சங்கர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருக்கும் தண்டனை குறைப்பு மற்றும் விடுதலை கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் இதுதொடர்பாக கூறும்போது, “கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி சங்கர் என்ற இளைஞர் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவருடைய மனைவி கவுசல்யா வெட்டப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று மீண்டார், அதாவது ஒரு கூலிப்படை கும்பல் சங்கர், கவுசல்யா கடைவீதிக்கு செல்லும்போது, வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயன்றது. இதில் காயங்களுடன் கவுசல்யா பிழைத்துக்கொண்டார். சங்கர் அதே இடத்தில் பலியானார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது மிக அப்பட்டமான சாதிய ஆணவ படுகொலை என்பது அனைவருக்கும் தெரியும். இதில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு திருப்பூர் நீதிமன்றம் தண்டனை கொடுத்தது. சிலரை விடுதலை செய்தது. இதில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்திருந்தனர். தற்போது அந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பு கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய குற்றவாளியான சின்னசாமி விடுவிக்கப்பட்டுள்ளார். கூலிப்படையை சேர்ந்த சிலருக்கு மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்ற தீர்ப்பு என்பது மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. சங்கருக்கு நடந்த ஆணவ படுகொலையைவிட இந்த தீர்ப்புதான் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றம் கொடுக்கின்ற தீர்ப்புகளை மதிக்கின்றோம், ஏற்றுக்கொள்கிறோம் என்பது வேறு. அதில் உண்மை தன்மை இல்லை என்கிறபோது நாங்கள் மேல் முறையிட்டுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. இந்த வழக்கிலும் அந்த சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.
கவுசல்யா அந்த சம்பவத்தை நேரடியாக பார்த்த ஒரு சாட்சி, அவருடைய சாட்சியைத்தான் நீதிமன்றம் ஆதாரமாக எடுத்துக்கொண்டு தீர்ப்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த தீர்ப்பை நான் வாசித்து பார்த்தேன். 311 பக்கங்கள் கொண்ட தீர்ப்பாக அது இருக்கின்றது. அந்த தீர்ப்பில் ஒரு இடத்தில் கூட இந்த கொலை சாதி ஆணவப்படுகொலை என்று பதிவு செய்யப்படவில்லை. இந்தியா முழுவதும் இது சாதிக்காக நிகழ்த்தப்பட்ட ஒரு படுகொலை என்று தெரிந்திருந்தாலும், நீதிமன்றத்தின் தீர்ப்பில் ஒரு வார்த்தை கூட அந்த மாதிரியான வாசகங்கள் இல்லை. அரசுதரப்பு நீதிமன்றத்தில் போதுமான நடைமுறைகளை செய்து குற்றவாளிகளை தப்பிக்க விட்டிருக்கக்கூடாது. ஆனால் அரசு அத்தகைய எந்த முயற்சியையும் செய்யவில்லை. இதில் இருந்தே தெரிகின்றது அவர்களுக்கு எத்தகைய அனுமானங்கள் இருந்திருக்கின்றது என்று. இன்னும் இந்த வழக்கில் நீதி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.