ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் வரும்போதும், ‘நான் ஏழை எளிய மக்களின் தொண்டன், சேவகன் என்னை வெற்றிப் பெற வைத்தால் உங்களுக்காக பணியாற்ற காத்திருக்கிறேன். 24 மணி நேரமும் உங்கள் குறைகளைத் தீர்ப்பதற்காக எனது அலுவலகம் திறந்தே இருக்கும்..’ இப்படி தெருத்தெருவாக வீடு வீடாக சென்று மக்களிடம் வாக்கு கேட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் ஆனப்பிறகு மக்களிடம் கொடுத்த வாக்குறுதியை கடைபிடிக்கிறார்களா? நிறைவேற்றுகிறார்களா? என்றால் அதுதான் இல்லை.
அதற்கு உதாரணமாகத் திகழ்கிறது ஒரு அமைச்சரின் தொகுதி அலுவலகம். கடலூர் தொகுதியில் 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பெற்றி பெற்று தற்போது தொழில்துறை அமைச்சராக இருக்கிறார் சம்பத்.
ஒவ்வொரு தொகுதி மக்களும் தங்கள் பகுதி பிரச்சனைகளை குறைகளை தங்கள் பகுதிக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றுவதற்காக எம்.எல்.ஏ.க்களை நாடி அவர்கள் வீடுகளுக்கும் சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதிக்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். மக்களின் இப்படி சிரமம் அடைக்கூடாது என்பதற்காக அரசு, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் மக்களை சந்திப்பதற்கு அந்தெந்த தொகுதியிலேயே அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு அலுவலகம் கட்ட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் அலுவலகம் கட்டிக் கொடுத்துள்ளது.
ஆனால், அந்த அலுவலகங்களில் அமர்ந்து சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் குறைகளை கேட்கிறார்களா? தன்னை சந்திக்க வரும் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கிறார்களா? என்றால் இல்லை என்றே கூற வேண்டும். இது 90 சதவிகித சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களின் நிலை. பெரும்பாலான அலுவலகங்கள் பூட்டியே கிடக்கின்றன. இதில், கட்சி பாகுபாடு இல்லை. அதற்கு உதாரணம் கடலூரில் உள்ள அமைச்சர் சம்பத்தின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
2011ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு 6 மாத காலம் இந்த அலுவலகம் செயல்பட்டுள்ளது. அதன்பிறகு கேட்பாரற்ற நிலையில் பாழடைந்து கிடக்கிறது. பேய் படங்கள் எடுக்கும் மர்மம் நிறைந்த கட்டிடங்கள்போல் மாறியிருக்கிறது அமைச்சர் சம்பத்தின் அலுவலகம்.
கடலூர் சீதாராம் நகரில் கடற்கரைக்கு செல்லும் சாலையில் உள்ளது இந்த அலுவலகம். வளாகத்தில் புயலில் சாய்ந்த மரங்கள், பூட்டப்பட்ட அலுவலக கேட்டு துருபிடித்து போய் கிடக்கின்றன. அலுவலக சுவர்கள் ஆங்காங்கே பெயர்ந்தும் உதிர்ந்தும் எப்பொழுது விழும் என்று தெரியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. கட்டிடத்தை சுற்றிலும் மண்டிக்கிடக்கும் செடி, கொடிகள், பாம்புகள், வௌவால்கள், ஆந்தைகள் போன்ற பறவைகளும் விஷ ஜந்துக்களும் குடியிருந்து வருகின்றன.
அமைச்சரை சந்திக்க வேண்டுமானால் தொகுதி மக்கள் கூத்தப் பக்கத்திலுள்ள அவரது வீட்டிற்குச் சென்றுதான் சந்திக்க வேண்டும். அல்லது அவரது கட்சி அலுவலகத்திற்குச் சென்று சந்திக்க வேண்டும். ஏன் இப்படிப்பட்ட நிலை என கடலூரைச் சேர்ந்த வாஞ்சிநாதன் என்பவரிடம் கேட்டோம். அவர், “இந்தக் கட்டிடம் 2006ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அப்போது தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஐயப்பன். இந்தக் கட்டிடத்தை அப்போதைய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் திறந்து வைத்தார்.
