பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த அனைத்து எதிர்க்கட்சிக் கூட்டம் தொடர்பாக அரசியல் விமர்சகர் மருத்துவர் காந்தராஜை சந்தித்து பல கேள்விகளை முன் வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...
அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்குச் சென்ற மோடியை பெரிதும் வரவேற்றார்கள் என்று பாஜகவினர் கூறுகிறார்களே?
ஒரு பிரதமரை எந்த நாட்டிற்கு சென்றாலும் அந்த நாடு அவரை வரவேற்கத் தான் செய்யும். அந்த மரியாதை பதவிக்காகத் தானே தவிர மோடிக்காக அல்ல. ஒரு பிரதமரை crime minister of india என்று ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டினார்கள் அமெரிக்கா மக்கள். மேலும் நாடாளுமன்றத்தில் யார் பேசினாலும் எழுந்து நின்று கை தட்டுவார்கள். அந்த நாடாளுமன்றத்தில் ஏற்கனவே ஒத்திகை பார்த்து பேசியதால் எழுந்து நின்று கை தட்டினார்கள். ஆனால், உங்கள் நாட்டில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லையா என்று நிரூபர்கள் கேட்ட கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
அமெரிக்க பிரதமர் பைடன் அரை மணி நேரம் பத்திரிகையாளர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுகிறார். ஆனால் மோடி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் உடனே சென்றுவிட்டார். இதையெல்லாம் இங்கிருக்கும் ஊடகங்கள் மறைக்கிறது. முன்னாள் அதிபர் ஒபாமா கேட்ட கேள்விக்கு கூட பதில் சொல்லாமல் எங்கள் நாட்டு மக்கள் எல்லாரும் நன்றாக இருக்கிறார்கள் என்று கூறுகிறார். மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கும் விசயமெல்லாம் அவர்களுக்கு தெரியாமல் இருக்குமா.
மோடி அமெரிக்க பிரதமருக்கும் அவருடைய மனைவிக்கும் பரிசு அளிக்கிறார். இதை விமர்சனம் செய்கிறார்களே?
அதாவது ஒரு பதவியில் இருக்கும் அதிபருக்குத் தான் பரிசு கொடுப்பார்கள். அவருடைய குடும்பத்தை சார்ந்த மற்றவருக்கும் கொடுக்கமாட்டார்கள். அதற்குத் தான் விமர்சனம் செய்கிறார்கள்.
பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே ஒற்றை இலக்கு என பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிக் கூட்டத்தில் பேசுகிறார்கள். அதை எப்படி பார்க்கிறீர்கள்?
தேர்தல் நேர்மையாக நடந்தால் ஒரு இடத்தில் கூட பாஜக வெல்லாது என்பது உலகத்துக்கே தெரிந்த விசயம் தான். பாஜகவினர் பெரிதும் நம்பிக்கை வைத்திருப்பது தேர்தல் ஆணையமும், அமலாக்கத்துறையும் தான். நீதிமன்றம் கூட செந்தில் பாலாஜி வழக்கில் அவர்களை காலை வாரிவிட்டது. கர்நாடகா தேர்தலில் நேர்மையான முறையில் முடிவுகள் வந்ததால் தான் பாஜகவினர் அதிகமாக பயந்து போய் இருக்கிறார்கள். தேர்தல் மட்டும் நேர்மையாக நடந்தால் நாம் ஓட்டு போட வேண்டிய அவசியமில்லை. மேலும் அவர்களுக்கு சார்பான பத்திரிகை ஒன்று கூட 2024 தேர்தலில் ராகுல் காந்தி 70 சதவீதம் மோடிக்கு 30 சதவீதம் வெற்றி வாய்ப்பு உள்ளது என்று வெளியிட்டுள்ளது.
அனைத்து எதிர்க்கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களும் தங்களை பிரதமராக எண்ணித் தான் இருக்கின்றனர். அதனால் இந்த கூட்டத்தால் பின்னால் பிரச்சனை ஏற்படும் என்று பாஜகவினர் கூறுகின்றார்களே?
பீகாரில் தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை ஆகியவற்றை வைத்துக் கொண்டு தில்லுமுல்லு செய்தும் கூட நிதிஷ் குமாரை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால் நிதிஷ் குமார் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுவது தான் இவர்களுக்கு அதிக பயமே. அது மட்டுமல்லாமல் கர்நாடகா தேர்தலில் தேர்தல் ஆணையும் நம்மை கைவிட்டு விட்டது என்ற பயத்தினால் எதை எதையோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இவர்கள் ஆசை பொய்க்கும் வகையில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்குள் எந்த பிரச்சனையும் வராது.
அமலாக்கத்துறை நெருக்கடி தான் இவர்களை ஒன்று சேர்த்து வைத்திருக்கிறது. அதனால் இவர்களுடைய கூட்டணி ஊழல் கூட்டணி என்று கூறுகின்றார்களே?
