Skip to main content

ஜல்லிக்கட்டு நடத்த இந்தியா முழுவதும் தடை உள்ளது... தமிழகத்தில் இல்லை... அதே போல் நீட் தேர்வுக்கும் தடை வாங்குவோம் - பேராசிரியர் சுந்தரவள்ளி!

Published on 29/09/2021 | Edited on 29/09/2021

 

ty

 

நீட் தேர்வு தொடர்பாகத் தமிழக அரசு நியமித்த ஏ.கே ராஜன் குழுவினர் சில நாட்கள் முன்னர் தன்னுடைய அறிக்கையைத் தமிழக அரசிடம் தாக்கல் செய்திருந்தனர். நீட் தேர்வு தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பைச் சுதந்திரத்துக்கு முன்பு கொண்டு சென்றுவிடும் என்று காட்டமாகக் கருத்துக்களை தன்னுடைய அறிக்கையில் ஏ.கே ராஜன் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக வாதப்பிரதி வாதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த அறிக்கை முன்னரே முடிவு செய்யப்பட்டு அதன் பிறகு தயார் செய்யப்பட்ட ஒன்று என்று பாஜக சார்பாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளைப் பேராசிரியர் சுந்தரவள்ளியிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,

 

நீட் தேர்வு தொடர்பாக ஏ.கே ராஜன் குழு தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தற்போது அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. இந்த குழு நீட் தேர்வு தொடர்ந்து நடத்தினால் தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. சம வாய்ப்பு, சம உரிமை இல்லாத நிலையில், நீட் தேர்வைத் தமிழக மாணவர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் இது ஏற்கனவே திட்டமிட்ட ஒரு நாடகம். அறிக்கை ஏற்கனவே எழுதிவைக்கப்பட்டு தற்போது அதை வெளியிடுவதைப் போல வெளியிடுகிறார்கள் என்று எதிர் தரப்பினர் கேள்வி எழுப்புவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 

யார் யார் அந்த குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்பினார்கள், நீட் தேர்வு வேண்டாம் என்று எத்தனை மின்னஞ்சல் வந்துள்ளது என்ற அழைத்து விவரங்களும் புள்ளி விவரங்களாக அந்த அறிக்கை தகவல்கள் தற்போதும் இருக்கிறது. நீங்கள் அது எல்லாம் பொய் என்று சொல்கிறீர்கள் என்றால் எங்கே நீங்கள் ஒரு அறிக்கை தயார் செய்ய வேண்டியதுதானே? இந்தியா முழுவதும் இந்த அறிக்கையைப் பற்றிப் பேசுகிறார்கள். மகாராஷ்டிராவில் இதை ஆதரிக்கிறார்கள். நீட் தேர்வு எதிர்த்து தமிழகம் வழியில் குரல் கொடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளார்கள். மேற்கு வங்கத்தில் தற்போது குரல் எழும்ப ஆரம்பித்துள்ளது. இந்தியா முழுவதும் இந்த குரல் இன்னும் சில நாட்களில் ஒலிக்க இருக்கிறது.

 

இவர்கள் நீட் தேர்வு நடத்த என்னென்ன காரணங்கள் சொன்னார்கள், தகுதியானவர்களுக்கு இடம் கிடைக்கும், முறைகேடு செய்ய முடியாது என எவ்வளவு முடியுமோ அவ்வளவு கதைகளை இவர்கள் அளந்துவிட்டார்கள். ஆனால் இன்று நிலைமை எப்படி இருக்கிறது. ராஜஸ்தானில் நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு கோச்சிங் கொடுக்கின்ற மையத்தில் ஆள் மாறாட்டம் செய்ய ஆட்கள் செட் செய்யப்படுகிறார்கள். 50 லட்சம் கொடுத்தால் கேள்வித்தாளை வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலையை உருவாக்கி வைத்துள்ளார்கள். நீட் தேர்வை நிறுத்த முடியும் என்று ஏன் நாம் நம்புகிறோம். அறிவு சார் வழியில் நடந்தோம் என்றால், அது நம்மால் முடியும் என்ற நம்பிக்கை நமக்கு இருப்பதால் தொடர்ந்து கூறிவருகிறோம். இந்தியா முழுவதும் மும்மொழி கொள்கைதான். தமிழ்நாட்டில் இருமொழி கொள்ளை, இந்தியா முழுவதும் ஜல்லிக்கட்டுக்குத் தடை, தமிழகத்திற்கு மட்டும் விலக்கு என முன்மாதிரியாக தமிழகம் தொடர்ந்து இருந்து வருகிறது. போராடியவன் ஜெயிப்பான், தமிழக அரசு போராடுகிறது, இந்த விஷயத்தில் நிச்சயம் வெற்றி பெறும்.

 

நீட் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் இறந்து விடுவதால் தேர்வுக்குத் தடை கேட்கும் நீங்கள், 10ம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்து இறக்கும் மாணவர்களுக்காக 10வது தேர்வே நடத்தக்கூடாது என்று கேட்பீர்களா? என்று பாஜக தரப்பு கேள்வி எழுப்புகிறார்களே?

 

தேர்வு எழுதி அதனால் இறப்பவர்கள் என்பது விபத்து போன்று நடைபெறும் சம்பவம், சாலை விபத்து போல. ஆனால் இந்த நீட் தேர்வு எழுத மாணவர்களை வாசலிலேயே தடுத்து நிறுத்துகிறீர்களே, தேர்வு எழுதாமலேயே மாணவர்கள் இறந்து விடுகிறார்களே, அதற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள். உங்களிடம் அதற்குப் பதில் இருக்கிறதா? இந்த சங்குகளுக்கு இறப்பு என்பது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதைக் காந்தி மரணத்தில் இருந்து நாம் பார்த்து வருகிறோம். அவர்களுக்கு மனதில் இறப்புக்காகச் சஞ்சலம் என்ற ஒன்றே தோன்றாது. கல் நெஞ்சம் படைத்தவர்கள். அவர்களிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்ப்பது என்பது ஏமாற்றத்தைத்தான் கொடுக்கும்.

 

நீட் தேர்வு வேண்டாம் என்று ஏற்கனவே பேசியவரை வைத்துக்கொண்டு நீட்தேர்வு உள்ள குறைகளைக் கண்டறிய அவரை நியமித்தால் அவர், வேண்டாம் என்றுதானே சொல்வார் என பாஜக தலைவர் ஹெச்.ராஜா கேட்டிருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

 

இவர் தனக்கு வந்த 85 ஆயிரம் மின்னஞ்சல்களையும், கடிதங்களையும் வைத்துக்கொண்டு பேசுகிறார், பலர் நேரடியாக வந்து நீட் தேர்வு கொடுமைகளை தன்னிடம் தெரிவித்ததை அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த அறிக்கை முறையாக உருவாக்கப்பட்டுள்ள ஒன்று. ஏதாவது சந்தேகம் இருக்கும் பட்சத்தில் அறிக்கையை முழுவதும் படித்து யாரும் தெரிந்துகொள்ளலாம். ஏ.கே ராஜன் மிக நேர்மையான நீதிபதியாக இருந்தவர். அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், நான் உணர்ச்சிவசப்பட்டு எந்த தீர்ப்பையும் இதுவரை வழங்கியதில்லை என்று, எனவே அவர் கூட இருந்தவர்களும் மருத்துவத் துறையிலிருந்தவர்கள், மாணவர்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். எனவே குறைசொல்லியே பழக்கப்பட்டவர்களை நாம் திருத்த முடியாது.