சூப்பர் டீலக்ஸ் படம் இன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்தப் படத்தில் வரும் ஒரு வசனம் விவாதத்தை கிளப்பியுள்ளது. அதில் இரு கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளும். அதில் ஒரு கதாபாத்திரம் "அப்போ என்னை ஜாதி பாத்துதான் கல்யாணம் பண்ணியா?" என்று கேட்கும். அதற்கு இன்னொரு கதாபாத்திரம் "ஆமா, அதிலென்ன தவறு. நீங்க தமிழ் மொழி, இந்தியன், இதெல்லாம் வச்சு பிரிப்பீங்க. தேசம்னா பக்தி? மொழின்னா பற்று. ஜாதின்னா மட்டும் வெறி. இது என்ன நியாயம்? அதெல்லாம் பெரிய கூட்டம், இது சின்ன கூட்டம். அது சரின்னா இது மட்டும் ஏன் தப்பு?" என்ற ரீதியில் இருக்கும் அந்த வசனம்.
br />
இதற்கு பல்வேறு கருத்துகள் எழுகின்றன. ஜாதிப் வெறியும், மொழிப் பற்றும் ஒன்றா? ஒரு வசனம் என்றாலும் ஒன்று சேராத இரண்டு விஷயங்களை எப்படி நீங்கள் சேர்க்கலாம்? ஜாதி ஒழிக்கப்படவேண்டிய ஒன்று. மொழி அப்படியல்ல, தேசியம் அப்படியல்ல. அவற்றால் ஏற்படும் கொடுமைகளை ஒடுக்கலாமே தவிர அவை தவறு என்று கூறமுடியாது. இரண்டையும் ஒன்றாய் கூறியது தவறு என்று கூறுகின்றனர்.
இன்னொரு கருத்து, 'இது உலக குடிமகன் (global citizens) தத்துவத்தின் அடிப்படையிலானது. அந்த தத்துவத்தின்படி நாடு, இனம், மொழி, பாலினம் என அனைத்தையும் மறந்து ஒன்றாய் இருக்கவேண்டும். இதனடிப்படையில்தான் அவர்கள் அந்த வசனத்தை அவ்வாறு அமைத்திருப்பார்கள்' என்று கூறுகின்றனர்.
படத்தில் பல இடங்களில் இன உணர்வு, இனப்பெருமை போன்ற விஷயங்கள் மறைமுகமாக நகைச்சுவையாக்கப்பட்டுள்ளன. சமீப காலமாக, 'தமிழனாய் இருந்தால் ஷேர் செய்யவும்', 'தமிழர் பெருமை' என்று சமூக ஊடகங்களிலும் வாட்ஸ் அப்பிலும் பல செய்திகள் உலவின. அதில் பல பொய்யாக உருவாக்கப்பட்டும் இருந்தன. அது தெரியாமல் அச்செய்திகள் லட்சக்கணக்கில் பகிரப்பட்டு வந்தன. இந்த நிலையை கிண்டல் செய்வதாக படத்தில் ஆங்காங்கே வசனங்கள் உள்ளன.
சினிமா ஹீரோக்களையும் விட்டுவைக்கவில்லை சூப்பர் டீலக்ஸ். படத்தில் ஒரு இடத்தில், புரட்சிகரமாக பேசும் ஒரு பாத்திரத்திடம் இன்னொரு பாத்திரம், "நீ இப்படியெல்லாம் பேசமாட்டியே? எப்போ இருந்து இந்தப் பழக்கம்?" எனக் கேட்க, "ஆமா... இப்போ ஆக்டிங் க்ளாஸ் போறேன். சீக்கிரம் ஹீரோவாகி, 'புரட்சி டாஷ் (___ )னு ஏதாவது ஒரு பட்டம் வச்சுக்கிட்டு அடுத்து அப்படியே அரசியல்வாதி ஆகிவிடலாம்ல" எனக் கூறுகிறார். நடிகர்கள் வைத்துக்கொள்ளும் பட்டங்களையும் சமீபமாக நடிகர்கள் அதிக அளவில் அரசியலுக்கு வருவதையும் கிண்டல் செய்வதாக இந்த வசனம் இருந்தது.
இன்னும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் போகிற போக்கில் தொட்டுச்செல்லப்படும், கிண்டல் செய்யப்படும், கலாய்க்கப்படும் விஷயங்கள் பல. அதுவும் சமகாலத்தில் நடக்கும் பல விஷயங்கள் படத்தில் கடக்கின்றன. வெளியான இன்றே இவை குறித்து மெல்ல விவாதங்கள் நடக்கத்தொடங்கியிருக்கின்றன. மற்றபடி படம் எப்படியிருக்கிறது என்பது குறித்து பெரும்பாலானோர், "இது இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் செம்ம கம் பேக். விஜய் சேதுபதி சூப்பர், சமந்தா சான்ஸ்லெஸ், ரம்யா கிருஷ்ணன் ராக்கிங்" என்றெல்லாம் சொல்கிறார்கள். சிலர், "படம் மெதுவாக நகர்கிறது, கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் ஓடுகிறது" என்று சில குறைகளை சொல்கிறார்கள். தியாகராஜன் குமாரராஜாவின் படம் இப்படித்தான் இருக்கும் என்று ஓரளவு அனுமானத்துடனும் எதிர்பார்ப்புடனும் வந்தவர்களுக்கு படம் மகிழ்ச்சியை தந்திருக்கிறது. அந்த வகையிலும், சில விவாதங்களை கிளப்பியிருப்பதிலும் சூப்பர் டீலக்ஸ் வென்றிருக்கிறது.