தற்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் அனைத்து சமூகத்தினரும் முற்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர போராட்டம் நடத்துவார்கள் போல… தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டுப் போராடி அந்த உரிமைகளை நீதிக்கட்சியும் திராவிட இயக்கங்களும் பெற்றுத்தந்தன.
இட ஒதுக்கீடு அடிப்படையில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தின் அரசுப்பணிகளில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து சமூக நீதி நிலைநாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான், தமிழகத்தில் மட்டும், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்த சில சாதிகளும், முற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்த பல சாதிகளும் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கும்படி கோரி போராடினார்கள்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பில் தற்போது இருக்கும் பல சாதிகள் அப்படி இணைக்கப்பட்டவைதான். அதுபோக, முற்பட்ட சாதிகளில் இருப்போர்கூட அவர்களுடைய சாதிப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்று பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தால் அதையே தங்கள் சாதியாகக் குறிப்பிட்டு சான்றிதழ் பெறும் வழக்கமும் இங்கே இருக்கிறது. இப்போது, பாஜக அரசு கொண்டு வந்துள்ள முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு ஒதுக்கீடு என்பது புதிய விவாதத்தை கிளப்பியிருக்கிறது. ஆம், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு இல்லாத சலுகை இந்த பிரிவினருக்கு கிடைத்திருக்கிறது.
ஆண்டுக்கு 8 லட்சத்திற்குள் வருமானம் வந்தால் அவர்களுக்கு இந்த இடஒதுக்கீடு கிடைக்கும் என்றார்கள். அப்போதே இதை எதிர்த்தார்கள். இந்த வருமான வரம்பில் நிறைய மோசடி செய்யலாம் என்று கூறினார்கள். எதிர்ப்பை மீறி பாஜக அரசு இந்த இடஒதுக்கீடை அமல்படுத்தியது. இப்போது, வேலைவாய்ப்பை பெறுவதற்கான மதிப்பெண்களிலும் பாஜக அரசு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடங்களை பறிக்கும் வகையில் தலையிட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 61 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என்றும், முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் தமிழகத்தில் 28 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்தால் போதும் என்றும், உ.பி., மேற்கு வங்கம் போன்ற வட மாநிலங்களில் அவர்கள் மதிப்பெண் பெறாவிட்டாலும் வேலையில் முன்னுரிமை பெறலாம் என்றும் கூறியிருக்கிறார்கள்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் இந்த முடிவு கடுமையான விமர்சனத்தை உருவாக்கி இருக்கிறது. இதையடுத்து, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் தங்களை முன்னேறிய வகுப்பினர் பட்டியலில் சேர்க்கும்படி போராடத் தொடங்கினாலும் ஆச்சரியமில்லை என்ற பேச்சு பரவலாயிருக்கிறது. மத்திய அரசின் இந்த இடஒதுக்கீடை எதிர்த்து தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டங்கள் நடக்குமோ என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.