நக்கீரனுக்கு பெருகிவரும் ஆதரவு ஆளுநர் மாளிகையை ஏதோ செய்திருக்கிறது போலும். அடுத்தடுத்து ஆளுநர் பதவி விலக வேண்டும் என்றும், அவர் மீது குற்றமில்லை என்று நிரூபிக்கும்வரை விலகியிருக்க வேண்டும் என்றும் குரல்கள் ஓங்கி ஒலிப்பது ஆளுநர் மாளிகையின் செவிப்பறையை கிழிக்கிறது போலும்.
எனவேதான், தனது அடக்குமுறை நடவடிக்கையை நியாயப்படுத்த மேலும் ஒரு வழவழா அறிக்கையை விளக்கெண்ணையில் நனைத்து ஒப்புக்காக வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கை நக்கீரன் இதழ் நியாயம் தவறிவிட்டதாக சொல்வதையே முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறது.
திருவள்ளுவரையும், டாக்டர் ராதாகிருஷ்ணனையும் தேவையில்லாமல் ஒப்பிட்டு, அவர்களை தங்களுடைய நடவடிக்கைகளுக்கு துணையாக அழைத்திருக்கிறது.
அதுமட்டுமின்றி, சுப்பிரமணிய பாரதி, வ.உ.சி, அண்ணா, காமராஜர், எம்ஜியார், அப்துல்கலாம் போன்றோரை வரிசைப்படுத்தி தனக்கு ஆதரவு தேடப் பயன்படுத்தி இருக்கிறது.
இவர்களை பயன்படுத்தி இருக்க வேண்டியதில்லை. தனது நெஞ்சில் துணிவிருந்தால், நேர்மை துளியேனும் இருந்தால் ஒரு பத்திரிகை வெளியிட்ட கட்டுரைக்காக இந்தியத் தண்டனைச் சட்டம் 124 ஆவது பிரிவை பயன்படுத்தியது ஏன் என்ற நீதிமன்றத்தின் கேள்விக்கு பதிலை சொல்லியிருக்கலாம். அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருப்பதாக நீதிமன்றத்தில் கூறப்பட்ட குற்றச்சாட்டை ஆதாரத்தோடு மறுத்திருக்கலாம். பொத்தாம் பொதுவாக நக்கீரனை குறைகூறுவதிலேயே அறிக்கையின் வாசகங்கள் இருக்கின்றனவே தவிர, நக்கீரன் வெளியிட்ட கட்டுரைக்கு 124 ஆவது பிரிவு தேவையில்லை என்ற விஷயத்தை தொட்டுக்கூட பார்க்கவில்லையே ஏன்?
ஆளுநர் மாளிகையின் அறிக்கையில் ஏதேனும் நியாயம் இருக்கிறதா என்பதை வாசகர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே அந்த அறிக்கையின் தமிழாக்கத்தை இங்கே கொடுக்கிறோம்…
“மிகுந்த திகைப்புடனும், கவலையுடனும் இந்த செய்தி அறிக்கை வெளியிடப்படுகிறது.
திருவள்ளுவர் முதல் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரை பல நூற்றாண்டுகளாக மிகப்பெரிய தத்துவார்த்த தலைவர்களையும், மிகப்பெரிய கலாச்சாரத்தையும் கொண்ட நாடு இந்தியா.
தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் நேர்மை, உண்மை மற்றும் நல்லவை பக்கம் நிற்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
சமூகவிரோத சக்திகள் சமூகத்தை தங்கள் கையில் எடுத்துவிடுவார்களோ என்ற பயத்தில் இந்த விளக்கத்தை அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
பிரிட்டிஷ் காலத்திலிருந்து மகாத்மா காந்தி எ்போதும் உண்மை மற்றும் நல்லவற்றுக்கான பாதையில் அச்சை தவிர்த்து உறுதியாக நிற்கவேண்டும் என்று மக்களுக்கு போதித்திருக்கிறார்.
ஆளுநருக்கோ, ஆளுநர் மாளிகைக்கோ, அருப்புக்கோட்டை கல்லூரி உதவிப் பேராசிரியர் நிர்மலா தேவி என்பவருக்கும் தொடர்பு என்ற செய்தியில் துளியளவு உண்மையும் இல்லை, அந்தச் செய்திகள் முற்றிலும் தவறானவை.
போலீஸிடம் நிர்மலாதேவி கொடுத்த வாக்குமூலம் உண்மைக்கு மாறானது. மாநிலத்தின் முதல்குடிமகன் மீது ஆபாசமான, கோழைத்தனமான தாக்குதலை சகிக்கும் பொறுமையை இழந்த பிறகே பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பத்திரிகை சுதந்திரத்தை அச்சுறுத்துவதாக சிலர் கூறுவது நகைப்புக்குரியது.
