Skip to main content

"கையெழுத்துப் போட்டேன் அவ்வளவுதான்"...எடப்பாடியின் துபாய் ரகசியம்...அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 23/09/2019 | Edited on 23/09/2019

எடப்பாடி மற்றும் அவரது அமைச்சர்கள் நடத்திய வெளிநாட்டுப் பயணத்தில் முதலீடுகள் 8,000 கோடிக்கு மேல் வந்ததாக பல்வேறு ஊடகங்கள் வழியாக தம்பட்டம் அடித்துவருகிறார்கள். உண்மையில் முதலீடுகள் தமிழகத்திற்கு வந்ததா அல்லது முதலீடுகள் தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல இந்தப் பயணம் உதவியதா என டெக்னிகலாக கேள்வி எழுப்புகிறார்கள் வெளிநாடுவாழ் இந்தியர்கள்.

 

admk



எடப்பாடி,  வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வந்திருக்கிறேன்... அதைக் கண்காணிக்க அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்திருக்கிறேன்' என்கிறார். ஆனால் அவர் வெளிநாட்டு கம்பெனிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் ஒரேயொரு ஐ.ஏ.எஸ். அதிகாரிதான் கையெழுத்துப் போட்டிருக்கிறார். அவர் பெயர் நீரஜ் மித்தல். தொழில்துறை அமைச்சர் சம்பத்தின் ஆளுமையின் கீழ் வரும் தமிழ்நாடு தொழிற்சாலைகள் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி முன்னேற்ற வாரியத்தின் தலைவர் அவர். மித்தலும் ஒப்பந்தத்தில் கையழுத்திட்டிருக்கும் கம்பெனியும் செய்துகொள்ளும் ஒப்பந்தமும் இந்த வாரியத்தின் பெயரிலேயே அமைந்துள்ளது.

 

admk



தமிழகத்தின் தொழில் வளர்ச்சியிலும் சமூக மாற்றத்திலும் இந்தக் கம்பெனிகள் கொண்டுவரும் முதலீடுகள் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என வர்ணிக்கப்படும் இந்த ஒப்பந்தத்தின் கடைசி வரிகளோ அதிர வைக்கின்றன. "இந்த ஒப்பந்தம் எந்த வகையிலும் தமிழக அரசையும் முதலீடு செய்யும் கம்பெனியையும் கட்டுப்படுத்தாது. இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருக்கிறபடி இதில் கையெழுத்திடும் கம்பெனிகள் முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டுவரவில்லையென்றால் அதை தமிழக அரசு கேள்வி கேட்டு கோர்ட்டில் வழக்குப் போட முடியாது. இரண்டு தரப்பும் நல்லெண்ணத்துடன் ஒத்துழைப்பு தரவேண்டும். அதன்மூலம் முதலீடு என்கிற லட்சியத்தை அடைய வேண்டும் என்பது மட்டுமே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்'' என தெளிவாக குறிப்பிடுகிறது. இதுதான் எடப்பாடி கொண்டு வந்த பல்லில்லாத முதலீட்டு ஒப்பந்தங்கள் என அந்த ஒப்பந்த விவரங்களை நமக்கு அனுப்பி வைத்தார்கள்.

 

admk



அதே நேரத்தில், எடப்பாடி தனது வெளிநாட்டு விசிட்டில் மிகவும் பிசியாக இருந்திருக்கிறார். கடந்த மாதம் 30, 31 தேதிகளில் லண்டன் மாநகரில் தனது உறவினர் வீட்டில் தங்கிய எடப்பாடி அந்த நேரத்தில் அவருடன் லண்டன் வந்த அமைச்சர் விஜயபாஸ்கரை கூட நம்பவில்லை. ஒருபக்கம் தனக்கான மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொண்ட எடப்பாடி "என்னைக் கொஞ்சம் பிரீயாக இருக்க விடுங்கள். எனக்கு உலகம் பூராவும் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் கொஞ்சநேரம் செலவு செய்ய வேண்டும்'' என தன்னுடன் வந்தவர்களை அனுப்பிவிட்டு அவரை சந்திக்க வந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். "எடப்பாடியை லண்டன் மாநகரில் இருந்து மட்டும் நண்பர்கள் சந்திக்க வரவில்லை. இங்கிலாந்திலிருந்தும் வெகுதொலைவில் உள்ள கிரேக்க நாட்டிலிருந்தும் நண்பர்கள் பார்க்க வந்தார்கள். அவர்களுடன் எடப்பாடி முதலீடுகள் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் தமிழகத்திற்கான முதலீடா என்று தெரியவில்லை. தமிழகத்திற்கான முதலீடு என்றால் தனியாக ஏன் பேசினார் என புரியவில்லை'' என்கிறார்கள் அவருடன் சென்ற அரசு ஊழியர்கள்.