ஊழல் கூட்டணியில் இருந்து கொண்டு மற்றவர்களை ஊழல்வாதி என்று கூறுகிறார்கள். அதிமுக ஆட்சியில் ஊழல் செய்த குற்றத்திற்கு தான் செந்தில் பாலாஜி மீது வழக்கு போடப் பட்டிருக்கிறது. தங்கமணி, வேலுமணி தான் ஊழலுடைய ஊற்றுக்கண். அது மட்டுமல்லாமல் அதிமுக தலைவரான ஜெயலலிதாவை ஊழல் குற்றவாளி என்று சொன்ன பிறகும் அவர்கள் தான் சிறையில் இருந்து வெளியே கொண்டு வந்தார்கள். அவர்களுடைய கட்சியில் இருந்த போது செந்தில் பாலாஜி நல்லவராக இருந்தவர் அவர்களை விட்டு வெளியே சென்ற பின்பு ஊழல்வாதியாக இருக்கிறார். ஒரு வேளை செந்தில் பாலாஜி பாஜகவில் இணைந்தார் என்றால் அவரை ஊழலற்றவர் என்று சொல்வார்கள். தேசிய கட்சியின் வேலையே இது தான்.
எமர்ஜென்ஸி நினைவு கூறும் வகையில் பிரதமர் மோடி ட்வீட் போட்டிருக்கிறாரே?
இன்றைக்கு இணைந்திருக்கும் எதிர்க்கட்சிகள் அனைவருமே அன்றைக்கு எமர்ஜென்ஸியின் போது எதிர்த்து போராடியவர்கள். அவசர நிலையை விட பாஜகவினுடைய ஆட்சி மோசமாக உள்ளதால் தான் மீண்டும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்திருக்கிறார்கள். எப்படி அவரச நிலையின் போது அடிபட்டு இந்திரா காந்தி சிறைக்கு சென்றாரோ அதே போல் மோடி போவதை அவர் தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.
9 ஆண்டு ஆட்சிக் காலம் சிறப்பானதாக இருக்கிறது என்று கூறுகிறார்களே?
அங்கே மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அதைப் பற்றி கவலைப் படாமல் இருக்கிறார் மோடி. நீரோ மன்னன் தன்னுடைய மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்ற சோகத்தில் பிடில் வாசித்தார். அதே போல், தன்னுடைய மக்கள் கஷ்டப்படுகிறபோது மோடி உல்லாச பயணம் சென்றிருக்கிறார்.
மோடிக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது அதனால் அவரை வீழ்த்த முடியாது என்று நட்டா கூறுகிறாரே?
இந்திய மக்கள் நன்றாக இருக்கிறார்களா என்பதை அதிகாரிகளின் மூலம் தெரிந்து கொள்கிறார் மோடி. இவர் எப்போது இந்தியாவில் இருந்தார். அதனால் இந்திய மக்கள் பற்றி கவலையில்லாமல் இருக்கிறார்.
பாட்னாவை தொடர்ந்து அடுத்து சிம்லாவில் நடக்கவிருக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளாத கட்சிகளான மாயாவதி போன்றவர்கள் இணைய வாய்ப்பு இருக்கிறதா
மாயாவதியை இந்த கூட்டத்தில் இணைத்தால் அது நல்லதுக்கல்ல. ஏனென்றால் அந்த கூட்டத்தால் நமக்கு என்ன நன்மை என்பதை பார்த்து தான் கை சேர்வார். அதே போல் சந்திர சேகர ராவ் காங்கிரஸை எதிர்த்து நின்றவர். ஆனாலும், அவர் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தெற்கு பகுதியில் இருக்கும் கட்சிகள் இணைந்தால் அந்த கூட்டத்திற்கு பலம் கூடும். ஆனால், வடக்கு பகுதியை சேர்ந்த மாயாவதி போன்றவர்கள் இணைந்தால் அந்த கூட்டத்திற்கு பலவீனம் தான் ஏற்படும். நாடாளுமன்ற தேர்தலில் கூட அவர் ஒரே நிலைப்பாட்டில் இருக்க மாட்டார்.
இதே போன்ற கூட்டத்தில் கூட கலைஞர் பரிந்துரையின் பேரில் தேவ கவுடா பிரதமரானார். தான் பிரதமராக இருந்தால் மாநில உரிமை பறி போய் விடும் என்று மாநில சுய ஆட்சி, மத்தியில் அடிமைப் பட்டுவிடும் என்ற காரணத்தினால் தான் தேவ கவுடாவை பரிந்துரைத்தார் கலைஞர். மாநில உரிமை பாதுகாக்கப்படும் என்று தேசிய தலைமையில் உள்ள காங்கிரஸ் உறுதியளித்தால் ஜெகன் மோகன் ரெட்டி போன்றவர்கள் அடுத்த கூட்டத்தில் இணைய வாய்ப்பு உள்ளது.
இந்த கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொன்னால் தானே ஒரு நம்பிக்கை ஏற்படும் என்று கூறுகிறார்கள்?
நாங்கள் எதிர்ப்பது மோடியைத் தான் என்று சொன்னால் மட்டும் போதும். அனைவரும் இந்த கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டு போடுவார்கள். ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக வருவார் என்ற பயத்தினால் தானே அவர்கள் அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறித்தார்கள். தேர்தல் ஆணையம் மட்டும் நேர்மையாக நடந்தால் மோடியும் அமித்ஷாவும் அவர்களுடைய வீட்டுற்குச் செல்லத் தயாராக வேண்டியது தான்.