அதன்பிறகு அமைச்சர் சம்பத், கடலூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அந்த அலுவலகம் முறையாக செயல்படவில்லை. மக்கள் தங்கள் குறைகளை, தேவைகளை அமைச்சரிடம் கூறவேண்டுமானால் அவரது வீட்டுக்கோ அல்லது கட்சி அலுவலகத்திற்கோ செல்ல வேண்டும். மேலும், அவர் சென்னையிலிருந்து எப்போது கடலூர் வருகிறார் என்று காத்திருந்து மனு கொடுத்து வருகிறார்கள். இந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முறையாக உதவியாளர்களை அமர்த்தி அமைச்சர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் கொடுக்கும் மனுக்களை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுச் சென்று பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு அமைச்சரே தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பாழடைந்த நிலையில் வைத்துள்ளார் என்றால், மற்றவர்கள் எப்படி இருப்பார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. மாவட்டத்தின் தலை நகரத்தில் இருக்கும் ஒரு அமைச்சரின் அலுவலகத்தில் நிலை பரிதாபமாக உள்ளது. இவர்தான் தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர். ஒரு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தையே சீர்ப்படுத்தி மக்கள் பிரச்சனையைத் தீர்க்க முடியாத இவர், தமிழகத்தை தொழில்துறையில் முன்னேற்றம் செய்து எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்ப்படுத்திகொடுத்து இருப்பார் என்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.
மக்களின் தொண்டன், சேவகன் என்று கூப்பாடு போட்டு ஓட்டு வாங்கி பதவியில் அமர்ந்த பிறகு அவர்களை தேடி சென்று குறைகளைப் போக்க வேண்டும். அந்த மக்களே தேடி வந்து பார்க்க ஒரு அலுவலகம் இருந்தும் அது செயல்படுத்தப்படவில்லை. இந்த நிலை மாற வேண்டும். ஓட்டு கேட்க வாக்காளரை தேடி போகும் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்ற பிறகு அடிக்கடி மக்களை சந்திக்கவில்லை என்றாலும் மாதத்தில் ஒருநாள் தொகுதியை வலம் வர வேண்டும். சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வாரத்தில் ஒருநாளாவது முழு நேரமும் அமர்ந்து மக்கள் பணி செய்ய வேண்டும். அப்போதுதான் மக்களின் கஷ்டங்கள், பிரச்சனைகள் புரியும்.
இந்த ஆட்சியின் லட்சணம் எப்படி உள்ளது என்பதற்கு அமைச்சர் சம்பத்தின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக அலங்கோலமே சாட்சி. மேலும், இந்த அலுவலகம் திறக்கப்படாததற்கு சென்டிமென்ட்டும் காரணம் என்று கூறப்படுகிறது.” என்கிறார்.
இந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முறையாக செயல்படாததற்கு பல்வேறு காரணங்களைக் கூறுகிறார்கள் கடலூரில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள். அதில் சுவாரசியம் என்னவென்றால், 2006ல் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த அலுவலகத்தில் அமர்ந்து செயல்பட்டவர் ஐயப்பன். இந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமர்ந்து செயல்பட்டால் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகும் வாய்ப்பு கிடைக்காது என்ற மூடநம்பிக்கை இருப்பதாகவும் அதை நம்புகிறார் அமைச்சர் என்றும் கூறுகிறார்கள்.
இதுகுறித்து கருத்து கேட்பதற்கு அமைச்சரின் தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டோம், ‘தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை’ என்ற பாட்டு மட்டும் ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஃபோனை எடுத்து யாரும் பதில் பேசவே இல்லை. அமைச்சர் விளக்கம் தந்தால் அதை வெளியிட தயாராக இருக்கிறோம்.