எடப்பாடி முதலில் லண்டனுக்கும் அமெரிக்காவிற்கும் மட்டுமே செல்ல திட்டமிட்டார். கடைசியில் துபாயை அவரது பட்டியலில் சேர்த்துக்கொண்டார். துபாயில் தற்பொழுது பெட்ரோல் எடுப்பதில்லை... அதுவும் சிங்கப்பூரை போன்ற வணிகமையமாக மாறிவிட்டது. முன்பு தமிழகத்தில் இருந்தது போல ரியல் எஸ்டேட் தொழில் தற்பொழுது துபாயில் கொடி கட்டிப் பறக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்தியப் பணம் 95,000 கோடி ரூபாய் துபாயில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அதில் 60,000 கோடி ரூபாய் தமிழகத்திலிருந்து வந்திருக்கிறது என்கிறார்கள் துபாயில் வசிக்கும் தமிழர்கள். ஜெ. உயிருடன் இருக்கும்போதே துபாயில் நத்தம் விசுவநாதன், எடப்பாடி, வைத்தியலிங்கம் ஆகியோர் கரூர் அன்பு நாதன் மூலம் சொத்துக்கள் வாங்கியதாக ஜெ.வால் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த நால்வர் அணியை போயஸ் கார்டன் வீட்டுக்காவலில் வைத்து கடுமையான விசாரணைக்கு ஜெ. உட்படுத்தினார். ஜெ. மறைந்ததும் அந்த பிரச்சினை இல்லை. ஜெ.வும் இல்லை. கட்சி நிதி என அமைச்சர்கள் சம்பாதிக்கும் பணத்தை வசூலிக்க சசிகலாவும் இல்லை. மடை திறந்த வெள்ளம் என பணம் துபாய் உட்பட வெளிநாடுகளுக்குப் பாய்கிறது என 60,000 கோடி ரூபாய் தமிழகத்திலிருந்து துபாய்க்கு பாய்ந்ததன் பின்னணியைச் சொல்கிறார்கள் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்கள்.

"எடப்பாடி, துபாய்க்கு முதலீடுகளை பெற வரவில்லை. எடப்பாடி துபாய்க்கு வருவதற்கு முன்பே தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வந்து, லூலூ என்கிற துபாயைச் சேர்ந்த நிறுவனம் கோயம்பேட்டில் பதினான்கு ஏக்கர் நிலம் வாங்குவதற்கான வியாபாரத்தை முடித்துவிட்டு வந்தார். பியூஷ்கோயல், பினராயி விஜயன் உட்பட யார் துபாய்க்கு வந்தாலும் அனைவரையும் இந்திய வியாபாரம் மற்றும் தொழில் வர்த்தகர்கள் கழகம் என்கிற அமைப்புதான் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யும். ஆனால் எடப்பாடியின் இந்த விசிட்டை இந்தக் கழகம் செய்யவில்லை. தமிழக போலீஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் நண்பரான ரேடியன்ட் ஸ்டார் என்கிற நிறுவனத் தலைவர் அபிர் அலி ஜுனைன் என்கிற நபர்தான் ஏற்பாடு செய்தார். தமிழகத்தில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு போன்ற விவகாரங்களில் அடிபட்டவரான ஜாபர்சேட், எடப்பாடிக்காக நிழலான பல காரியங் களை செய்தார்'' என அடித்துச் சொல்கிறார்கள் துபாய்வாசிகள்.

