இந்தியாவில் தற்போது நிலவும் பாஜகவின் வெறுப்பரசியலுக்கு முடிவுகட்டி, சமத்துவமான, வேற்றுமையில் ஒற்றுமை என்ற பாரம்பரிய இந்தியாவை கட்டமைப்போம் என்று புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர், அருந்ததி ராய் உள்ளிட்ட ஆங்கிலம், இந்தி, தமிழ், உருது, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளைச் சேர்ந்த 200 எழுத்தாளர்கள் வாக்காளர்களுக்கு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வெறுப்பு அரசியலைப் பயன்படுத்தி நாட்டை பிளவுபடுத்தி, படைப்பாளிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் என்று கூறியுள்ள அவர்களுடைய அறிக்கையில் கூறியிருப்பதாவது…
கடந்த ஐந்து ஆண்டுகளில் எழுத்தாளர்களும், கலைஞர்களும், திரைப்பட படைப்பாளிகளும், இசைக்கலைஞர்களும், இதர கலாச்சார ஆர்வலர்களும் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் காயப்படுத்தப்பட்டுள்ளனர். அரசாங்கத்தை கேள்வி கேட்பவர்களை துன்புறுத்துகிறார்கள். கைது செய்கிறார்கள். பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வழக்குப் பதிவு செய்கிறார்கள். பலரை கொலையும் செய்கிறார்கள். இவை அனைத்தும் மாற வேண்டும். வெறுப்பரசியலுக்கு எதிராக வாக்களித்து நாம் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். சமத்துவமான, வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்தை பாதுகாக்கும் வகையில் இந்திய மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
அவரவர் விரும்பிய உணவை உண்ணவும், விருப்பமான கடவுளை வணங்கவும், அவரவர் விருப்பப்படி வாழவும், கருத்துகளை சுதந்திரமாக வெளியிடவும், எல்லா குடிமக்களுக்கு சமஉரிமைகளை பெற்றுத்தரவும், எதிர்க்கருத்துகளை பேச அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள உரிமையை பாதுகாக்கவும், மக்களைப் பிளவுபடுத்தி தாக்குதல் நடத்துவதை தடுக்கவும் நாம் வாக்களிக்க வேண்டும் என்று அதில் கூறியிருக்கிறார்கள்.