திமுக தகவல் தொழில்நுட்ப மாநில துணைச் செயலாளர் பத்மப்ரியா நக்கீரன் டிவி யூடியூப் சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி ஒன்றில், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டாலும் பாஜக தான் தேர்தல் களத்தில் இருப்பது போன்று நான் நினைக்கிறேன். தமிழ்நாட்டில் பொதுவாகவே அதிமுக முதுகில் ஏறி பாஜக எதிர்க்கட்சி போன்று குரலை உயர்த்துகிறார்கள். அதிமுக அமைதியாகத் தான் சென்று கொண்டு இருக்கிறது. அமைச்சர் முதல் சென்னை மேயர் வரை இளைஞர்கள் அதிகமாக அரசியலில் உள்ளே வர ஆரம்பித்து விட்டார்கள். இளைஞர்கள் அரசியலுக்கு வர உள்ள திமுக வழிவகை செய்து கொண்டு இருக்கிறது. ஆட்சிக்கு வந்து 21 மாதத்தில் 210 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். எங்கள் தரப்பில் இவ்வளவு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம் என்ற பட்டியல் உள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்று சொல்லுபவர்கள் அதற்கான பட்டியலை வெளியிடுங்கள். வாய்ப் பேச்சில் அண்ணாமலை வீரர் என்பது மக்களுக்கு தெரியும்.
மக்களிடம் பணத்தை கொடுத்து வாக்கு வாங்கினார்கள் என்ற நிலை மாறி மக்களுக்கு இறைச்சி, சாப்பாடு கொடுத்து வாக்காளர்களை பூட்டி வைக்கிறார்கள் என கூறி வருகிறார்கள். மக்களை கொடுமைப்படுத்தி வாக்குகளை பெறும் பழக்கம் திமுகவிற்கு கிடையாது. பிரச்சாரத்திற்கு கூட்டணி கட்சிகளுடன் சென்று வாக்கு கேட்கிறோம். ஆனால் அதிமுகவினர் யாரிடம் கூட்டணி வைத்து இருக்கிறார்களோ அவர்களின் பெயரை ஏன் பயன்படுத்துவதில்லை. அண்ணாமலையை தவிர்த்து மோடியின் பெயரை யாருமே பயன்படுத்துவதில்லை. ஒன்றிய அரசு பற்றி அண்ணாமலை எதுவும் பேசுவதில்லை. திமுக மீதான குற்றச்சாட்டை மட்டுமே அண்ணாமலை பேசி வருகிறார்.
திமுக ஆட்சியில் மகளிருக்கு, பள்ளி மாணவருக்கு, இளைஞருக்கு இதை செய்தோம் என்று சொல்கிறோம். ஆனால். எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார் என்று சொல்லும்போது கூட எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா செய்த திட்டங்களை தான் சொல்லுகிறார். திமுக ஆட்சிக்கு வந்து சொன்ன திட்டங்களை விட சொல்லாத திட்டங்களையும் அதிகமாக செய்துள்ளோம். உதயநிதி ஸ்டாலின் செங்கல் தூக்கி பிரச்சாரம் செய்ததை காப்பி அடித்து அண்ணாமலையும் தற்போது செங்கல்லை தூக்கிக் கொண்டு இருக்கிறார். சமீப காலமாக அண்ணாமலை எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறார் என்று மக்களுக்கு தெரியும்.
தேர்தலில் பாசிச சக்திகள் தலைதூக்கி விடக்கூடாது என்பதால் தான் அமைச்சர்கள் தேர்தல் களத்தில் வேலை செய்கிறார்கள். மேலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறத் தான் அனைவரும் விருப்பப்பட்டு தேர்தல் களத்திற்கு வருகிறார்கள். அதிமுகவும் பாஜகவும் இரு உடல் ஒரு உயிராகத் தான் இருக்கிறார்கள். சின்னம் தான் அதிமுகவுடையது அவர்களின் பேச்சு பாஜக போன்று இருக்கிறது. அண்ணாமலை பேசும் பேச்சு தான் அதிகமாக கேட்கிறது" என்று தெரிவித்தார்.