"எடப்பாடி வருவதற்கு முன்பே துபாய்க்கு கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். வந்துவிட்டார். வந்தவர் எமிரேட்ஸ் தமிழ் தொழிலதிபர்கள் என்ற பெயரில் ஒரு வாட்ஸ்- ஆப் குரூப்பையும் ஆரம்பித்தார். "எடப்பாடியின் மற்ற வேலைகளை அலிஜுனைன் பார்த்துக்கொள்வார். நாம் ஒரு ஐம்பது பேரை திரட்டி முதல்வர் முன் நிறுத்த வேண்டும்' என கார்த்திகேயன் திருவாய் மலர்ந்திருக்கிறார். எல்லோரும் துபாய் நிறுவனங்களைத்தான் தொழில் முதலீடு கேட்பார்கள். எடப்பாடி வித்தியாசமாக சார்ஜா நகர நிறுவனங்களிடம் முதலீடு கேட்ட விநோதமும் நடந்ததாம். முதலீடுகளை ஏற்பாடு செய்யும் கழகத்தை எடப்பாடிக்கு உதவிக்கு அழைக்கவில்லை. அதன் நிர்வாகியாக இருக்கும் டாக்டர் சுரேஷ்குமார் என்கிற தமிழரையும் எடப்பாடி மதிக்கவில்லை. ஆனால் அந்தக் கழகத்தில் நிர்வாகியாக உள்ள வட இந்தியாக்காரரான சுதீஷ் அகர் வாலின் மகனான அனில் அகர்வாலுக்கு சொந்தமான ஜி.ஆர்.ஏ. இண்டஸ்ட்ரீஸ் என்கிற கம்பெனியுடன் தமிழகத்தில் பயோ டீசல் தயாரிப்பதற்காக ஆயிரம் கோடி முதலீடு ஒப்பந்தத்தைப் போட்டிருக்கிறார்.

தொழிற்சாலைகளுக்கு தேவையான டிசைன், பாதுகாப்பு வசதிகள் அமைத்துக் கொடுத்திருக்கிறோம் என தனது அறிமுகத்தில் குறிப்பிட்டுள்ள இந்தக் கம்பெனி, எந்த இடத்திலும் "பயோ டீசல் தயாரிப்போம்' என அறிவிக்கவே இல்லை. அடுத்ததாக எடப்பாடியுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட எம் ஆட்டோ நிறுவனத்துடன் 100 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளார் எடப்பாடி. இது ஓலா, உபேர் மாதிரி செல்போன் ஆப் மூலம் ஆட்டோக்களை இயக்கும் கம்பெனி. இது துபாயில் இயங்கவில்லை. சென்னை பரங்கிமலையை தலைமையகமாக கொண்டு இயங்கும் இந்தக் கம்பெனியில் வெறும் 50 ஆட் டோக்கள்தான் இருக்கிறது. வெறும் 10 கோடி முதலீட்டில் சென்னையில் இயங்கும் இந்தக் கம்பெனியுடன் 100 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை துபாயில் போட்டிருக்கிறார் எடப்பாடி. இதில் சென்னையில் 3 பேர் கூட வேலைக்கு இல்லை'' எனச் சொல்லிச் சிரிக்கிறார்கள் துபாய்வாசிகள்.

இந்த எம்.ஆட்டோவின் நண்பர் தான் கராமா மெடிக்கல் சென்டர். "எம். ஆட்டோவின் உரிமையாளர் கூப்பிட்டதால்தான் நான் சென்றேன். முதல்வர் எடப்பாடியுடன் கை குலுக்கச் சொன்னார்கள். ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் சொன்னார்கள். கையெழுத்துப் போட்டேன்... அவ்வளவுதான். முதலீடெல்லாம் நம்மகிட்ட இல்லையே' என்கிறது கராமா மெடிக்கல் சென்டர். "எடப்பாடி கையெழுத்துப் போட்டதில் டெகட்ரான் என்கிற கம்பெனியுடன் கையெழுத்திட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டமும் துறை முகத்தில் நடைபெறும் வேலைகளுக்காகப் போட்ட ஒப்பந்தம் ஆகியவை மட்டுமே மதிக்கத்தக்கவை. ஆனால் அவையும் உறுதியாக நிறைவேற்றப்படும் என்கிற எந்த உத்தரவாதமும் இல்லை' என்கிறார்கள் துபாய் தொழிலதிபர்கள்.

தனது பயணம் முழுவதும் முதலீடுகளை ஈர்க்க வேண்டும், தொழிலதிபர்களின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும், அவர்களுடன் போட்டோ எடுக்க வேண்டும் என எடப்பாடி சொல்லிக் கொண்டே இருந்தார். அவர் வேறு முதலீடுகளில் பிஸியாக இருந்ததால்... ஆட்டோ டிரைவருக்கெல்லாம் கோட் சூட் போட்டு ஒப்பந்த நாடகத்தை நடத்தி முடித்துவிட்டார்கள் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.