சில நாட்கள் முன்பு மதுரையில் செய்தியாளரின் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாகக் கட்சி நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்திருந்தார். இவரின் இந்த பதில் அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் இந்த விவகாரத்தில் பன்னீர்செல்வத்தின் கருத்தை விமர்சனம் செய்து வருகிறார்கள். ஜேசிடி பிரபாகர் போன்ற மூத்த தலைவர்கள் பன்னீர்செல்வத்தின் கருத்தை வரவேற்றுப் பேட்டியளித்து வருகிறார்கள்.
இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும், பன்னீர்செல்வத்தின் எண்ணம் எதுவாக இருக்கிறது, சசிகலா அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதா, தமிழகத்தில் பாஜகவின் அரசியல் போன்ற கேள்விகளை அரசியல் விமர்சகரும் மருத்துவருமான காந்தராஜ் அவர்களிடம் கேள்விகளாக முன்வைத்தோம்.
நம்முடைய கேள்விக்கு அவரின் பதில்கள் பின்வருமாறு...
" பன்னீர்செல்வம் ஒரே அடியாக சசிகலாவை வரவேற்கிறேன் என்று சொல்ல முடியாது. ஆகையால் படிப்படியாக அவர் சசிகலாவை ஆதரிக்க முடிவு செய்து இந்த முதல் அடியை எடுத்து வைத்துள்ளார். எடுத்த எடுப்பிலேயே நான் சசிகலாவை ஆதரிக்கிறேன் என்றால் அவரை சிலர் விமர்சிக்க வாய்ப்பு உண்டு. ஆகையால் இந்த மாதிரியான அரசியல் ரீதியான பேச்சைப் பன்னீர்செல்வம் நிதானமாகப் பேசுகிறார். முடிவு என்ன என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த நிலைமையில் அதிமுக அமைதியாக பாஜக வேகமாகக் களத்திற்கு வர வேண்டும் என்று பார்க்கிறது.
இதற்கு அண்ணாமலை அவரால் ஆன வேலைகளைச் செய்து வருகிறார். பாஜகவுக்குப் பொழுதுபோக வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும், அரசின் மீது புழுதிவாரி வீசுவார்கள். அவர்களும் வேல் யாத்திரை போனார்கள், இருக்கிற அனைத்து யாத்திரைகளும் போகிறார்கள். ஆனால் கதை ஒன்றும் ஆக மாட்டேன் என்கிறது. உப்பு விற்கப் போனால் மழை பெய்கிறது, பஞ்சு விக்கப் போனால் காற்றடிக்கிற கதையாகத்தான் தமிழகத்தில் பாஜகவின் கதை ஓடிக்கொண்டிருக்கிறது. செந்தில் பாலாஜியிடம் இவ்வளவு கேள்விகளை எழுப்பும் அண்ணாமலையிடம் பிஎம் கேர் பற்றி யாராவது கேட்டால் இவர் என்ன பதில் கூறுவார். மணல் மூட்டை மேல் உட்கார்ந்துகொண்டு அண்ணாமலை கேள்வி கேட்கிறார், அது அவிழ்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம்.
எனவே அவர்களை நோக்கி ஆயிரம் கேள்விகள் கேட்கலாம். அவர்கள் என்ன வென்றால் உத்தமர்களைப் போல் அடுத்தவர்களைக் கேள்வி கேட்கிறார்கள். இது எல்லாம் நீண்ட நாட்களுக்கு ஓடாது. இதற்கு விரைவில் எண்ட் கார்டு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த ஆறு மாதத்தில் தமிழகத்தில் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வட மாநிலத்தில் மின்சார பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் அப்படி அதாவது ஏற்பட்டதா? அப்படி இருந்தால் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டை முன்வைக்கலாம். ஆனால் மின்சாரம் சரியாகத்தானே கிடைக்கிறது. எங்கள் மீது கைவைத்துப் பார் என்று பேசுவதெல்லாம் அரசியல்வாதி பேசுவது போல் இல்லை, ரவுடிகள் இப்படிதான் பேசுவார்கள், கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அதற்குத் தமிழகத்தில் வாய்ப்பு குறைவு என்பதே என்னுடைய கருத்து " என்று கூறினார்.