேனும் குட்டியை தாயோடு சேர்த்து வையுங்கள் என்று மக்களிடம் மடிப்பிச்சை கேட்கப்போகிறேன்'' என்று அற்புதம்மாள் கதறியது நெஞ்சை உலுக்கியது.இந்தத் தாயின் கண்ணீரை துடைப்பாரா ஆளுநர்? தேர்தல் நெருங்கும்போது நல்ல சேதி வரும் என்பதுதான் கடைசிக்கட்ட நம்பிக்கை.