-எஸ்.எஸ்.சிவசங்கர், முன்னாள் எம்.எல்.ஏ.
தர்மபுரி மாவட்டம், அஞ்சட்டி வழியாக கர்நாடகத்தில் நுழைந்தோம். அது ராம்நகர் மாவட்டம். காவிரி பாய்ந்தாலும் தர்மபுரி மாவட்டத்தில் பசுமை பெருமளவில் இல்லை. கர்நாடகாவில் நுழைந்ததும் பசுமைச் சூழல் தாண்டவமாடியது. இயற்கையே வஞ்சிக்கிறது.
ஊரிலிருந்து கிளம்பியதிலிருந்து வழியெங்கும் டிஜிட்டல் பேனர்கள், தட்டிகள் என்று பார்த்துச் சென்றோம். தமிழகத்தின் எல்லையில் இருக்கும் கடைசி வீட்டுச் சுவரிலும் கடந்த தேர்தலுக்கு வரையப்பட்ட கட்சிச் சின்னம் இருந்தது.
கர்நாடக கிராமத்தில் அப்படி எதுவும் இல்லை. தேர்தல் புறக்கணிப்பு போலும் என்று நினைத்து கடந்தோம். அடுத்த கிராமத்திலும் அதே நிலைதான். தேர்தலுக்கான பரபரப்பு ஏதும் இல்லை.
அடுத்து கனகபுரா நகரை அடைந்தோம். அதன்பின், ஒரு கிராமத்தின் டீக்கடையில் ஒரு கூட்டம் ஓய்வாக அமர்ந்திருந்தது. எந்த அரசியல் பேச்சும் இல்லை. டீ கொடுத்தவரிடம் பேச்சு கொடுத்தேன். ""யாருக்கு ஓட்டு போடுவீங்க?'' தெளிவாக பதில் சொன்னார், ""நம்ம கௌடவருக்கே''.
இவ்வளவுதான் கர்நாடக தேர்தல் அரசியல். சாதிரீதியான அரசியல்தான் அங்கு. டீ கொடுத்தவர் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் "ஒக்காலிகா' வகுப்பை சேர்ந்தவர், அதனால் "தேவகௌடா' கட்சிக்கு வாக்களிக்கப் போகிறார்.
கர்நாடக அரசியலில் சக்தி வாய்ந்த சமூகங்கள் இரண்டு. ஒன்று "லிங்காயத்' சமூகம். மற்றொன்று "ஒக்காலிகா' சமூகம். இந்த இரு சாதிகளைச் சேர்ந்த வேட்பாளர்களே எல்லாக் கட்சிகளிலும் நிறைந்திருக்கிறார்கள். மொத்த கர்நாடக மக்கள் தொகையில் லிங்காயத் 10 சதவீதமும், ஒக்காலிகா 10 சதவீதமும் உள்ளனர். இதில் பா.ஜ.க.வின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர். தேவகௌடா, ஒக்காலிகா சமூக பிரதிநிதியாக பார்க்கப்படுகிறார்.
பார்ப்பனர், லிங்காயத், ஒக்காலிகா சாதிகளைத் தாண்டி வெகுசில நேரங்களிலேயே மற்ற, பிற்பட்ட வகுப்பில் இருந்து முதல்வர்கள் வருகிறார்கள். அப்படி வந்தவர்தான் தற்போதைய முதல்வர் சித்தராமையா. "குரும்பா' இனத்தைச் சேர்ந்தவர்.
பா.ஜ. கட்சியானது லிங்காயத், இந்துத்துவா பலத்தை நம்பி நிற்கிறது. காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர், தலித், இதர பிற்பட்டோர் பலத்தை நம்பி களம் இறங்கியிருக்கிறது. தேவகௌடாவின் ஜனதாதளம் (எஸ்) ஒக்காலிக சமூக பலத்தை நம்பி நிற்கிறது.
கரும்பு ஜூஸ் விற்கும் முனிஸ் ஸ்வாமி கர்நாடக அரசியல் நிலையை சொன்னார்.
""ஜே.டி.எஸ். எவ்வளவு இடத்தை பிடிக்கப் போகிறது என்பதை பொறுத்தே ஆட்சி அமையும் நிலவரம்'' என்றார்.
தென்கர்நாடகம் பொதுவாக காங்கிரஸுக்கு முன்னிலை அளிக்கும் பகுதி என்றும், வட கர்நாடகம் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக இருக்கும் பகுதி என்றும் பார்க்கப்படுகிறது. தேவகௌடாவின் ஜனதாதளம் வெற்றி பெறும் எண்ணிக்கையானது பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க ஆதரவு தரவே பயன்படும் என்பதும் எல்லோரும் வெளிப்படையாக தெரிவிக்கும் கருத்து.
தொழிலதிபர் ஒருவரை சந்தித்தோம். அவர் பார்வை வேறு விதம். ""தொழில் செய்வோரை பொறுத்தவரை யார் ஆட்சி செய்தாலும் ஒன்றுதான். ஒரே நேரத்தில் காங்கிரசாரிடமும், பா.ஜ.க.வினரிடமும் நட்பாக இருக்க முடியும். தமிழகத்தைப்போல் அதை இங்கு தவறாகப் பார்ப்பது இல்லை. கர்நாடக அரசியல்வாதிகள் பெரும்பாலும் கோடீஸ்வரர்கள்தான். தொழிலதிபர்களாக விளங்குகிறார்கள்.
