
மோடியின் பாராளுமன்ற பேச்சு மற்றும் தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மையினர் அணி துணைத் தலைவர் அலிம் அல் புகாரி தன்னுடைய கருத்துக்களை நம்மிடையே எடுத்துரைக்கிறார்.
தன்னுடைய பாரத் ஜோடோ யாத்திரையின் போது அன்பின் வெளிப்பாடாக எதிர்க்கட்சியினருக்கும் ஃப்ளையிங் கிஸ் கொடுத்தார் தலைவர் ராகுல் காந்தி. அவர் ஸ்மிருதி இரானியைப் பார்த்துதான் பாராளுமன்றத்தில் ஃப்ளையிங் கிஸ் கொடுத்தாரா என்பதற்கு இவர்களிடம் பதில் இல்லை. ஸ்மிருதி இரானி பேசிக்கொண்டிருக்கும் போதே பாஜகவினர் ராகுல் காந்தி மீது புகார் கொடுக்கின்றனர். அவர் கேட்ட கேள்விகள் ஒன்றுக்காவது இவர்களிடம் பதில் உண்டா? மக்கள் மன்றத்தில் இவர்களுடைய புகார் எடுபடவில்லை.
பாஜகவின் திசைதிருப்பும் முயற்சி மக்களுக்குப் புரிந்துவிட்டது. ராகுல் காந்தி நின்ற இடம் வேறு. ஸ்மிருதி இரானி நின்றுகொண்டிருந்த இடம் வேறு. திசைதிருப்புவதில் கூட ஒரு தரம் இருக்கிறது. அதுகூட இவர்களுக்கு இல்லை. எதிர்க்கக் கூடியவர்களை நசுக்குவது தான் இவர்களுடைய பாணி. இவர்களால் எதற்குமே பதில் சொல்ல முடியாது. மணிப்பூருக்கு ஸ்மிருதி இரானி சென்றாரா? தேர்தல் நேரத்தில் மட்டும்தான் இவர்கள் அங்கு சென்றார்கள். மணிப்பூர் மக்களைப் பாதுகாப்பதற்கு நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
ராவணன் போல் ஆணவம் கொண்ட ஆட்சி இப்போது நடக்கிறது. மக்கள் மன்றத்தை எதிர்கொள்ள மோடி தயாராக இல்லை. மோடி தினமும் 18 மணி நேரம் வேலை பார்ப்பது அதானிக்காகத் தான். சென்ற முறை பாராளுமன்றத்தில் அதானி குறித்து பேசியதற்காகத் தான் ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தார்கள். கேட்கும் கேள்விகள் எதற்கும் மோடியிடம் பதில் இல்லை. இந்தி பேசினால் போதும் என்கிறார்கள். மணிப்பூர் மக்களுக்கு இந்தி தெரியும். பிறகு ஏன் அவர்களுக்கு இவ்வளவு கொடுமைகள் நடக்கின்றன? இந்தி தெரியாததால் தான் நாம் இங்கு நிம்மதியாக இருக்கிறோம். இல்லையென்றால் இவர்கள் பேசும் வெறுப்பு அரசியல் இங்கும் புரிந்திருக்கும்.
இந்தி தெரிந்ததால் எந்த வகையில் தமிழ்நாட்டை விட குஜராத் சிறந்த மாநிலமாகிவிட்டது? அந்த மொழி எனக்கு எதைத் தரும்? இவர்கள் ஆளும் மாநிலங்களில் சட்ட ஒழுங்கு முற்றிலுமாக சீரழிந்திருக்கிறது. அதை பாஜகவும் விரும்புகிறது. இதனால் எவ்வளவு உயிரிழப்புகள் நடந்திருக்கின்றன? எவ்வளவு வன்புணர்வுகள் நடந்திருக்கின்றன? இவர்கள் எல்லாம் மனிதப் பிறவிகள் தானா? மணிப்பூரில் உள்ள பாஜக எம்.எல்.ஏக்கள் கூட அங்கு சட்டம் ஒழுங்கு சரியில்லை என்கிறார்கள். பாஜக அரசின் மீது நம்பிக்கையில்லை என்கிறார்கள். மனிதகுலத்துக்கே ஆபத்தான கட்சி பாஜக.
வாஜ்பாய் கூட பாஜகவைச் சேர்ந்தவர் தான். ஆனால் அவர் இவ்வளவு மோசமாக இருந்ததில்லை. இவர்களுடைய மூளை மனிதத்தன்மை அனைத்தையும் மீறி, அத்தனை வன்முறைகளையும் ஆதரிக்கிறது. இவர்களால் இன்னும் எவ்வளவு கொடுமைகள் செய்ய முடிந்தாலும் செய்யட்டும். ஆனால் மக்கள் மன்றத்தில் இவர்களுடைய அநீதி பேசப்பட்டு வருகிறது. மக்களிடம் இவர்கள் அம்பலப்பட்டுவிட்டார்கள்.