சிந்துபாத் கதை போல ரஜினிகாந்தின் அரசியல் வருகை நீண்டு கொண்டிருந்த நிலையில் கமல் அதிரடியாக அரசியல் பிரவேசம் செய்து தமிழக அரசியலில் 4 சதவிகித வாக்குகளைப் பெற்று கட்சியை பலப்படுத்தினார். இந்நிலையில், ’"கமல் 60'’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஜய் அப்பா எஸ்.ஏ.சி., "ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று நான் முன்பே அவரிடம் சொல்லியிருக்கிறேன். அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏமாற்றிவிடாதீர்கள் ரஜினி''’என்று பேசினார். அவர் மேலும், "நீங்கள் இருவரும் ஆண்டது போதும் என நினைத்த பிறகு உங்கள் தம்பிகள் வந்தால் வழிவிட வேண்டும்''’’ என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அரசியலில் இணைந்து செயல்படுவதற்கான நேரம் வருமா என இரண்டு ஸ்டார்களும் காத்திருக்கிறார்கள்.
இதற்கிடையில் நடிகர் விஜய்யின் தளபதி என்று வர்ணிக்கப்படும் அவரது மன்றத்தலைவரும், பாண்டிச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான புஸிஆனந்தின் அதிரடியால் அரசியல் களத்தில் சூடு பரவியிருக்கிறது. விஜய் இன்னும் அரசியல் கட்சியே ஆரம்பிக்காத நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர்களை வரவழைத்து அவர்களிடம் தனித்தனியே பேசி உள்ளாட்சித் தேர்தலில் விஜய் ரசிகர்களை போட்டியிடச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார் புஸி ஆனந்த்.
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு, நடிகர் விஜய் மன்றத்தில் இணைந்தார், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸில் எம்.எல்.ஏ.வாக இருந்த புஸிஆனந்த். விஜய் மன்றத்தில் தலைமை பொறுப்பை ஏற்றார். விஜய், தன் அப்பா எஸ்.ஏ.சி.யை நம்புவதை விட புஸிஆனந்த்தைத் தான் அதிகம் நம்புகிறார். அவர் சொல்லும் அத்தனை திட்டத்தையும் நம்புகிறார். புஸிஆனந்தின் இஷ்ட தெய்வம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி. அந்தக் கடவுளின் துணை என்று போடப்பட்ட விண்ணப்பங்கள் தான் உள்ளாட்சித் தேர்தலுக்காக அச்சிடப் பட்டு மன்றத்தின் தலைவர்களிடம் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இது குறித்து நாம் விசாரித்தபோது, "பிகில்' படம் முடிந்த அடுத்த 15 நாள் கழித்து புஸி ஆனந்த் பாண்டிச்சேரியில் உள்ள தன்னுடைய கல்யாண மண்டபத்தில் தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைவர்கள் பத்து பத்து பேராக வரவழைத்து தினமும் ஒவ்வொரு மாவட்ட தலைவருடனும் தனித்தனியே பேசியிருக்கிறார். அப்போது செல்போன் எல்லாம் ஆப் பண்ணி விட்டாராம். அவர் கையில் தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் மேயர் முதல் பஞ்சாயத்து உறுப்பினர் வரையிலான பட்டியலின் எண்ணிக்கை இருந்துள்ளது.
அனைத்து மாவட்ட தலைவர்களிடமும், "உங்கள் மாவட்டத்தில் இத்தனை ஆயிரம் உள்ளாட்சி பொறுப்புகள் உள்ளன. அத்தனை பொறுப்புகளுக்கும் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்து, அவர்களை 22-11-2019 வெள்ளிக்கிழமை இரவுக்குள் தலைமை அலுவலகத்திற்கு அழைத்து வந்துவிட வேண்டும்'’’என்று பேசியிருக்கிறார் புஸிஆனந்த்.
மேலும், "வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்து விஜய் சாருக்கு கொடுத்துவிடுவேன். இந்த உள்ளாட்சித் தேர்தல், நம்முடைய பலம் என்ன என்பதை தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பு. தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 30 ஆயிரம் உள்ளாட்சி மன்ற பொறுப்புகள் உள்ளன. இதில் குறைந்தது 1000 பொறுப்புகளிலாவது விஜய் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் பதவிக்கு வர வேண்டும். தேர்தலில் மன்ற கொடி, விஜய் படம் இவை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம். விஜய் நேரடியாக தேர்தலுக்கு வாய்ஸ் தரமாட்டார். இது ரசிகர்கள் தன்னெழுச்சியாக, அவர்களாக போட்டியிடுகிறார்கள் என்றுதான் வெளியே தெரியவேண்டும். தேர்தலில் வெற்றிபெற்றவுடன் அனைவரும் சேர்ந்து விஜய்யை நேரடியாக சந்தித்து அடுத்தகட்ட அரசியலை நகர்த்தலாம்''’என்று தீவிரமாக பேசியிருக்கிறார்.
பேசியதோடு நின்றுவிடாமல், தேர்வு செய்யப்படும் வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கு என்னென்ன தேவைப்படுகிறது என்கிற குறிப்பு, எதை எல்லாம் தயார் செய்ய வேண்டும் என்கிற அறிவிப்பு, தொகுதியில் உள்ள உள்ளாட்சி மன்ற பொறுப்புகள் அடங்கிய குறிப்பு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார் புஸி ஆனந்த்.
தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் 87 சட்டமன்றத் தொகுதிகளுக்கு விஜய் மக்கள் மன்றத்துக்கான பூத் கமிட்டிக்கு ஆட்களை நியமித்து இருக்கிறார் புஸி ஆனந்த். அதாவது ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 1500 பேர் வீதம் 87 சட்டமன்றத் தொகுதியில் 1,30,500 பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆதார்கார்டையும், வாக்காளர் அடையாள அட்டையையும் இணைத்திருக்கிறார்கள். மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள் நியமித்து விட வேண்டும் என்றும் மாவட்ட தலைவர்களிடம் சொல்லியிருக்கிறார்.
நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் ஈரோடு மாவட்ட விஜய் மன்ற தலைவர் பாலாஜி, ‘"சேர்மன் பதவிக்கு கட்டாயம் போட்டியிடுகிறேன்'’ என்று புஸிஆனந்திடம் உறுதி கொடுத்திருக்கிறார். 2001 உள்ளாட்சித் தேர்தலில் விஜயகாந்த் செய்ததுபோல, இம்முறை ரசிகர்களை வைத்து ஆழம் பார்க்க ரெடியாகிவிட்டார் விஜய்.
--ஜீ.தாவீதுராஜா