எங்கேயோ இருக்கிற மாரியாத்தா என்மேல வந்து ஏறு ஆத்தா என்பதைப்போல புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, டுவிட்டரில் தெரிவித்த கருத்தை எதிர்த்து தமி ழகத்தின் சட்டமன்றத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் பேசிய பேச்சுகளை அவைக்குறிப்பிலிருந்து சட்டப்பேரவை சபாநாயகர் நீக்கி வைத்துள்ளார்.
இந்தியாவின் ஆறாவது மிகப்பெரிய நகரமான சென்னை, முன்பு வெள்ளத்தில் தத்தளித்தது. தற்பொழுது வறட்சியின் கோரப்பிடியில் சிக்கிய முதல் நகரமாக மாறியுள்ளது. மக்களின் சுயநல எண்ணமும் கோழைத்தனமான அணுகு முறையும், ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம், மோசமான ஆட்சி இவையே தமிழகத்தில் இந்த அளவுக்கு வறட்சி ஏற்பட காரணம்'' என டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருக்கிறார் கிரண்பேடி.
அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில், "நரேந்திர மோடி தண்ணீரை சேமிப்பதன் அவசியத்தைப் பற்றி மன் கீ பாத்தில் பேசியுள்ளார். தண்ணீரை எப்படி சேமிப்பது என்பதற்கு புதுச்சேரி மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. இங்கு பண்டைக்காலம் முதல் பிரெஞ்சு ஆளுகைக்குட்பட்ட காலம், சுதந்திர இந்தியா என அனைத்து காலகட்டத்திலும் தண்ணீர் சேமிப்பு சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது'' என எழுதியுள்ளார் புதுவை ஆளுநர்.
இந்தக் கருத்து பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களித்த தமிழக மக்களை, பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்த வடஇந்தியாவைச் சேர்ந்தவரான கிரண்பேடி கிண்டலடிக்கிறார் என தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பலைகளை உருவாக்கியது. "தமிழக மக்களை கோழைகள், சுயநலமிக்கவர்கள் என தமிழர்களின் வீரம் மிக்க வரலாறு தெரியாமல் கிரண்பேடி விமர்சித்தது தவறு. கவர்னரான அவரை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்'' என்கிறார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்.
கிரண்பேடி சொல் வதுபோல பாண்டிச்சேரியில் குடிநீர் பிரச்சினை இல்லையா? என புதுச் சேரி மார்க்சிஸ்ட் தலைவர் ராஜாங்கத்திடம் கேட்டோம். புதுவையில் 430 ச.கி.மீட்டரில் 87 ஏரிகள் உள்ளன. அவை அனைத்தும் வறண்டுவிட் டன. பல இடங்களில் நிலத்தடி நீரை நம்பித்தான் நாங்கள் வாழ்கிறோம். கடற்கரைப் பகுதிகளில் பத்து கிலோமீட்டர் அளவிற்கு கடல் நீர் உள்ளே புகுந்துவிட்டது. பாகூர், கிருமாம்பாக்கம் பகுதிகளில் அரசு தான் தண்ணீர் கொடுக்கிறது. அதிலும் மாசு உள்ள தென்று மக்கள் போராடுகிறார்கள்'' என்றார்.
அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வான அன்பழகன், "இந்த கிரண்பேடி ஒரு விளம்பரப் பிரியர். தமிழக மக்கள் ஒன்றுதிரண்டு ஜல்லிக்கட்டுக்காகப் போராடும்போது அதற்கு எதிராக கருத்து தெரிவித்து விமர்சனத்துக்குள்ளானார். ஏழைப் பெண்களுக்கு பெரும் பயனளிக்கும் இலவச திருமணஉதவித் திட்டத்தையும், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தைப் பற்றியும் தவறாகப் பேசி வாங்கி கட்டிக் கொண்டார். புதுவை முதல்வர் நாராயணசாமி, கவர்னருக்கு எதிராக உண்ணா விரதம் இருந்தபோது அவரது நிறத்தை வைத்து "காக்கை' என வர்ணித்து மாட்டிக்கொண்டார். புதுவையில் சிறையில் உள்ளவர்களை குற்றப் பரம்பரையினர் எனக் கூறி கண்டனத்துக்குள் ளானார்'' என்கிறார் வரிசையாக.
கிரண்பேடிக்கு எதிராகப் போராட்டம் என தி.மு.க. அறிவிக்க, அ.தி.மு.க. தரப்பிலும் கண்டனங்கள் வெளிப்பட... "தமிழகத்தில் எழுந்த எதிர்ப்புகளைப் பார்த்து, "நான் மக்களின் கருத்தை எதிரொலித்தேன்' என்கிறார் கிரண்பேடி. தமிழக மக்களை சுயநலவாதிகள், கோழைத்தனமானவர்கள் என எந்த மக்கள் சொன்னார்கள். கிரண்பேடி பதில் சொல்வாரா?'' என கொந்தளிக்கிறார்கள் தமிழகத்திலும் புதுவையிலும் பா.ஜ.க. கூட்டணியை வீழ்த்திய பொது மக்கள். கிரண்பேடியை பா.ஜ.க. தூண்டிவிடுவதாக காங்கிரஸ் அரசு சந்தேகப்படுகிறது.