இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் இந்தி பேசுவதாக கூறுவதை தொடர்ந்து பாஜக தலைவர்கள் கூறிவருகிறார்கள். ஆனால், இந்தி பேசும் அவர்கள் கூடுதலாக ஏதேனும் மொழியை கற்றிருக்கிறார்களா என்பதை சொல்லவே மாட்டார்கள்.
இந்தி பேசும் மாநிலங்களில் நடக்கும் தேர்வுகளில் இந்தித் தேர்வுகளில்கூட பெரும்பான்மை மாணவர்கள் தோல்வி அடைந்த செய்திகளை அப்படியே மூடி மறைத்து விடுவார்கள்.
2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மொழிவாரி கணக்கெடுப்பு 2018ல் வெளியிடப்பட்டது. அதில் இந்திய மக்கள் தொகையில் 43.63 சதவீதம்தான் இந்தியை தாய்மொழியாக கூறியிருக்கிறார்கள்.
இந்த கணக்கெடுப்பின்படி, இந்திய மாநிலங்களில் மத்திய மற்றும் வட இந்தியாவில் உள்ள சில மாநிலங்களைத் தவிர, பெரும்பாலானவை இந்தி பேசாத மாநிலங்களாக இருக்கின்றன. ஆனால், அவற்றில் சில இந்தியை இரண்டாவது மொழியாக தேர்வு செய்திருக்கின்றன.
பெரும்பாலான தென் மாநிலங்களிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் இந்தி பேச்சு மொழியாக இல்லை. அத்துடன் அவர்கள் இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தை தேர்வு செய்திருக்கின்றனர்.
வட இந்தியாவில் உள்ள 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே இந்தியை முதல் மொழியாக வைத்திருக்கின்றன. இவற்றில் மொத்த ஜனத்தொகையில் 96 சதவீதத்திற்கு மேல் இந்தி பேசுகிறவர்களாக இருக்கிறார்கள்.
இந்தியாவின் முதல்மொழியாக இந்தி இருந்தால் உலக அளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்கும் என்று அமித் ஷா கூறியிருந்தார். ஆனால், அவருடைய மாநிலத்திலேயே இந்தி பேசும் மக்கள் 30 சதவீதத்திற்கும் கீழாகவே இருக்கிறார்கள்.
தென் மாநிலங்களும், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் தவிர்த்து மற்ற வடகிழக்கு மாநிலங்களும் மிகக்குறைந்த அளவே இந்தி பேசுகிறார்கள்.
மொத்தமுள்ள 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 23 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இந்தியை முதல் விருப்பமாக கொள்ளவில்லை. இந்த 23 மாநிலங்களிலும் 16 மாநிலங்களில் இந்தியை இரண்டாவது அல்லது மூன்றாவது விருப்பமாக மிகமிகக் குறைந்த சதவீதம் பேர்தான் தேர்வு செய்கிறார்கள்.
குஜராத், மேற்கு வங்காளத்தில் மிகக்குறைந்த மக்களே இந்தி பேசுகிறார்கள். இந்தியாவிலேயே மிகக் குறைந்த அளவு இந்தி பேசுகிறவர்கள் தமிழகத்தில்தான் இருக்கிறார்கள். மகாராஸ்டிரா, பஞ்சாப், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் குறைந்த அளவே இந்தி பேசும் மக்களைக் கொண்டிருக்கின்றன.
பெரும்பான்மை இந்தி பேசும் மாநிலங்களில் ஆங்கிலம் பேசுகிறவர்கள் மிகமிக குறைவாக இருக்கிறார்கள். ஆனால், குறைவாக இந்தி பேசும் மாநிலங்களில் ஆங்கிலம் பேசுவோர் சதவீதம் அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 20.15 சதவீதமும், கேரளாவில் 18.49 சதவீதமும் ஆங்கிலம் பேசுகிறார்கள்.
இந்நிலையில்தான் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாயமாக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வகுத்திருக்கிறது. இந்த கொள்கையை இந்தி பேசாத மாநிலங்கள் எதிர்த்து வருகின்றன. குறிப்பாக தமிழகம் கடுமையாக எதிர்க்கிறது.