Skip to main content

மகாவீரர் சிற்பத்துடன் கழுமரம், லிங்கம் கண்டுபிடிப்பு

Published on 28/12/2021 | Edited on 28/12/2021

 

Discover the gallows lingam with Mahavira sculpture included!

 

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், இறையூர் கிராமப்பகுதியிலிருந்து முத்துக்காடு செல்லும் சாலையின் வடபுறமாக மகாவீரர் சமண சிற்பத்தினை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலை வரலாறு படிக்கும் மாணவர்கள் ச.மாரியம்மாள், சா.ரெங்கராஜ், இரா.பிரியங்கா, ச.லோகேஸ்வரன் ஆகியோர் கண்டுபிடித்தனர். இது சார்ந்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன் தலைமையில் உறுப்பினர்கள் பேராசிரியர் கருப்பையா, கவிஞர் மூட்டாம்பட்டி ராஜூ, ராஜாங்கம், இளங்கோ ஆகியோர் தொடர் ஆய்வு மேற்கொண்டபோது கழுமரம், சதுர ஆவுடையுடன் கூடிய லிங்கம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

 

Discover the gallows lingam with Mahavira sculpture included!

 

இது குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் கூறியதாவது; “பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சிற்பம், சமண மதத்தின் 24வது தீர்த்தங்கரரான வர்த்தமானர் எனும் மகாவீரர் திருமேனி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சிற்பம் 89 சென்டிமீட்டர் உயரமும், 54 சென்டிமீட்டர் அகலத்துடனும் காணப்படுகிறது. மேலும் இச்சிற்பம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு 100 மீட்டர் தொலைவில் நாட்டார் வழிபாட்டு காமாட்சி அம்மன் ஆலயம் உள்ளது. அதன் எதிர்புறத்தில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லாலான 170 சென்டிமீட்டர் உயரமுடைய கழுமரம் ஒன்றும் வழிபாட்டில் உள்ளது. இவ்விடத்திற்கு அருகில் பாண்டியர் கலைப்பாணியிலான சதுர வடிவ ஆவுடையுடன் கூடிய லிங்கம், நாயுடன் கூடிய பைரவர் சிற்பத்தின் உடைந்த சிற்பம், முழுதும் சிதைந்த நந்தி, பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த விநாயகர், வீரபத்திரர் சிற்பம் உள்ளிட்டவையோடு கூடிய ஏழுகன்னியர் சிற்பத்தொகுதி, கற்கோவிலின் சிதலமடைந்த அடிமானம் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

Discover the gallows lingam with Mahavira sculpture included!

 

மகாவீரர் சிற்பம்
 

இச்சிற்பம் திகம்பரராக, தியான கோலத்துடன், சிதைந்த சுருள் முடி தலையுடனும், மூடிய கண்கள், தெளிவற்ற மூக்கு, நீண்ட துளையுடைய காதுகள், விரிந்த மார்புடன் அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. தலையின் பின்புறமாக முக்காலத்தையும் உணர்த்தும் விதமாக ஒளிவீசும் பிரபா வளையமும், மேற்பகுதியில் சந்திராதித்தம், நித்த விநோதம், சகல பாசானம் எனும் முக்குடையும், பின்புலத்தில் முக்குடைக்கு மேலாக குங்கிலிய மரமும் அதில் தொங்கும் குஞ்சமும் காட்டப்பட்டுள்ளன. முதுகின் பின்புறம் சாய்மானத்திற்கான திண்டு அமைக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் பக்கவாட்டில் சித்தாக்கியா இயக்கியும், இயக்கன் மாதங்கனும் உடலில் ஆபரணங்களுடனும் தலையில் கிரீடத்துடனும், ஒரு கையில் சாமரத்தை தோளில் சாய்த்தவாறும், மற்றொரு கையை இடுப்பில் வைத்த நிலையிலும் வடிக்கப்பட்டுள்ளன.

 

Discover the gallows lingam with Mahavira sculpture included!

 

கழுமரம்  


இறையூரில் வழிபாட்டிலுள்ள கழுமரம் சமீப காலத்தையதாகும். மேலும் மரம் மற்றும் இரும்பாலான கழுமரம் அழிந்த பிறகு அதே போன்று கல்லில் செய்து வழிபடுவதாக புரிந்துகொள்ள முடிகிறது. காத்தவராயன் அருளாடுபவர் இக்கழு மரத்தில் ஏறி நின்று அருள்வாக்கு கூறுவதாக மக்கள் கூறுகின்றனர். இந்த பண்பாட்டு வழக்கம் தென் மாவட்டங்களில் இன்றளவும் நடைமுறையிலுள்ளது. திருட்டு உள்ளிட்ட சமூக குற்றங்களை செய்வோரையும், எதிர் நாட்டவரையும் கழுவேற்றி தண்டனை வழங்கப்பட்டது குறித்து செவி வழி செய்திகளும் சில நாட்டார் பாடல்களின் மூலமும் அறிந்துகொள்ள முடிகிறது.

 

Discover the gallows lingam with Mahavira sculpture included!

 

கழுமரமும் சமணமும் 


சமணர் கழுவேற்றப்பட்டது குறித்து பல்வேறு இலக்கியங்கள் சான்று பகிர்கிறது. "துன்னிய வாதி லொட்டித் தோற்றவிச் சமணர் தாங்கள் முன்னமே பிள்ளை யார்பாலநு சிதமுற்றச் செய்தார் கொன்னுனைக் கழுவி லேற்றி முறைசெய்க" எனும் சேக்கிழாரின் பெரியபுராணப் பாடலிலும், ஒட்டக்கூத்தர் தனது தக்கயாகப் பரணியிலும் சமணர் கழுவேற்றம் குறித்து குறிப்புகள் உள்ளன.

 

மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா நிகழ்வுகளில் இக்கழுவேற்றம் நிகழ்த்திக் காட்டப்படுகிறது. ஆவுடையார் கோவிலிலுள்ள பிற்கால ஓவியம்,  கழுகுமலைக் கோயில் சுவரோவியங்கள், மதுரை மீனாட்சியம்மன் கோயில் சுவரோவியங்களில் சமணர் கழுவேற்றம் சித்தரிக்கப்பட்டுள்ளது. சமண சிற்பமும் அதனருகே கழுமரமும், சிதைந்த சைவக் கோவிலும் அருகருகே அமைந்துள்ளதால் சமணர்களைக் கழுவேற்றிய இடமாக இறையூர் இருந்ததா என்பது குறித்து தொடர் ஆய்வுகளுக்கு இந்த புதிய சான்றுகள் வழிவகை செய்கிறது.” இவ்வாறு அவர் கூறினார்.

 

ஆய்வுப் பணியின்போது பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் பி.அனுபாரதி, க.கனிமொழி, என். ஸ்ரீதர், உள்ளூர் பொதுமக்கள் பூசாரி ரெங்கராசு, இறையூர் ரெங்கராசு, முருகன், முருகையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.