Skip to main content

போன் செய்தா எடுக்காதீங்க... எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவு போட்ட எடப்பாடி!

Published on 13/06/2019 | Edited on 13/06/2019

மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி என்று விடாப்பிடியாக நிற்கும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். நெருக்கடி ஒருபுறம், "எனக்கும் மத்திய அமைச்சர் பதவி வேண்டும்' என வைத்தியலிங்கமும் தம்பிதுரையும் தனித்தனியாக முரண்டுபிடிப்பது மறுபுறமென்றால்..., காலியாகும் மூன்று மாநிலங்களவை எம்.பி. பதவியை குறிவைக்கும் அ.தி.மு.க.வினர். போதாக்குறைக்கு அக்கிரிமென்ட்படி கேட்கும் பா.ம.க., ஆர்டர் போட்டு கேட்கும் பா.ஜ.க. என சுற்றிச் சுற்றி உரலைப்போல் இடிபடும் முதல்வர் எடப்பாடி எது வந்தாலும் வரட்டும் ஆனால் ஆட்சியை மட்டும் விட முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம். டெல்லி கவலையை விட இப்போது பெரிதும் எடப்பாடியை வாட்டுவது தி.மு.க.வின் "பாலாஜி ஆபரேசன்' தானாம்.

 

admk



நமது நக்கீரனில் "தி.மு.க. பேரத்தில் 30 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்' என விரிவாக எழுதியிருந்தோம் அதில் சம்பந்தப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை உளவுத்துறை மூலம் எடப்பாடி ரகசியமாக கண்காணிப்பதையும் பட்டியல் போட்டுக் கூறியிருந்தோம், அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களே வெளியிடும் ரகசிய தகவல்கள்தான் இது.

அது என்ன "பாலாஜி ஆபரேசன்?'

பாலாஜி ட்ரீட்மெண்ட்படி சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை என 10 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அந்த பாலாஜியிடம் பரிசோதனைக்கு உட்பட்டுள்ளார்கள்'' என ரகசிய திட்டத்தை உடைத்து நம்மிடம் பேசினார் கொங்கு மண்டல அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர். அவரை தொடர்ந்து பேச வைத்தோம்...

 

 

dmk



அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வுக்கு வந்த மூத்த தலைவர்களனான சு.முத்துச்சாமி, எ.வ.வேலு, அனிதா ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். என பல பேர் இருந்தாலும் இப்போதைய அ.தி.மு.க. நிர்வாக அமைப்பின் பலம், பலவீனம் என்ன என்பதை தெரிந்ததோடு யாருக்கு என்னென்ன தேவைகள் என்பதை அவர்களின் ஜாதகத்தோடு லிஸ்ட் எடுத்து தூண்டில் போடமுடியும் என்றால் அது அரவக்குறிச்சியில் வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிதான்.

 

admk



அவர்தான் இப்போது தி.மு.க.வில் தொடர்பில்லாத ஒரு குழுவுடன் வெளிப்படையாக இறங்கியுள்ளார். இது மாநில உளவுத்துறைக்கு தெரிந்துவிட்டது அவர்கள் வைத்த பெயர்தான் "பாலாஜி ஆபரேசன்' என்பது. மேற்கு மற்றும் கொங்கு மண்டல எம்.எல்.ஏ.க்கள் பலருக்கும் செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது சின்னம்மா சசிகலா உத்திரவுப்படி எங்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்துள்ளார். ஏன் இப்போது முதல்வராக இருக்கும் எடப்பாடிக்கும் பல பஸ் ரூட் கொடுத்துள்ளார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் பஸ் ரூட் பெற்றுள்ளோம். அந்த வகையில் செந்தில் பாலாஜியுடன் மிகநெருக்கமான தொடர்பு எங்களில் 95 சதவீதம் பேருக்கு உண்டு. இப்போது எங்க எம்.எல்.ஏ.க்கள் பலர் கேட்பது இந்த ஆட்சியுடன் எங்களின் அரசியல் வாழ்வு முடியக்கூடாது என்பதுதான்.


 

 

admk



சிலருக்கு அமைச்சர் ஆசை, சிலருக்கு கட்சியில் மா.செ. போன்று வெயிட்டான பதவி வேண்டும் என்பது. மேலும் சிலரை பொருளாதார ரீதியாக உயர்வை ஏற்படுத்துவது. இந்த மூன்றுக்குள்தான் எல்லோரின் மொத்த தேவையும் அடங்குகிறது. பாலாஜி ஆபரேசனில் இரண்டுசுற்று பேச்சு முடிந்துவிட்டது. அடுத்தது ஒரே சுற்றுதான். இதுவரை நாங்கள் கட்டியது பழைய வேட்டியாக மாறும். புதிய கரைபுடன் புதிய வேட்டி கட்டும் நிலை வரும்...'' என்ற அவர் ""சார் போன வாரம் கொங்கு மண்டல எம்.எல்.ஏ.க்கள் பலருக்கும் முதல்வர் எடப்பாடி அலுவலகத்திலிருந்து தொடர்ந்து போன் வந்தது. "பாலாஜி போன் செய்தா எடுக்காதீங்க... உங்கள் தேவைகள் நிறைவேறும்'னு சொன்னாங்க. அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் ரெண்டு நாளைக்கு ஒருமுறை போன் செய்து "ஒரே மாதம் பொறுங்க கூவத்தூரில் கிடைத்ததுபோல் அதே மடங்கு உங்களுக்கு கிடைக்கும்'னு சொல்றாங்க. எங்களில் பலர் எதிர்பார்ப்பது பணம், பொருள் அல்ல... அடுத்தடுத்த முறையும் நாங்கள் பதவி உள்ள அரசியல்வாதிகளாக நடமாட வேண்டும் என்பதுதான்'' என அந்த மூத்த எம்.எல்.ஏ. வெளிப்படையாகவே பேசினார்.

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதே கொங்கு மண்டலம் நெருக்கடியை உருவாக்குகிறது.