நிட்டூர் என்ற ஒரு சிறு நகரத்தில் ஒரு வேட்பாளரை காண நேரிட்டது. 200 இருசக்கர வாகனங்கள் ஊர்வலமாக வர, பின்னால் திறந்த ஜீப்பில் வந்தார் வேட்பாளர். எந்த அரசியல் அடையாளமும் இல்லை. விசாரித்தால், பா.ஜ.க.வில் இடம் தராததால், சுயேட்சையாக போட்டியிடுகிறாராம். செல்வாக்குள்ள நபராம். சுரங்க அதிபர். அரசியல் கட்சி வேட்பாளர் போன்றே "பலமாக' இருந்தது பிரச்சாரம்.V தினக்கூலி கண்ணையா கர்நாடக அரசியலின் கள நிலவரத்தை "உண்மையாக'ச் சொன்னார். ""போன தேர்தலில் ரூ.200, ரூ.300 கொடுத்தார்கள். இந்தமுறை ரூ.500 வழங்கப்படும் என்பது மக்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அந்த அளவிற்கு பண நடமாட்டம் இருப்பதை பலரும் ஒப்புக் கொண்டார்கள். கர்நாடக அரசியல் குறித்து விவாதிக்கும்போது ஒரு குடும்பத்தை தவிர்க்க இயலாது. ரெட்டி சகோதரர்கள் குடும்பம். கடந்த காலத்தில் சுரங்க முறைகேடு விவகாரத்தில் சிக்கியவர்கள். ஜனார்த்தன ரெட்டி பா.ஜ.க. அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். இந்தத் தேர்தலில் இவரது குடும்பத்தை சேர்ந்த 9 பேர் போட்டியிடுகிறார்கள், பா.ஜ.க. சார்பில். வட கர்நாடகாவில் பெரும்பாலான இடங்கள் இவர் கை காட்டுகிறவருக்கே வழங்கப்பட்டிருக்கிறது, பா.ஜ.க.வில்.
கர்நாடக அரசியலில் சைவ மடங்கள் பெரும் சக்தி வாய்ந்தவை. லிங்காயத்து, ஒக்காலிகா, குரும்பா, மடிகா என அனைத்து சாதிகளுக்கும் மடங்கள் உண்டு. மடத்தின் தலைவர்களாக உள்ள சாமியார்கள் தேர்தலில் ஓர் முக்கியமான அங்கமாக விளங்குகின்றனர்.
வழக்கமாக பொதுத்தேர்தல் என்றால், ஆளுங்கட்சி வெற்றி பெறாது என்பதே பொதுக்கருத்தாக இருக்கும். ஆனால், அந்தப் பேச்சு கர்நாடக மாநிலத்தில் எங்குமே இல்லை. சித்தராமையா மாற்றி இருக்கிறார்.
லிங்காயத்து இனத்தவர்களுக்கு நீண்ட நாட்களாக ஓர் கோரிக்கை இருந்தது. தங்களை தனி "மதமாக' அங்கீகரிக்க வேண்டும் என்பதே அது. சித்தராமையா அந்தக் கோரிக்கையை நிறைவேற்றி வைத்தார். இந்த லிங்காயத்து இனத்தவர் பா.ஜ.க.வின் முக்கிய பலம். சிறு மாற்றமும் பா.ஜ.க.வை பாதிக்கும் சூழல் இருப்பதாக பேச்சு.
அதேபோல சித்தராமையா அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் அவர் மீதான எண்ணத்தை மாற்றி இருக்கிறது. பா.ஜ.க.வின் எடியூரப்பா அரசு மீது ஏற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் போல், சித்தராமையா அரசுமேல் பெரியளவில் இல்லை.
தேர்தல் களத்தில் மோடி, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் பிரச்சாரம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.
பா.ஜ.க. நவீன பிரச்சாரத்தில் முழுவீச்சில் இறங்கியிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் நுழைந்ததில் இருந்து இணைய இணைப்பின் மூலம் மொபைல் போனை திறந்தால், பா.ஜ.க. விளம்பரம் வந்து விழுகிறது. மோடி, அமித்ஷா, எடியூரப்பா சிரிக்கிறார்கள். செய்தி சேனல்களை வைத்தால், ஐந்து நிமிடத்திற்கோர் பா.ஜ.க. விளம்பரம். மத்திய பா.ஜ.க. அரசின் இலவச கேஸ் இணைப்பு உள்ளிட்ட சாதனைகளை அடுக்குகிறது.
காங்கிரஸ், சித்தராமையாவின் பிரச்சாரத்தை நம்பியுள்ளது. கர்நாடகக் கிராமங்களில் புகுந்து வெளிவருகிறார். தேவகௌடாவின் ஜனதாதளம் (எஸ்) எவ்வளவு வாக்குகளை பிரிக்கப்போகிறது, எவ்வளவு இடங்களை கைப்பற்றப்போகிறது என்பதுதான் கர்நாடக மாநில தேர்தலின் முடிவுகளை நிர்ணயிக்கப்போகிறது என்பதே அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
முன்னாள் பிரதமர் தேவகௌடாவையும், அவர் மகன் முன்னாள் முதல்வர் குமாரசாமியையும் டெல்லி பத்திரிகையாளர்கள் "ஜோக்கர்களாகவே' கருதுகிறார்கள். ஆனால் கர்நாடக அரசியல் ஆட்டத்தின் போக்கை இந்த "ஜோக்கர் கார்டுகள்' மாற்றும் என்பது கர்நாடக மக்கள் எண்ணமாக இருக்கிறது.