சேலம் அருகே, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தெருவிளக்கு வசதி இல்லாமல் இருளில் மூழ்கிக் கிடக்கிறது குள்ளம்பட்டி கிராமம்.
சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது குள்ளம்பட்டி குக்கிராமம். நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. பெரும்பாலும் விவசாயக்கூலிகளும், கட்டடத் தொழிலாளர்களும் வசிக்கின்றனர். சேலம் மாநகரில் பல இடங்களில், பல நேரங்களில் காலை 10 மணி ஆனாலும் அணைக்கப்படாமல் காட்சி அளிக்கும் தெருவிளக்குகள் இருக்கும் நிலையில், குள்ளம்பட்டி கிராமமோ இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தெருவிளக்கு வசதியின்றி இருளில் மூழ்கிக் கிடக்கிறது.
தெருவிளக்கு வசதி செய்து தரும்படி அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அந்த கிராம மக்கள் படையெடுக்காத நாளில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஊஹூம்.... இதுவரை தீர்வு கிடைத்தபாடில்லை. இதுமட்டுமே பிரச்னை அல்ல என்கிறார்கள், அந்த கிராம மக்கள்.
ரமேஷ், மணிகண்டன், செல்வராஜ், மணி ஆகியோர் கூறுகையில், ''இந்த ஊருக்குள் எட்டு இடங்களில் தெருவிளக்கு மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் இப்போது ஒரே ஒரு கம்பத்தில்தான் மின்விளக்கு எரியும். மற்ற கம்பங்களில் தெருவிளக்கு போடப்படாததால், நாங்கள் இருளில்தான் இருக்கிறோம். இருட்டுக்குள் எத்தனை நாள்கள்தான் அவஸ்தைப்பட முடியும்? அதனால்தான் பல குடும்பங்கள் இங்கிருந்து வெளிச்சத்தை தேடி நகரப்பகுதிக்கும், சில குடும்பங்கள் அவர்களின் தோட்டங்களிலும் வீடு கட்டிக்கொண்டு இடம்பெயர்ந்துவிட்டன.
தெருவிளக்கு வசதி கேட்டு பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் புகார் மனு அளித்தும், ஒன்றிய அலுவலகத்தில் நேரில் போய் சொல்லியும்கூட இதுவரை தீர்வு காணப்படவில்லை. கடைசியாக ஆகஸ்ட் 15, 2018ம் தேதி நடந்த கிராமசபைக் கூட்டத்திலும் இதுகுறித்து தீர்மானம் கொண்டு வந்தோம். இப்போது அக்டோபர் 2ம் தேதியன்று கிராமசபைக் கூட்டத்திலும் அதே பிரச்னையைப் பேசினோம். அரசுப்பார்வையாளராக கலந்து கொண்ட அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய உதவியாளர் வடிவேல், எங்கள் பிரச்னையை காது கொடுத்துக் கேட்காமலேயே ஓட்டம் பிடித்து விட்டார்.
ஊருக்கு மத்தியில் பொதுக்கழிப்பறை கட்டிக் கொடுத்திருக்கின்றனர். தூய்மை இந்தியா என்றும், திறந்தவெளியில் மலம் கழிக்கக்கூடாது என்றும் கலெக்டரம்மாவும் பிரச்சாரம் செய்கிறார். ஆனால், பல ஆண்டுகளாக இந்தக் கழிப்பறை பூட்டியே கிடக்கிறது. மற்றோர் இடத்தில் உள்ள பொதுக்கழிப்பறை பயன்படுத்தாமலேயே போனதால் இப்போது புதர் மண்டிக்கிடக்கிறது. அந்த இடத்தில் சமூக விரோதிகள் மது அருந்துகின்றனர்.
தண்ணீர் வசதிக்காக மேல்நிலை நீர்த்தொட்டி கட்டிக்கொடுத்தனர். ஆனால் மேடான பகுதியில் குடியிருப்புகள் இருப்பதால் தொட்டியில் இருந்து தண்ணீர் திறந்து விட்டாலும், குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. காற்று மட்டும்தான் வருகிறது. அதனால் அந்த தண்ணீர் தொட்டியும் இப்போது சும்மாதான் இருக்கிறது. நாங்கள் குடிநீருக்காக தினமும் நாலஞ்சு தெரு கடந்து சென்று அங்குள்ள பொதுக்குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் பிடித்துக் கொள்கிறோம். எந்தவித முன்யோசனையுமின்றி தண்ணீர் தொட்டி கட்டப்பட்டதால் மக்களின் வரிப்பணம்தான் விரயமானது,'' என்கிறார்கள்.
தெருவிளக்கு வசதி இல்லாததால், குள்ளம்பட்டி கிராம மக்கள் தெருக்களில் தீப்பந்தம் ஏற்றி வைத்து பயன்படுத்துகின்றனர். அதாவது கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய மனிதர்களைப்போல அவர்களின் வாழ்க்கைமுறை மாறிக்கிடக்கிறது. அதேநேரம் வீடுகளில் மின்வசதி இருக்கிறது. தெருக்களில் கும்மிருட்டு நிலவுவதால் இரவு ஆறு மணி ஆனாலே எல்லோரும் வீடுகளில் அடைந்து கொள்கின்றனர்.
பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் இருப்பதால் இரவில் தெருவில் நடக்கவே அச்சப்படுகின்றனர். அதனாலேயே அவர்கள் தீப்பந்தம் கொளுத்தி பயன்படுத்தி வருவதாகவும் கூறினர்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, கந்தசாமி மனைவி முத்தம்மா என்ற மூதாட்டியிடம் சிலர், அவர் வீட்டில் தனிநபர் கழிப்பறை கட்டுவதற்காக அரசு வழங்கும் மானியத்தொகை 12 ஆயிரம் ரூபாய் பெற்றுத்தருவதாகக் கூறி, அவரிடம் இருந்து 2500 ரூபாய் வசூலித்துவிட்டு ஏமாற்றியுள்ளனர். அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கிளர்க் ஒருவர் தன்னிடம் பணம் பெற்றதாகச் சொன்னார்.
இதற்காக அவர் தான் அணிந்திருந்த தோட்டை அடகு வைத்து, அந்தப் பணத்தைக் கொடுத்துள்ளார். தன் வீட்டில் கழிப்பறை வந்து விடும் என்ற நம்பிக்கையில் குழி தோண்டி வைத்ததுதான் மிச்சம். இன்னும் கழிப்பறையைத்தான் காணவில்லை என்றும் புலம்பினார்.
தெருவிளக்கு பிரச்னை குறித்து அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தரப்பில் விசாரித்தபோது, ''குள்ளம்பட்டி கிராமத்தில் மின்கம்பங்களில் பல்புகளை பொருத்தினால், மர்ம நபர்கள் கல்லால் அடித்து உடைத்து வி டுகின்றனர். இதுபோல் பலமுறை நடந்துள்ளது. அதனால்தான் அந்த கிராமத்தை அப்படியே விட்டுவிட்டோம்,'' என்றார் கொஞ்சமும் குற்ற உணர்வின்றி.
நாமெல்லாம் 21ம் நூற்றாண்டில்தான் இருக்கிறோமா என்பதே சந்தேகம்தான்.