எல்லா விஷயங்களுக்கும் ஒரு எல்லை உண்டு. கடந்த ஆறுமாதங்களாக, நிர்மலா தேவி விவகாரத்தில் சட்டப்படியான விசாரணைகள் நீதிமன்றத்தின் முன் விசாரணைக்காக வைக்கப்படுவதை கண்ணியம் நிறைந்த அமைதியுடன் கவனித்து வருகிறது.
செப்டம்பர் 2 ஆம் தேதி எல்லா விசாரணையும் நிறைவுபெற்று குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது. அதன்பிறகு, நக்கீரன் என்ற பத்திரிகையில் மீண்டும் ஆபாசமான தகவல்கள் வெளியிடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புலனாய்வு இதழியல் என்று சொல்லிக் கொள்கிறவர்கள், நிர்மலாதேவி போலீஸிடம் கொடுத்த உண்மையான வாக்குமூலத்தை சரிபார்க்க வேண்டும் என்றுகூட கவலைப்படவில்லை.
(நக்கீரனின் கேள்வி… போலீஸ் வாக்குமூலத்தை மட்டும் அப்படியே நம்பி போடுவது புலனாய்வு அல்ல. குற்றம்சாட்டப்பட்டவர் சொல்வதை அப்படியே ஏற்று வாக்குமூலத்தை தயார் செய்யுமா போலீஸ்? போலீஸ் விசாரணைக்கு அப்பால் நடந்த உண்மைகளையும் மறைக்கப்பட்ட உண்மைகளையும் வெளிக் கொண்டுவருவதுதானே புலனாய்வு?)
நக்கீரன் வெளியிட்ட கட்டுரையில் இதழியல் ஒழுக்கம் மீறப்பட்டுள்ளது. நிர்மலாதேவி கடந்த ஒரு ஆண்டில் எப்போதும் ராஜ்பவனுக்குள் நுழைந்ததில்லை. ஆளுநரையோ, அவருடைய செயலாளரையோ, ஆளுநர் மாளிகை ஊழியர்களையோ சந்தித்ததில்லை.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அன்னை தெரஸா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக மதுரை பல்கலைக்கழகத்திற்கு சென்ற ஆளுநர், மதுரை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கியதில்லை. அப்போது அவருடைய ஆளுநருடைய செயலாளர் உடன் செல்லவில்லை. நக்கீரனில் வெளியிடப்பட்ட கட்டுரையில் உண்மைக்கும் நேர்மைக்கும் மாறாக வெறுப்புணர்வுதான் அதிகமாக இருக்கிறது.
உண்மையை உணராமல், நக்கீரனின் அப்பட்டமான பொய்க் கட்டுரையை மரியாதைக்குரிய நபர்களும் ஆதரிப்பது வருத்தமளிக்கிறது.
சுப்பிரமணிய பாரதி, வ.உ.சி, அண்ணா, காமராஜர், எம்ஜிஆர், அப்துல்கலாம் போன்றோர் தங்களுடைய சிந்தனைகளாலும் பேச்சாலும் நடவடிக்கைகளாலும் இந்த மாநிலத்தை கவுரவப்படுத்தினார்கள்.
மாநில அரசின் அதிகாரத்தை ஆளுநர் மாளிகளை ஒருபோதும் எல்லை மீறி அதீதமாக பயன்படுத்தியதில்லை. தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால் சட்டப்படி ஒரு புகார் கொடுக்கப்பட்டது. ஜனநாயகத்தில் ஆரோக்கியமான கருத்துகள் பரிமாறப்படலாம், ஆனால், நேரடியாகவே, மறைமுகமாகவோ, ஆளுநரை நோக்கி விடுக்கப்பட்டால் தாங்கிக்கொள்ள முடியாது.. ஆளுநர் மாளிகையின் கண்ணியத்தை காயப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஆளுநர் மாளிகை பணிந்துவிடாது.”
இப்படி முடித்திருக்கிறது அந்த அறிக்கை. நீதிமன்றம் நக்கீரன் மீது 124 ஆவது பிரிவில் குற்றம்சுமத்தியது தவறு என்றுதான் சொல்லியிருக்கிறது. அவரை கைது செய்து நடத்திய விதத்தைத்தான் கண்டித்திருக்கிறது. உடல்ரீதியாகவோ, பலப்பிரயோகத்தை பயன்படுத்தி மிரட்டியோ அவருடைய பணிக்கு இடையூறு செய்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டிய சட்டப்பிரிவை, ஒரு பத்திரிகையில் வந்த கட்டுரைக்காக பயன்படுத்துவதை ஏற்கமுடியாது என்றுதானே நீதிமன்றமும், பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்க நினைப்பவர்களும் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பிரிவின்கீழ் ஏன் ஆளுநர் மாளிகை ஏன் புகார் கொடுத்தது என்ற விளக்கமே இந்த அறிக்கையில் இல்லை என்பதை வாசகர்கள் புரிந்துகொள்வார்கள் என்றே நினைக்கிறோம்.