தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலினைத் துணை முதல்வராக்க வேண்டும் என்று திமுகவினரும், தமிழக அமைச்சர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இத்தகைய சூழலில் தான் தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. இதனையடுத்து தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பான கடிதத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததோடு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைத் தமிழக துணை முதல்வராகவும் அங்கீகரித்து ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்து வந்த பாதையைச் சற்று திரும்பிப் பார்ப்போம். கடந்த 1977ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி தற்போதைய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் - தூர்க்கா ஸ்டாலின் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் உதயநிதி ஸ்டாலின். இவர் சென்னையில் உள்ள பிரபல கல்லூரிகளில் ஒன்றாக விளங்கும் லயோலா கல்லூரியில் தனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். அரசியலும், சினிமாவும் இரண்டற கலந்த குடும்பத்தில் பிறந்த இவர் ‘ரெட்ஜெயன்ட்’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். அதோடு இதுவரை திரைக்குப் பின்னால் மட்டுமே இருந்து வந்த உதயநிதி கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். மேலும் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் முக்கிய அடையாளமாகவும் திகழ்ந்தார்.
இத்தகைய சூழலில் தான் கடந்த 2018ஆம் ஆண்டு தீவிர அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்கு சேகரித்தார். இவரின் வித்தியாசமான தேர்தல் பிரச்சாரம் திமுகவிற்கு மேலும் புத்துணர்ச்சியைக் கொடுத்தது. இந்தத் தேர்தலில், திமுக கூட்டணி தமிழகத்தில் தேனி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியைத் தவிர்த்து மற்ற 38 இடங்களில் வெற்றி பெற்று வாகை சூடியது.
இந்த வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் 2019ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 4ஆம் தேதி திமுக இளைஞரணிச் செயலாளராக திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டுப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக திமுகவிற்குள் காலடி எடுத்து வைத்த உதயநிதி ஸ்டாலின் இன்னும் முழு மூச்சுடன் தீவிர அரசியலில் இறங்கிச் செயல்பட்டார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போதே அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்தனர். இருப்பினும் முதல்வராகப் பொறுப்பேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், உதயநிதிக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கவில்லை.
இருப்பினும் திமுகவினர் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி, தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டார். இத்துறைகளில் பல புதுமைகளைப் புகுத்தி பலரின் கவனத்தையும் ஈர்த்தார். 2019 மக்களவைத் தேர்தலைப் போன்றே இந்த ஆண்டு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் தமிழகம் தீவிர பிரசாரம் மேற்கொண்டு கொண்ட உதயநிதி ஸ்டாலின், திமுக கூட்டணி 39 இடங்களிலும் வெற்றி பெற்றதற்கு முக்கிய அச்சானியாகச் செயல்பட்டார். இதனையடுத்து கடந்த சில மாதங்களாக உதயநிதி ஸ்டாலினைத் துணை முதல்வராக்க வேண்டும் என திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் எனப் பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில் தமிழகத்தின் 3வது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக தமிழகத்தில் முதன்முதலில் கடந்த 2009ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது, கலைஞர் தலைமையிலான அமைச்சரவையில் மு.க. ஸ்டாலின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றதும். அதன் பிறகு 2017ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராகப் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.